POST: 2015-07-03T09:36:36+05:30

இந்தியப் பண்பாடு-5

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

அண்மையில் நான் ஒரு நூல் படித்தேன். கொஞ்சம் அச்சமாக இருந்தது! அறிவியலால் உலகமெல்லாம் ஒன்றாக அமையவேண்டும் என்ற கருத்து உருவாகும்போது அந்தந்த நாட்டினுடைய பண்பாடு குறையும். அவரவர் பேசும் மொழியின் பெருமிதம் குறையும், ஒருவித கலப்புப் பண்பாடு உருவாகும். காரணம், காலையிலிருந்து மாலை வரை நம்முடைய வாழ்க்கையில் நாம் எத்தனை நாடுகளின் கண்டுபிடிப்புகளோடு உறவுகொள்கிறோம் என்று எண்ணிப் பார்க்கலாம். நாம் உடுத்தும் உடை, உண்ணுகிற முறை, படிக்கிற படிப்பு, பயன்படுத்தும் பொருள், நாம் அமர்ந்திருக்கும் முறை என வாழ்க்கையில் கையாள்கின்ற நடைமுறைகளையெல்லாம் ஆராயும்பொழுது நம்மை அறியாமலே முப்பது, நாற்பது நாடுகளின் இயல்புகள் நம்மோடு கலந்திருப்பதை அறியலாம்.

காலையில் நாம் காப்பி அருந்துகிறோம் என்று தொடங்கினாலே பிரேசில் நாட்டில் முதன் முதலில் தொடங்கிய காப்பிப் பயிர் அல்லவா என்ற கருத்து உருவாகிறது. அதை எடுக்கின்ற பீங்கான் குவளைகளைப் பார்க்கிற போது ஓகோ இது சீன நாட்டுப் பீங்கானோ என்ற கேள்வி எழுகிறது. உண்ணுகிற முறையைப் பார்க்கிற போது மேசையில் இருந்து உண்ணுகிற பழக்கத்தை நாம் வைத்துக்கொண்டிருந்ததில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *