முனைவர் ஔவை நடராசன் உரை 2.5.2015
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்ப் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கப் படுகின்ற தலைவர் திருமா வளவன் ஒருவர்தான். தன்னுடைய பெயர் மட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தன்னுடைய தொண்டர்கள் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று தமிழ்த் தொண்டு செய்யும் பெருமை அருமைத் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களைத்தான் சாரும்.
அரசியல் தலைவர்களில் பெருமிதத்தோடு எண்ணிப் பார்க்கின்றபோது ‘செம்மொழி ஞாயிறு’ என்று சொன்னால் மொழி ஞாயிறு என்கிற புகழ்ப்பெயர் பெருந்தகை பாவாணர் அவர்களைத் தான் சாரும். பாவாணர் ஊட்டிய தனித்தமிழ் உணர்வுதான் அரசியல் உலகத்திலும் தமிழ் உணர்ச்சியை பெருக்கியது. அதே பெயரில் அந்த மொழி ஞாயிறு தலைமுறையைச் சார்ந்தவர்கள், அவருடைய தொண்டர்கள் என்கிற வகையில் அந்த விருது எங்களுக்கெல்லாம் வழங்கப்பட் டிருக்கிறது.
செம்மொழிக்கான ஒரு பெருமையைச் சொல்ல விரும்புகிறேன். தமிழில் ‘சாதி’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘மதம்’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘இந்து’ என்ற சொல் இல்லை. இந்த மூன்றும் இந்திய மொழிகள் எல்லா வற்றிலும் இருக்கின்றன. தமிழில் மட்டும் தான் இல்லை. இதிலிருந்து சமத்துவ உணர்வு யாருடையது, எந்த மக்களுடையது என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்.
ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், தமிழ்த் தென்றல் என்று திரு.வி.கவை அழைக்கின்றீர்களே அவர் தன்னுடைய பத்திரிகையை ‘நவசக்தி’ என்றும் ‘தேச பக்தன்’ என்றும் வைத்திருக்கிறார். நான், ‘விடுதலை’, ‘குடியரசு’ என்று பெயர் வைத்திருக்கிறேன். எது தமிழ் என்று கேட்டார். திரு.வி.க. மிரண்டுபோய், ‘நாங்கள் எல்லாம் தெரியாமல்தான் வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார். எனவே, தொடங்குகின்றபோதே தமிழ் உணர்ச்சி என்பது எப்படி தொடங்குகிறது என்றால், ஆதிக்கத்தை எதிர்க்கின்றபோதும் அடிமைப்படுத்துகிறவனின் கையை முறிக்கின்ற போதும்தான் துணிவு வரும். அப்படிப்பட்ட துணிவு வந்த நேரத்தில்தான் நூறாண்டுகளாக தமிழ் மொழியை ஒரு மொழியாகக் கருதாத வர்கள், வடமொழி இருக்க லாம், ஆங்கிலம் இருக்கலாம், தமிழ் எளிய மக்கள் பேசுகின்ற மொழிதானே என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் இருந் தார்கள். அரசாங்கத்திடம் சென்று அறிக்கை தந்தார்கள். ஆனால், நல்லவேளையாக அந்தப் பொய் வாதங்களெல் லாம் பொடிப்பொடியாகப் போனதன் விளைவாகத்தான் செம்மொழி என்கிற வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. செம்மொழி என்கிற பெருமிதத்தைப் பெற்றே தீரவேண்டும் என்று அந்த நாளில் எழுச்சித்தமிழர் உட்பட, கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் மைய அரசிடம் வாதாடி செம்மொழி என்கிற பெருமிதத்தைப் பெற்றார்கள்.
தமிழ் மொழியின் பெருமிதம் மட்டுமல்ல, தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற உணர்வுமட்டுமல்ல, எழுதுகின்ற எழுத்து ஒவ்வொன்றிலும்கூட தமிழ் எப்படி சிந்தமுடியும் என்பதற்கு தமிழ்மண்ணில் நீங்கள் எழுதுகின்ற கட்டுரைகள் சான்றாகும். தமிழ்மண் கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் பயன்படுத்து கின்ற சொற்கள் எல்லாம் வெறும் சொற்கள் அல்ல; வைரக் கற்கள். இப்படி, நீங்கள் ஊக்கத்தோடு தொடர்கின்ற தமிழ் உணர்ச்சிக்கு தமிழ் ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் அடிமைகள். நாங்கள் அடிமைகள் என்று சொன்னாலும்கூட அந்தக் கொடுமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். எங்களைத் தோழர்களாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் தோழமையோடு தமிழாசிரியர்களும் தோள் கொடுக்க எப்போதும் துணிவாக இருக்கிறார்கள். சிந்தனையாளர் அருமை நண்பர் இரவிக்குமார் அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளைக் காணும்பொழுது வியப்பாக உள்ளது. எப்படிப்பட்ட ஆழ்ந்த புலமையோடு எவ்வளவு அரிய நூல்களின் கருத்துக்களை யெல்லாம் அவர் திரட்டித் தருகிறார்.
தலைவர் திருமாவளவன் அவர்கள் மாணவராக இருந்தபாதே நான் பார்த்தவன். மாணவன் திருமாவளவன் அவர்கள் மாநிலக் கல்லூரியில் மாணவனாக இருந்து, மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்து, ஒரு இளைஞர் தமிழகத்தில் எப்படி எழுச்சித் தமிழராக வருவார் என்பதை, ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதைப்போல் அப்போதே பார்த்தோம். எனவே, நீங்கள் அப்போது மாணவர் தலைவனாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவராக இருப்பதைப் பார்க்கின்றேன். இது இன்னும் முடியவில்லை, இன்னும் பல நிலைகளில் நீங்கள் தலைவராக வரவேண்டும் என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.
நன்றி.
வணக்கம்.

Add a Comment