தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-13`
தாரம்` என்றால் `முதல்` என்று பொருள். இது மிகப் பழமையான சொல் ஆகும். இப்பண்ணே ஏனைய இராகம் காண ஆதாரமாயிருந்ததால் `ஆசான் திறம்` எனப்பட்டு, இதுவே பின்னர்க் காந்தாரம் (க+தாரம்) என்றாயிற்று. இந்த காந்தாரப்பண், மோகன இராகத்தோடு இயைந்தது என்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் கூறியது நினைவிற்கொள்ளத் தக்கது.
ஆனால், நடைமுறையில் காந்தாரப் பண்ணிலமைந்த பாடல்கள் நவரோசு இராகத்தில் பாடப்படுகின்றன. இவ்வகைப்பட்ட இராக வேற்றுமைகளையெல்லாம் மேலும் நுணுகி ஆராய வேண்டுவது இன்றியமையாத ஆய்வுப்பணியாகும்.
நூற்று மூன்று பண்களையும் பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாடாகக் கண்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
இப்பண்களின் உருவங்களனைத்தும் அந்தந்த நிலங்களில் பாடிய இசை முறையை அடியொற்றியவையே. எனவே, அந்தந்த நிலப்பகுதியின் வழக்கிலுள்ள மரபுவழிப்பட்ட பாடல்களை அந்தந்த நிலத்துப் பண்களோடு இணைத்து ஆராயும்போது 103 பண்களனைத்தின் உருவங்களையும் அறிய வாய்ப்பிருக்கிறது.
தேவாரப் பண்ணடைவு .- அபயகுல சேகர சோழர் தேவாரத் திருமுறைகளை எங்கும் தேடி அகப்படாமல், பின்னர்த் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியின் உதவியால் தில்லைத் திருக்கோயிலில் கண்டெடுத்தார் என்றும், பின்னர் அவை ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டன என்றும், திருவெருக்கத்தம்புலியூர் வல்லி ஒருத்தியார் பண்ண்டைவு பாடக்கேட்ட பின்னர்க் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார், திருமுறை கண்ட புராணத்தின் பண்களையும் அவற்றிற்குள்ள கட்டளைகளையும் விளக்கமாகக் கூறினார் என்றும் அறிகிறோம்.

Add a Comment