POST: 2015-06-27T20:06:33+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்

என்னை நானே சேக்ஸ்பியர் வயத்தன் என்று சொல்லிக்கொள்வதுண்டு. (வயத்தன் என்கிற தமிழ்ச்சொல்லை Shakespearaholic என்கிற ஆங்கிலச் சொல்லின் aholic என்கிற அசைக்கு இணையானதாகக் கொண்டால்) ஒருவிதத்தில் நானும் வின்சென்ட் சர்ச்சிலைப் போன்றவன் தான். அவர் நேர்மையான பெருமிதத்துடன் ஒருமுறை குறிப்பிட்டார், பிள்ளைப் பருவத்திலிருந்து ‘உண்டியலில் சில்லரைகளைச் சேர்ப்பதைப் போல’ சேக்ஸ்பியரின் சொற்றொடர்களைத் திரட்டித்தான் ஆங்கிலப்புலமை பெற்றதாக! சற்றேறத்தாழ எனக்கும் அது பொருந்தும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு எடுத்துக்காட்டு.
சென்னை கடற்கரைச் சாலையில் ஆங்கிலேய அறிவியல் மேதை சி.எஃப். பாவெல்லுடன் நானும் எனது நெருங்கிய உறவினரும் (uncle என்கிற ஆங்கிலச் சொல் சித்தப்பாவையும் மாமாவையும் குறிக்கும் என்பதால் தமிழாக்கத்தில் நெருங்கிய உறவினர் இடம்பிடித்துக் கொண்டார்) பயணித்துக் கொண்டிருந்தோம். அவருக்கு அப்பொழுது தான் மேஸான் அணுவியற் கூறைப் பிரித்தெடுப்பது தொடர்பான ஆய்விற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. விண்வெளியில் மேஸானின் இருப்பினை ஆய்ந்தறிந்து அது தொடர்பான கோட்பாடுகளை வகுத்தமைக்காக ஜப்பானிய இயற்பியல் மேதை ஹிடேகி யுகாவாவிற்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. உரையாடலின் போது தற்செயலாக என்னை ‘சேக்ஸ்பியர் அடிமை என்று எனது உறவுக்காரர் குறிப்பிட்டார். பாவெல்லின் கண்கள் உடனே பளிச்சிட்டன. தனது இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவர் சேக்ஸ்பியருடைய பதினான்கடிச் செய்யுள் ஒன்றிலிருந்து ஒதத்தொடங்கினார்; ‘‘பளபளக்கும் உலோகம் என்ன,
பருத்திருக்கும் பாறை தான் என்ன,
திணிந்திருக்கும் மண் தான் என்ன,
பரந்திருக்கும் கடல் தான் என்ன,
நிலையாமைக் காலன் தானே
அனைத்தையும் வென்று நிற்பான்!
அவனுடைச் சீற்றம் முன்னே
மலரினும் மெல்லிதான
அழகெனும் பேதையாலே ஆவதுதான் என்னே?’’
சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென நிறுத்திக் கொண்டார். செய்யுளின் எஞ்சிய பகுதியை அவரால் நினைவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. நான் பற்றிக் கொண்டேன். மொழியத் தொடங்கினேன்;
‘‘தவிடுபொடியாகத் தாக்கித் தகர்க்கவல்ல
காலனின் கொடும்பிடியில்
ஓ, இளவேனில் மலரேந்தும்
மதுமணம் தான் என்னாகும்?
பொருதவொண்ணாக் குன்றுகளும்
நிலைகுலையும் போதினிலே
தகர்க்கவொண்ணாக் கோட்டைகளின்
எஃகுக் கதவுகளும் சிதையுமன்றோ?
ஐயோ, நினைத்தாலே குலைநடுங்கும்!
அந்தோ, காலக்கருவூலம் ஈந்த
காலத்தின் அரும்பெறலைக்
காப்பாற்றி வைப்பதெங்கோ?
விரைந்ததிரும் இருங்கழலை
நிறுத்தவல்ல கரம் தான் எங்கே?
அழித்தாலும் செழித்தாலும்
தடுத்திடுவார் யாரிங்கே?
எவருமில்லை! ஒருவேளை
இந்த விந்தையிடம் வீறு உண்டோ?
கரிய மையில் என் காதல்
இன்னமும் பளிச்சென ஒளிர்ந்திடுதே!’’
பாவெல் திகைப்பும் வியப்பும் கலந்த பார்வையை என் மீது வீசினார். புனிதமெனப் போற்றப்படும் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்டு கல்கலைக்கழகங்களில் கூட இத்துணை சரளமாகவும் எவ்வித உதவியுமின்றியும் சேக்ஸ்பியரை மனப்பாடமாக ஒப்பிக்கவல்லார் எவருமில்லை என்று வியந்தார். அத்துடன், அவருடையதும் யுகாவாவினுடையதுமான சாதனைகள் சேக்ஸ்பியரின் கவிதை முன்னே பொருளற்றவையாக மங்கி மறைந்திடுவதாகவும் குறிப்பிட்டார். அவருடைய பார்வையில் சேக்ஸ்பியரின் கவிதைகள் மனித அறிவாற்றலின் சாதனைகளின் உச்சம்!
பாவெல்லைப் போன்றதொரு மாமனிதரிடம் பாராட்டுப் பெறும் பேறு பெற்றவன் என்று என் முதுகில் தட்டிக்கொண்ட போதிலும் சேக்ஸ்பியரைப் பற்றிப் பேசிய பொழுது பாவெல்லினுடைய தன்னடக்கம் தான் பெரிதும் போற்றத்தக்கது. அறிவார்ந்த தேடலுக்குரிய பல்வேறு புலங்களில் ஆளுமை செலுத்துகின்ற மாமனிதர்களின் தகைமையினை நானறிவேன். அவர்களுடைய சாதனைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை.ஆனால், சேக்ஸ்பியர் என்று வரும்பொழுது அனைத்து ஒப்புமைகளும் மறைந்துவிடுகின்றன.
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் மேத்யூ ஆர்னால்டு இக்கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார்,
‘‘ஏனைய கவிஞரெல்லாம்
எமது கேள்விகளைக் கவனித்தில் கொள்கின்றனர்;
நீங்கள் கவலைப்பட்டதில்லை!
நாங்கள் கேட்கிறோம், கேட்கிறோம்,
கேட்டுக்கொண்டே இருக்கிறோம்,
நீங்கள் புன்னகைக்கிறீர்கள்,
அதிலும் கலை மிளிர்கிறது!’’

‘‘அவருடைய பேராண்மை
விண்மீண்களின் மகுடங்களைப் பறித்தன!
ஆர்ப்பரிக்கும் பெருங்கடல்மேல்
அவருடைய விரைந்ததிரும் பாதச்சுவடுகள் பதிந்தன!
விண்ணுலகத்தின் விண்ணுலகினைத்
தனது வசிப்பிடமாகக் கொண்டவர்!
கருமேகக் கூட்டங்களை மட்டுமே
தனது அடித்தளத்தின் எல்லையாக விட்டுவைத்திருந்தார்!
கவ்விப்பற்ற எத்தனித்த காலதேவன்
களைத்துச் சுருண்டுவிட்டான்!
விண்மீன் கூட்டமும் கதிரவனின் கற்றைகளும் கூட
உங்களைக் கண்டறிந்ததில்லை!
தானே கற்று, தானே ஆய்ந்து, தானே மதிப்படைந்து,
தன்னைத் தானே காத்து நிற்பவர்!
எவருக்கும் புரிபடாத புதிராக
இந்தப் பூமியில் உலவினார், அதுவே அவருடைய சிறப்பு!
வலிகள் அனைத்தையும் சாவறியா ஆர்வத்தையும்
தாங்கி நின்றார்!
அனைத்துவகைத் தளர்ச்சிகளும் வலுவிழந்தன;
அனைத்துவகைத் துன்பங்களும் மண்டியிட்டன;
நெறித்ததிர்ந்த வெற்றிப் புருவத்தில்
தமது ஒற்றைக் குரலைக் கேட்டன!’’
மேற்கண்ட பாடலில், ஆர்னால்டு, சேக்ஸ்பியரிய மாமேதை பியர்செய்ல் லோகன் ஸ்மித்தைப் போலவே, ஏனைய அறிஞரெல்லாம் ‘எமது கேள்விகளைக் கவனத்தில் கொள்ளும் பொழுது’, அதாவது, எமது மதிப்புரைகளை, தீர்ப்புகளை எதிர்நோக்கும் பொழுது, சேக்ஸ்பியர் ஒருவர் தான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, அதாவது, கேள்விகள், பகுப்பாய்வுகள், கூர்ந்தாய்வுகள், தீர்ப்புகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
சேக்ஸ்பியர் பிறந்த மண்ணிலேயே தோன்றிய பென் ஜான்சனைக் காட்டிலும் சிறப்பாகப் பிறிதொருவர் சொல்லிவிட இயலாது. அவருடைய எழுத்தோவியம்;
‘‘காலத்தின் ஆன்மா! பாராட்டு, பேருவகையின் திருவுருவம்!
நமதுலக மேடையின் விந்தை!
சேக்ஸ்பியரே, மீட்டெழுவாய்!
சாசருடனோ, ஸ்பென்சருடனோ, பீமோன்ட்டுடனோ
உனைக் கிடத்த நான் ஒப்பவில்லை!
மேலும் சிறந்ததோர் உறைவிடம் உனக்கு வேண்டும்!
கல்லறையல்ல; நினைவாலயம் நீ!’’
அவர் மேலும் வியந்துரைத்தார்;
‘‘செருக்குமிக்க கிரீஸ் அறிஞருள்ளும்,
பீடுமிக்க ரோமாபுரி மேதையருள்ளும்
ஒப்புவமை கொள்ள இயலாத
தனிப்பெரும் தகைமை உன்னுடையது!
புவிக்கு அனுப்பப்பட்டாயா, அல்லது
சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்தாயா?
பிரிட்டனே, வெற்றிமுரசு கொட்டு!
பெருமிதத்துடன் இந்த உலகுக்குக் காட்டிக் கொள்வதற்கு
ஒருவருண்டு உனக்கு!
ஒட்டுமொத்த ஐரோப்பாவும்
மதிப்பளிக்கக் கடன்பட்டிருக்கும் ஒருவர்!
அவர், ஒரு குறிப்பிட்ட காலம் கட்டும்
கட்டத்திற்குக் கட்டுப்பட்டவரல்ல;
காலகாலத்திற்கும் உரியவர்!
கிரீஸையும் ரோமாபுரியையும் பென் ஜான்சன் குறிப்பிட்டுள்ள விதத்தைக் கவனியுங்கள். சேக்ஸ்பியரைப் போற்றிப் பரவும் பரவசப் போக்கிலே ஹோமரையும், விர்ஜிலையும், சாக்ரடீஸையும், அரிஸ்டாட்டிலையும் தனது இரண்டே வரிகளில் புறந்தள்ளத் துணிந்துவிட்டார். இதனை சேக்ஸ்பியரைக் கற்றறிந்த மேதையர் நன்கு புரிந்து கொள்வர். அரிஸ்டாடிலைக் குறிப்பிடும் பொழுது அலெக்ஸாண்டர் போப் இப்படிச் சுட்டிக்காட்டினார்; அரிஸ்டாடில்களால் நிரம்பப் பெற்ற ஒட்டுமொத்த கோள்கள் கூட்டமும் இயற்கையின் ஒளிவெள்ளத்தைத் தொடர்ந்து செல்லும் ஒரு சேக்ஸ்பியருக்குச் சமமானது.
கோள்களின் இயக்கவிதிகளை வகுத்த புகழ்பெற்ற வானியல் வல்லுநர் கெப்லர் சேக்ஸ்பியரின் சமகாலத்தவர். வானியலைப் போலவே சோதிடக்கலையிலும் முனைப்புடன் ஈடுபட்டவர் என்பதை நிறுவுவதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாறாக, சேக்ஸ்பியர் சோதிடக்கலையை அறிவியல் போலி எனக்கருதி உரிய வெறுப்புணர்வுடன் கையாண்டார். ஜூலியஸ் சீசர் நாடகத்தில், அங்கம் 1, காட்சி 2இல், காஸியஸ் புருட்டசுக்குச் சொல்வதாக அமைத்துள்ளார்;
‘‘ஏனிந்த மனிதன் குதிரை மீது வீற்றிருக்கும்
அப்போலோவைப் போல
இருபுறமும் கால்போட்டு
இந்தக் குறுகிய உலகினில் பயணிக்கிறான்?
அதனுடைய கால்களுக்குக் கீழே
நடக்குமாறு சிறுமைப்பட்ட நாம்
சுற்றிலும் எட்டிப் பார்க்கிறோம்
மதிப்பிழந்த கல்லறைகளே கண்களில் படுகின்றன!
ஊழையும் உட்பக்கம் காண்போர் சிலர் மட்டுமே!
அன்பு நண்ப, புருடஸ்!
கோளாறு கோள்களில் இல்லை!
அவற்றிற்கு அடிமைகளாகிப் போன நம்மிடமே உள்ளது!
மீண்டும் லியர் மன்னன் நாடகத்தில், அங்கம் 1 காட்சி 2இல் எட்மண்ட மொழிகிறான்;
‘‘உலகத்தின் கைதேர்ந்த பகட்டு என்னவென்றால்
நாமெல்லாம் ஆருடப் பைத்தியங்களாக அலைவதுதான்!
பெரும்பாலான சமையங்களில்
நமது மிதமிஞ்சிய நடத்தைகளால்
நமக்கு விளையும் கேடுகளுக்கு
சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும்
குற்றவாளிகளாக்குகிறோம்!
நினைத்துக் கொள்கிறோம்;
நாம் கொடியவர்களாக இருப்பது உலகத்தின் தேவை!
வான்கோள்களின் கட்டாயத்தால் தான் முட்டாள்களானோம்!
கோள்களின் ஆதிக்கத்தால் தான்
கோழைகளாகவும், கொள்ளையர்களாகவும்,
குடிகேடர்களாகவும் இருக்கிறோம்!,
குடிகாரர்களாகவும், பொய்யர்களாகவும்,
பெண்டாளர்களாகவும் இருப்பதும் கூட
கோள்களின் செல்வாக்கிற்குக் கீழ்ப்படியும்
வற்புறுத்தலால் தான்!
நாமிழைக்கும் தீமைகளனைத்தும்
தெய்வீகத்தால் திணிக்கப்பட்டவை!
கயமைக்குத் தலைமையேற்கும் மனிதன்
தனது மடமை நிலைக்கு
விண்மீன்களைக் குற்றவாளியாக்கி விட்டு
வியத்தகு விதத்தில் விடுபட எத்தனிக்கிறான்!
என் தந்தை என் அன்னையைத்
தகாதமுறையில் புணர்ந்தபோது
ராகு வந்து கவ்விக்கொண்டதா?
துருவமீன் தான் சூழ்ச்சி செய்ததா?
அதன் தொடர்ச்சியாகத் தான்
நான் முரடனாக
சிற்றின்ப வேட்கையில் வீழ்ந்துவிட்டேனோ?
எனது முறையற்ற பிறப்பிற்கான நிகழ்வின் போது
கற்புமிக்க மீனொன்று கண்சிமிட்டியிருந்தால்
எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருந்திருப்பேனோ?’’
இது முரண்பாட்டின் உச்சமல்லவா? புகழ்பெற்ற வானியல் வல்லுநர் சோதிடக்கலையில் குருட்டு நம்பிக்கை கொண்டு அது தொடர்பான ஆவணங்களை ஆக்க முற்பட்ட. அதே வேளையில், ஒரு மாபெரும் கவிஞர் அறிவியல் ஆர்வம் குன்றாமல் அதனை அறிவியல் போலியென இகழ்கிறார்.
ஆங்கிலேயக் கவிஞர் சாமுவெல் டெய்லர் கோலெரிட்ஜ் இயற்றிய ‘‘தொன்மைக் கடலோடியின் இசைப்பாடல்’’ ஒன்று மட்டிலுமே அவர் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பின் அவருக்கு இரட்டை நோபல் பரிசுகளை ஈட்டிக் கொடுத்திருக்கும்! அவோன் கவிஞரைப் பற்றி அவர் ‘‘பல்லாயிரம் கோணங்களில் சிந்திக்கவல்ல சேக்ஸ்பியர்’’ (myriad minded Shakespeare)என்கிறார். எந்நாட்டவராலும், எக்காலத்தவராலும் ஒருமித்த குரலில் இம்மண் கண்ட மாமேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் சேக்ஸ்பியர் ஒருவர் மட்டிலுமே!
2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. சேக்ஸ்பியருடைய நாடக அரங்கம் அவருடைய காலத்தஜில் இருந்ததைப் போலவே வடிவமைக்கப்பட்டடிருந்தது. அது ஒலிம்பிக் கிராமத்தின் முகாமையான ஈர்ப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. சேக்ஸ்பியருடைய நினைவாலயங்களிலேயே மெய்மை மிளிர்ந்த காட்சியாக விளங்கியது. அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த கருவூலங்களுக்கிடையே, நெல்சன் மண்டேலா ரோப்பென் தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அவர் படித்த சேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடக நூலின் படியொன்று அவருடைய நினைவுக்குறிப்புகளுடன் வைக்கப்பட்டிருந்தது.
நியூட்டன், டார்வின், சர்ச்சில் ஆகியோரைப் பற்றிய குறிப்பெதுவும் அங்கே காணப்படவில்லை. இங்கிலாந்தினுடைய மாண்புமிகு மைந்தனான சேக்ஸ்பியருக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக இலண்டன் அதனைப் பற்றிக் கொண்டுவிட்டதாகவே தோன்றி யது. பிரிட்டன் தனது வரலாற்றின் மாண்பமைந்த காலக்கட்டத்தின்போது இங்கிலாந்தின் அறிவாற்றலின் ஒப்பில்லா மரபுவழி வைப்பாக உலகுக் காட்டுவதற்குத் தனித்தகைமை வாய்ந்தவராக, நியூட்டனோ, டார்வினோ, சர்ச்சிலோ அல்லது வேறு எவருமோ அல்ல, சேக்ஸ்பியர் மட்டுமே விளங்கினார். இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் எனும் நாடகத்திலுள்ள சேக்ஸ்பியரின் சாகாவரம் பெற்ற வரிகளை நினைவுகொள்ளுங்கள். கௌந்த்தின் ஜான் இங்கிலாந்தைப் புகழ்வதில் ஆழ்ந்திடும் பேரானந்தத்தைப் பாருங்கள்;
‘‘பீடுமிக்க பூமியே! மார்ஸ் தேவதையின் இருப்பிடமே!
விண்ணுலகின் மாற்றான மற்றொரு ஈடென் தோட்டமே!
ஊடுருவலுக்கும் போர் எனும் கொடிய கரத்திற்கும் எதிராக
இயற்கை தனக்குத் தானே கட்டிக் கொண்ட
தகர்க்கவொண்ணாக் கேட்டையே!
மகிழ்ச்சிமிக்க மக்களை ஈன்றெடுத்த
சின்னஞசிறு உலகே!
வளங்குன்றிய நாடுகளின் காழ்ப்புக் கண்படாமல்
அரண்மதிலாகவும் அகழியாகவும் பாதுகாப்புப் பணியாற்றும்
வெள்ளிப் பெருங்கடல் நடுவே பதிக்கப்பெற்ற
விலைமதிப்பற்ற அரியவகை மாணிக்கமே!
இந்நிலத்துண்டு, இந்நிலப்பரப்பு, இந்தநல்லாட்சி,
இந்த இங்கிலாந்து அனைத்துமே பேறு பெற்றவை!
தமது மரபின் மானம் காக்கும் மருட்சியும்
பிறப்பால் புகழும் கொண்ட
மாமன்னர்களைப் பெற்றெடுத்த கருவறை;
பேணிவளர்த்த செவிலித்தாய்…!
அருவியெனக் கொட்டும் உருவகப் பெருக்கு! எந்தவொரு கவிஞனும், எந்தவொரு மொழியிலும் எக்காலத்தும் இந்த விதத்தில் நாட்டைப் பாராட்டிப் பாடியதுண்டா? ஒலிம்பிக் போட்டிகளைக் காணக் குழுமியிருந்த மாபெரும் கூட்டத்தின் அனைத்துப்பிரிவினரும் அந்த மாபெரும் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நாடக அரங்கினைக் கண்டுகளித்ததாகச் செய்திகள் எட்டின.
சேக்ஸ்பியர் மீது நான் கொண்டுள்ள அளவுகடந்த ஈடுபாட்டினை, பிரிட்டனின் பலவண்ண வரலாற்றின் பாலோ, பேரரசாக உயர்ந்தது குறித்தோ, பிரித்தானிய நாகரிகத்தின் மேலெழுந்தவாரியான பெருமைகளின் பாலோ பெரும் மதிப்புக் கொண்டுவிட்டதாகக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பெரும்பாலும் அப்படித்தான் கருதப்படுகிறது. நான் சேக்ஸ்பிரை மட்டிலிலுமே ஆராதிக்கிறேன்.
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனையும், நீல்ஸ் போர், வெர்னெர் ஹெய்சென்பர்க், பால் டைராக் போன்றோரையும் கூட வியந்து போற்றியதுண்டு. ஹெய்சென்பெர்க்கினுடைய ‘உறுதியற்றதன்மை கோட்பாட்டைப் படிக்கும் பொழுது அல்லது டைராக்கினுடைய சமன்பாட்டைப் புரிந்து கொள்ளும் பொழுது ஒருவித குதூகலத்தில் ஆழ்ந்திருக்கிறேன். ஆனால், அதனை, ஹேம்லெட் நாடகத்தில் ‘இருப்பதா? மரிப்பதா?’ அல்லது, லியர் மன்னனுடைய ‘அன்பார்ந்த இயற்கையே, கேள்! பாசமிகு தேவதையே கேள்’ போன்றவற்றைப் படிக்கும் போது ஏற்படுகின்ற மயிர்க்கூச்செரியச் செய்யும் அனுபவத்துடன் ஒப்பிட முடியாது. மேலும், நான் டார்வினையும், பிரான்சிஸ் கிரிக், ஜிம் வாட்சனையும் போற்றுகிறேன். தகுதிமிக்கவை உயிர்த்திருக்கின்றன எனும் கோட்பாட்டையோ, டிஎன்ஏ மரபொப்புமை முறையையோ படிக்கும் பொழுது என்னுள் பேருவகை பூப்பது உண்மை தான். ஆனாலும், மேக்பெத்தில் ‘நாளையும் மறுநாளையும்..’’ ஜூலியஸ் சீசரில் ‘‘குதிரை மீது வீற்றிருக்கும் அப்போலோவைப் போல ஏனிந்த மனிதன் இருபுறமும் கால்போட்டு இந்த குறுகிய உலகில் பயணிக்கிறான்…’’ போன்ற சேக்ஸ்பியர் எழுத்தோவியங்களைப் படிக்கும் ஆழ்ந்துவிடுகின்ற பேரானந்தத்தை அனுபவிக்க முடிவதில்லையே! இத்தகைய மாபெரும் அறிவியல் மேதைகள் அனைவரும் அளப்பரிய திறம்படைத்த மதிப்பிற்குரிய மனிதர்கள் என்பதில் ஐயமில்லை. இங்கே ‘மதிப்பிற்குரிய’’ எனும் பதத்தை ஜூலியஸ் சீசரில் மார்க் ஆண்டனி பயன்படுத்தியலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும்! ஆனாலும், சேக்ஸ்பியர் என்று வரும் பொழுது நான் எல்லைகட்டிக் கொள்கிறேன்.
பெரும்பாலானோரைப் போல, அறிவியல் அறிவியல் தான்; இலக்கியம் இலக்கியம் தான்; இரண்டையும் ஒப்பிடக் கூடாது என்று என்னால் கூற இயலாது, வெறுமனே மடிந்து போகக் கூடி இரு வேறு புலங்களை ஒப்பிடும் போது அது உண்மையானது தான். ஆனால், சேக்ஸ்பியரைப் பொறுத்த வரை மட்டிலுமே, ஏனைய அனைத்து நிலையற்றவற்றிற்கும் மிக உயரத்தில் உள்ள அதி உன்னத மேதையைப் பற்றிப் பேசுகிறோம்!
மிகவும் புகழ்பெற்ற விண்வெளி இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பேரியக்க மண்டலம் குறித்த முழுமையானதொரு கொள்கையை வகுப்போமானால், மனிதனுடைய இருப்பின் நோக்கத்தையும் பேரியக்க மண்டலத்தையும் நன்கு புரிந்து கொள்ளலாம்; அதன் வாயிலாக கடவுளின் எண்ணத்தையும் அறிந்து கொள்ளலாம் என்று கூறினார். இக்கருத்து, அலெக்ஸாண்டர் போப் தன்னுடைய ‘‘மனிதனைப் பற்றிய கட்டுரை’’யில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அவர் வரைந்தார், ‘‘உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! இறையாற்றல் ஆய்ந்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணாதீர்! மனித இனத்தைப் பற்றிய முறையான ஆய்வு மனிதன் மட்டிலுமே!’’ பேரியக்க மண்டலத்தை இறையாற்றல் படைத்ததனால், மனிதன் அதில் தனது பங்கினைப் புரிந்து கொள்வதன் வாயிலாக படைப்பினுடைய ஒட்டுமொத்த நோக்கத்தையே புரிந்து கொள்வான் என்பது போப்பினுடைய திண்ணிய எண்ணம். போப் அத்தகைய குறிப்புரைகளை அளிப்பதற்கு 130 ஆண்டுகளுக்கு முன்பே சேக்ஸ்பியர் மட்டுமே சரியாக அதையே நிறைவேற்றினார். நமது இருப்பினுடைய ஒவ்வொரு பான்மையையும் ஆய்ந்தறிந்தார்; நமது வாழ்க்கையை ஆளுமை செலுத்துகின்ற ஒவ்வொரு உணர்வெழுச்சியையும் துருவி ஆய்ந்தார்; மனித வரலாற்றில் வேறு எவரைக் காட்டிலும் மிகச் சிறப்பாக மனித இயல்பினைப் புரிந்து கொண்டார்.
அதனால் தான் நான் சேக்ஸ்பியரைக் கற்கிறேன்;. அவருடைய எழுச்சியூட்டும் நாடகங்களிலிருந்து சிறப்பு வாய்ந்த பகுதிகளை நாள்தோறும் எனக்கு நானே ஒப்புவித்துக் கொள்கிறேன். அவற்றின் பால் இடையறாத தொடர்பு கொள்வது அவருடைய வல்லமைமிக்க மனத்தை ஊடுருவக் கூடிய அகப்பார்வையைப் பெறுவதற்கு இறுதியில் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.
மனித வாழ்க்கையின் தரத்தை அளவிடற்கரிய விதத்தில் மேம்படுத்தியுள்ள தூய அறிவியல், தொழில் நுட்பத்தினுடைய கற்பனைவளமிக்க ஆக்கங்களைக் குறைத்து மதிப்பிட முயல்வதாக நான் கூறியுள்ள கருத்துக்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாகாது. எந்தவொரு அறிவார்ந்த விவாதத்தை எடுத்துக் கொண்டாலும் அவை அவ்வளவு தாம்! அப்பொழுது கூட, தனித்ததொரு மனிதன் என்றோ இறையாற்றலென்றோ நான் குறிப்பிடுகின்ற வில்லியம் சேக்ஸ்பியரை நோக்கி நழுவிச் செல்வதைத் தடுக்கவியலாது. அவருடைய நாடகங்களிலும் கவிதைகளிலும் ஆழ்ந்து மூழ்கிப்போய்விட்டேன். ஏதேதோ கருத்துக்களுக்குச் செறிவூட்டுவதற்காக அவருடைய படைப்புகள் பொதிந்துள்ள எனது அறிவுப் பெட்டகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள்கள் வாயிலாகவே உங்களுக்குப் புலப்பட்டிருக்கக்கூடும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரேட்ஃபோர்டு அவோனிலிருந்த சேக்ஸ்பியரின் கல்லறை முன் நின்றிருந்த பொழுமு எனது மகன் நான் தன்வயமிழந்த நிலையை அடைந்து விட்டதாகக் குறிப்பிட்டான். ஆமாம், நான் அந்த நிலையில் தான் இருந்தேன். மேக்பெத், ஹேம்லெட் போன்ற நாடகங்களைக் கருத்தரித்த புரிந்துகொள்ளவொண்ணா மூளையின்- வாழ்க்கையின் ஆழங்களை அகழ்ந்தளந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட கண்களின்- பெற்றிமிக்க பாடல்களைத் தீட்டிய விந்தைமிகு கைகளின்- மக்கி மண்ணான புழுதி எனது காலடிக்குக் கீழே கிடந்தது என்கிற உணர்வு எனது உள்ளத்தின் ஆழம் வரை பாய்ந்து பேரெழுச்சியூட்டியது. தாமஸ் தி குயென்ஸி தன்னுடைய புகழ்பெற்ற ‘‘மேக்பெத்தில், வாயிற்கதவு தட்டப்பட்ட போது’’ என்கிற படைப்பில் தீட்டியிருக்கும் சேக்ஸ்பியர் குறித்த அவருடைய பெற்றிமிக்க வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளாதிருக்க இயலவில்லை; ‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் ஏனைய பெரும் புலவர்களால் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. அவை, பகலவனின் பேரொளிப் பிழம்பு, ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல், விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம், பொழிந்துறைந்த பனித்திரள், பெய்யெனப் பெய்த மழை, மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவளைகள், சுழன்றடிக்கும் சூறாவளி, பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை; புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும் பொழுது மட்டிலுமே மூளைக்கு எட்டக் கூடியவை!’’
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தனது ‘‘திண்டெர்ன் அபே’’ யில் கீழ்க்கண்ட ஆற்றல்மிகு வரிகளை யாக்கத் தூண்டிய அதே உணர்வெழுச்சிக்கு நானும் ஆட்பட்டேன்.
‘‘என்னுடைய இத்தனை கால வாழ்க்கையில்
முதன்முறையாக உணர முடிந்தது!
என்னை ஆனந்தமாக அலைக்கழிக்கக் கூடிய
ஏதோவொன்று இருக்கிறது!
உயர்ந்தெழுந்த எண்ணங்களுக்குள்ளே
உள்ளத்தின் ஏதோவொரு மூலையில்
என்னுள் இரண்டறக் கலந்துவிட்ட
உன்னதமானதோர் உணர்வு!
அதன் இருப்பிடமோ,
சென்றடையும் சூரியன்களின் ஒளிக்கோலம்!
உருண்டையாக ஒடுங்கிப் போன கடற்பரப்பு!
ஓயாதுலவும் காற்று!
நீல விசும்பு! மனிதனின் நிறைந்த மனம்!
ஓர் அசைவு, ஓர் எழுச்சி
சிந்திக்கவல்ல அனைவரையும்
சிந்தனைக்கான அனைத்துப் பொருண்மைகளையும்
உந்துகிறது!
அனைத்துப் பொருட்களூடேயும் உருள்கிறது!
அத்தகையதொரு மாமேதையினுடைய கல்லறையின் முன்பாக நின்றிருந்த பொழுது நான் அனுபவித்த உளஎழுச்சியினை விவரிப்பதற்கு வார்த்தைகள் கிட்டவில்லை. அது, பக்தனொருவன் பெரிதும் போற்றிப் பரவக்கூடிய, தொழுது துதிக்கக் கூடிய, விழுந்து வணங்கக் கூடிய தெய்வத்தின் முன் நிற்கும் பொழுது பெருக்கெடுக்க் கூடியதோர் உணர்வெழுச்சி!
சேக்ஸ்பியர் உன்னதமானதொரு மேதை. தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டக் காலத்தில் உருவாக்கப்பட்ட பூதாகரமான எந்திரங்களோ, பேரண்டப் பெருவெளியில் மனிதன் தனது எல்லை கட்டிய அறிவைக் கொண்டு துருவி அறிந்த அறிவாக்கமோ, கேட்கப்படாத மெல்லிசை என்று கிரீஸ் நாட்டுப் பழஞ்சி்ன்னங்களை கீட்ஸ் குறிப்பிட்டானே அதன் இனிமையோ, எல்ஜின் பளிங்குகளின் எழில்நலமோ, உள்ளத்தை உருக்கவல்ல பெத்தோவனின் இசையோ சேக்ஸ்பியரின் எழுச்சிமிகு பாடல்கள் முன்னே போட்டியிட்டு வெற்றிகொள்ள வல்லவை அல்ல! பன்னெடுங் காலத்திற்குப் பின்னர், மனிதயினம் மறைந்து நீண்ட காலம் கழிந்த பிறகு, ஏதேனும் அந்நிய நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் நமது எளிய புவிக்கோளத்திற்கு வருகைதர நேர்ந்தால், ஐன்ஸ்டினுடைய சார்பியல் கொள்கையையோ, டைரேக்கினுடைய குவாண்டம் இயந்திரவியலையோ, டார்வினுடைய பரிணாமக் கொள்கையையோ, கிரிக்கினுடைய இரட்டைச் சுழல் தத்துவத்தையோ, ஆன்மாவை உலுக்கும் சேக்ஸ்பியருடைய கவிதைகளைப் போல வியந்து போற்றப் போவதில்லை!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *