தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-10
காலைப் பண் மருதம்; மாலைப்பண் செவ்வழி. இந்த முறை மறந்து காலையிற் செவ்வழியையும் மாலையில் மருதத்தையும் பாடுகிறார்களே! அருந்திய விருந்தால் பொருந்திய பண்ணை மறந்தனரோ என புரவுக்கடன் பூண்டவண்மையைப் புகழ்ந்தார்.
காலக்கோட்பாட்டால் அடங்கன் முறைப்படி பகல், இரா, பொது என்ற காலப்பாகுபாடு முறையாகப் பின்னாளில் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனாலும் பண்ணிசைத் திரிபு மயக்கத்திற்கு ஆட்பட்டது.
இலக்கியத்தில் பண்களைப்பற்றிய குறிப்புகளைப் பலவாறாக அறியலாம். ‘’நைவளம் நவிற்று மொழி’’ என்றார், கம்பர்.
நைவளம் என்ற பண்ணிலக்கணத்தை அறிந்தாலன்றோ இன்னோசையென உரை மிழற்றும் சானகியாரின் இயன்மொழியை நாம் உணர முடியும்? இலக்கிய நோக்கில் இசையையும், இசைப்போக்கில் இலக்கியத்தையும் பண்டை நாளில் இயைபுபடுத்தினர்.
நூற்று மூன்று பண்களில் இசைக்கப்பெற்ற தேவாரப் பாடல்கள் நமக்கு இப்போது கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்தவை 23 பண்களே. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இசையறிஞர் தெலுங்கில் 4,000 பதங்களுக்கு (உருப்படிகள்) மேல் இயற்றினாராம். ஆனால், அவர் பயன்கொண்ட இராகங்களெல்லாம் 40 இராகங்களுக்குள்ளேயே அமைந்தன. அவைகளும் ரக்தி இராகங்களே (உணர்வுள்ள, உயிருமுள்ள இராகங்கள்) நமக்குக் கிடைத்த தேவாரப் பண்களும் ரக்தி இராகங்களாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add a Comment