இந்தியப் பண்பாடு-6
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
நண்பர்களே! நகைச்சுவையாக ஒன்றைச் சொல்ல விழைகிறேன். அமெரிக்க நாட்டிலிருந்து வந்த ஒருவர் தமிழ் படிக்கவந்தார்; வந்தவர் என்ன சொன்னார்? உங்கள் நாட்டுப் பண்பாட்டிற்கேற்ப எனக்கு உணவு படையுங்கள் என்றார். நான் அதற்கென்ன, படைக்கலாமென்று சொல்லி வீட்டில் ஒரு மணையை இட்டு அந்த மணைக்கு எதிரே ஒரு வாழை இலையை விரித்து வையுங்கள் என்று கூறியிருந்தேன். அவருக்கு நமது பண்பாட்டைக் காட்டலாமென்று நினைத்து நான் போய்க் கையைத் துடைத்துக்கொண்டு வருவதற்குள் அவர் விரித்திருந்த வாழை இலையில் அமர்ந்துவிட்டார். ஏன் அப்படி நடந்தது என்றால், அவர்களுடைய பழக்கம். அவர்களுக்கு உண்ணுகின்ற முறை எப்போதுமே சற்று மேலே ஒரு மேசையில் தான் இருக்கும். நாம் உண்ணுகின்ற பழக்கம் எப்போதும் குனிந்து எடுத்து உண்ணும் பழக்கமாகும். இப்படிப் பழக்க வழக்கங்கள், பல மாறுதல்களைக் கொண்டன. எனவேதான் நாம் நம்முடைய இலக்கியங்களை, பழமையானவர்களை, நம்முடைய தலைமுறையினர்களையெல்லாம் எண்ணிப்பார்த்து விலக்க வேண்டியவற்றை விலக்கிக் கொண்டு, விளக்க வேண்டியவற்றை விளக்கிச் சொல்லியாக வேண்டும். பிறகு ஆராய்ந்து பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக அமைக்க வேண்டுமென்பதுதான் பண்பாட்டுக் காவலர்களின் பணியாகும்.

Add a Comment