POST: 2015-09-02T08:29:36+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-15`

பழங்காலத்தே பண்ணை இசைத்தோர் `பாணர்` என்று அழைக்கப்பட்டனர். இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூவகையினர் இருந்த தாகவும் தெரிகிறது.

‘‘குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கையும்’’
(இந்திர, 35 – 7)
என்ற சிலப்பதிகாரக் குறிப்பிலிருந்து குழலிலும் யாழிலும், குரல் முதல் ஏழு சுரங்களையும் குற்றமின்றி இசைத்த பாணர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் கரையில்லாத வளமொடு வாழ்ந்தனர்;
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் கொண்டோராகத் தமிழ் மக்கள் பாணர்களைப் போற்றினர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினராகிய மதங்க சூளாமணியாரைக் கொண்டு இராச இராச சோழன் (985 – 1014) திருமுறைகளுக்குப் பண் வகுத்தான் என்றறிகிறோம்.

தேவாரத் திருமுறைகளை நாள்தோறும் கோயில்களில் ஓதுவதற்கு நாற்பத்தெட்டுப் பிடாரர்களுக்கு (ஓதுவார்) பல்வேறு நிவந்தங்கள் அமைத்துத் தேவார இசை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுச் சாசனங்களும் காட்டுகின்றன. இக்கல்வெட்டில் காணப்படும் `பிடாரர்கள்` என்ற சொல் ஓதுவார்களைக் குறிக்கும்.

பிற்காலத்தில் கோயில் சார்ந்த மடங்களிலும் தேவாரப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு ஓதுவார் மரபு காக்கப்பட்டது. இவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனம், தரும்புர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் முதலிய தமிழாதீனங்கள் மரபு வழியாகத் தேவார இசையை இன்றளவும் காத்தும் கற்பித்தும் வருகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *