POST: 2015-08-28T15:20:45+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-9

அளவையானும் மாத்திரையானும் நிறுத்தி எண்ணும் முறைப்படி பாணன் இசைத்த பண்ணினிமையிலும், புதுவதாகத் தாமே இயற்றிய திறம் (ஐந்திசைப்பண்) என்னும் தீம்பண்ணைக் காட்டிலும், திருமணத் தலைநாளில் தலைவன் காட்டிய அன்பு மேலும் மிகுந்து திகழும் நிலையில் தலைவன் என்னைப் பாராட்டி வருகிறான் என்று, உள்ளம் மகிழ்ந்து பாராட்டுகிறாள். இசைத்திறமே இதற்கு உவமையாகிறது. இசைத்திறத்தை நுகரும் தலைவியின் மனத்தை வியப்பதா இல்வாழ்க்கையின் அறத்திறத்தை நயப்பதா என நாம் இங்கு மருள்கிறோம்.

பாடும் காலங்களுக்கேற்றாற்போல், பகற்பண்கள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என்று வகைப்படுத்தப்பட்டன. சங்க காலத்தில் இப்பண்களைப் பாடுவதில் பாணர்களும் முறை மயங்கியதாக வன்பரணர் பாடி மகிழ்கின்றார்.
‘’நள்ளி வாழியோ! நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மையானே.’’ (புற. 149)
என்று பாடினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *