POST: 2015-06-02T21:47:03+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-7

கோள்களின் இயக்கவிதிகளை வகுத்த புகழ்பெற்ற வானியல் வல்லுநர் கெப்லர் சேக்ஸ்பியரின் சமகாலத்தவர். வானியலைப் போலவே சோதிடக்கலையிலும் முனைப்புடன் ஈடுபட்டவர் என்பதை நிறுவுவதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாறாக, சேக்ஸ்பியர் சோதிடக்கலையை அறிவியல் போலி எனக்கருதி உரிய வெறுப்புணர்வுடன் கையாண்டார்.
ஜூலியஸ் சீசர் நாடகத்தில், அங்கம் 1, காட்சி 2இல், காஸியஸ் புருட்டசுக்குச் சொல்வதாக அமைத்துள்ளார்;

‘‘ஏனிந்த மனிதன் குதிரை மீது வீற்றிருக்கும்
அப்போலோவைப் போல
இருபுறமும் கால்போட்டு
இந்தக் குறுகிய உலகினில் பயணிக்கிறான்?
அதனுடைய கால்களுக்குக் கீழே
நடக்குமாறு சிறுமைப்பட்ட நாம்
சுற்றிலும் எட்டிப் பார்க்கிறோம்
மதிப்பிழந்த கல்லறைகளே கண்களில் படுகின்றன!
ஊழையும் உட்பக்கம் காண்போர் சிலர் மட்டுமே!
அன்பு நண்ப, புருடஸ்!
கோளாறு கோள்களில் இல்லை!
அவற்றிற்கு அடிமைகளாகிப் போன நம்மிடமே உள்ளது!

மீண்டும் லியர் மன்னன் நாடகத்தில், அங்கம் 1 காட்சி 2இல் எட்மண்ட மொழிகிறான்;

‘‘உலகத்தின் கைதேர்ந்த பகட்டு என்னவென்றால்
நாமெல்லாம் ஆருடப் பைத்தியங்களாக அலைவதுதான்!
பெரும்பாலான சமையங்களில்
நமது மிதமிஞ்சிய நடத்தைகளால்
நமக்கு விளையும் கேடுகளுக்கு
சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும்
குற்றவாளிகளாக்குகிறோம்!
நினைத்துக் கொள்கிறோம்;
நாம் கொடியவர்களாக இருப்பது உலகத்தின் தேவை!
வான்கோள்களின் கட்டாயத்தால் தான் முட்டாள்களானோம்!
கோள்களின் ஆதிக்கத்தால் தான்
கோழைகளாகவும், கொள்ளையர்களாகவும்,
குடிகேடர்களாகவும் இருக்கிறோம்!,
குடிகாரர்களாகவும், பொய்யர்களாகவும்,
பெண்டாளர்களாகவும் இருப்பதும் கூட
கோள்களின் செல்வாக்கிற்குக் கீழ்ப்படியும்
வற்புறுத்தலால் தான்!
நாமிழைக்கும் தீமைகளனைத்தும்
தெய்வீகத்தால் திணிக்கப்பட்டவை!
கயமைக்குத் தலைமையேற்கும் மனிதன்
தனது மடமை நிலைக்கு
விண்மீன்களைக் குற்றவாளியாக்கி விட்டு
வியத்தகு விதத்தில் விடுபட எத்தனிக்கிறான்!
என் தந்தை என் அன்னையைத்
தகாதமுறையில் புணர்ந்தபோது
ராகு வந்து கவ்விக்கொண்டதா?
துருவமீன் தான் சூழ்ச்சி செய்ததா?
அதன் தொடர்ச்சியாகத் தான்
நான் முரடனாக
சிற்றின்ப வேட்கையில் வீழ்ந்துவிட்டேனோ?
எனது முறையற்ற பிறப்பிற்கான நிகழ்வின் போது
கற்புமிக்க மீனொன்று கண்சிமிட்டியிருந்தால்
எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருந்திருப்பேனோ?’’

இது முரண்பாட்டின் உச்சமல்லவா? புகழ்பெற்ற வானியல் வல்லுநர் சோதிடக்கலையில் குருட்டு நம்பிக்கை கொண்டு அது தொடர்பான ஆவணங்களை ஆக்க முற்பட்ட. அதே வேளையில், ஒரு மாபெரும் கவிஞர் அறிவியல் ஆர்வம் குன்றாமல் அதனை அறிவியல் போலியென இகழ்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *