அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-9
இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் எனும் நாடகத்திலுள்ள சேக்ஸ்பியரின் சாகாவரம் பெற்ற வரிகளை நினைவுகொள்ளுங்கள். கௌந்த்தின் ஜான் இங்கிலாந்தைப் புகழ்வதில் ஆழ்ந்திடும் பேரானந்தத்தைப் பாருங்கள்;
‘‘பீடுமிக்க பூமியே! மார்ஸ் தேவதையின் இருப்பிடமே!
விண்ணுலகின் மாற்றான மற்றொரு ஈடென் தோட்டமே!
ஊடுருவலுக்கும் போர் எனும் கொடிய கரத்திற்கும் எதிராக
இயற்கை தனக்குத் தானே கட்டிக் கொண்ட
தகர்க்கவொண்ணாக் கேட்டையே!
மகிழ்ச்சிமிக்க மக்களை ஈன்றெடுத்த
சின்னஞசிறு உலகே!
வளங்குன்றிய நாடுகளின் காழ்ப்புக் கண்படாமல்
அரண்மதிலாகவும் அகழியாகவும் பாதுகாப்புப் பணியாற்றும்
வெள்ளிப் பெருங்கடல் நடுவே பதிக்கப்பெற்ற
விலைமதிப்பற்ற அரியவகை மாணிக்கமே!
இந்நிலத்துண்டு, இந்நிலப்பரப்பு, இந்தநல்லாட்சி,
இந்த இங்கிலாந்து அனைத்துமே பேறு பெற்றவை!
தமது மரபின் மானம் காக்கும் மருட்சியும்
பிறப்பால் புகழும் கொண்ட
மாமன்னர்களைப் பெற்றெடுத்த கருவறை;
பேணிவளர்த்த செவிலித்தாய்…!
அருவியெனக் கொட்டும் உருவகப் பெருக்கு! எந்தவொரு கவிஞனும், எந்தவொரு மொழியிலும் எக்காலத்தும் இந்த விதத்தில் நாட்டைப் பாராட்டிப் பாடியதுண்டா? ஒலிம்பிக் போட்டிகளைக் காணக் குழுமியிருந்த மாபெரும் கூட்டத்தின் அனைத்துப்பிரிவினரும் அந்த மாபெரும் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நாடக அரங்கினைக் கண்டுகளித்ததாகச் செய்திகள் எட்டின.

Add a Comment