இந்தியப் பண்பாடு-3
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
இன்னும் சொல்வதென்றால் nobility, magnanimity என்றெல்லாம் பாராட்டிச் சொல்கின்றோம். எனவே இந்த இரண்டு சொற்களைக் காணும்போது நாகரிகம் மிகுந்துள்ள வாழ்க்கை, பண்பாடு பரிமளிக்கும் மனமேம்பாடு என இரண்டாகக் கொள்ளலாம்.
உலகிலுள்ள நாடுகளைக் கருதும்போது நாகரிகம் மிகுந்த நாடுகள் பல உள்ளன. எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அறிவியலின் வளர்ச்சியாகப் பெற்று மிளிரும் நாடுகளையெல்லாம் நாகரிக நாடுகள் என்று சொல்வதில் பிழையில்லை.
அமெரிக்க நாட்டை நாகரிக நாடு என்று சொல்வதில் எந்தக் குற்றமும் இல்லை. காரணம் வளங்கள்; திரும்பிப் பார்க்கின்ற இடங்களிலெல்லாம் வசதிகள்; மக்கள் வாழ்க்கையில் மிளிரும் செல்வச் செருக்கு மிகுந்துள்ளது. ஆனால், பண்பாடு என்று நாம் எடுத்துச் சொல்வதென்றால் நமக்குத் தயக்கம் நேர்கிறது. அதனால் நாகரிக நாடுகளைக் குறைவாகச் சொல்கிறோம் என்பதில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித மனம் ஒரு பழக்கவழக்கத்தில் தோய்ந்துள்ளது. ஐயாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடம் மரபாக மலர்ந்த கதைச் செல்வங்கள், சுவடிகள், எண்ணிவைத்த அறிஞர்களின் கருத்துக்கள் தொடர்ச்சியாக மெல்ல மெல்லத் தங்கிப் படிந்து மக்கள் மனத்தில் அமிழ்ந்துள்ளதென்றால் அதை நாம் பண்பாடு என்று அழைக்கிறோம்.

Add a Comment