POST: 2015-03-09T20:37:48+05:30

அம்மூவனார்-
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

அம்மூவனார் என்னும் தொடரில் ‘அம்‘ என்பதை மற்றவர்களினின்று வேறு பிரித்தறிவதற்காகச் சேர்க்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டால், அஃது எக்காரணத்தால் அடைமொழியாக அமைந்தது என்பதை ஆராய்தல் வேண்டும். கவிதையில் வரும் சிறப்பான சொல், புலவரின் பெயருக்கு அடைமொழியாக வருவது உண்டன்றோ?
அதன்படி ‘அம்‘ என்ற சொல், கவிதை நயத்தோடும், சிறப்போடும் அம்மூவனார் (அம்மூவனார்) பாடியுள்ள எந்தக் கவிதையிலேனும் கையாளப்பட்டிருக்கிறதா என்று பார்த்தல் வேண்டும். அத்தகைய பாடலைக் கண்டுபிடிப்பது சிறிது வன்மையான செயலே, நற்றிணை 327-ஆம் பாடலில் ‘அம்‘ என்ற சொல் கவிதை நயத்தோடு வந்துள்ளது எனச் சிலர் கருதலாம். நற்றிணை 18ஆம் செய்யுளிலும், புறநானூறு 209-ஆம் செய்யுளின் பின்னுள்ள வாக்கியத்திலும் மூவனென்று ஓர் உபகாரியின் பெயர் வந்திருத்தலால் மூவனென்ற பெயரொன்று பண்டைக்காலத்தில் வழங்கி வந்ததென்று தெரிகிறது.இவர் பாடியவற்றுள் நற்றிணையில் 35ஆம் செய்யுளாகிய ‘பொங்குதிரை பொருத“ என்பதில் ‘துறைகெழு மாந்தை‘ எனவும் 394-ஆம் செய்யுளாகிய “யாரே யெலுவ“ என்பதில் “குட்டுவன் . . . . .கடல் கெழுமாந்தை“ எனவும். ஐங்குறு நூற்றில் 178ஆம் செய்யுளாகிய “தோளுங் கூந்தலும்“ என்பதில் ‘செங்கோற் குட்டுவன் தொண்டி“ எனவும், அகநானூற்றில் 10 ஆம் செய்யுளாகிய “வான் கடற் பரப்பின்‘ என்பதில் ‘வளங்கெழு தொண்டி‘ எனவும், குறுந்தொகையில் 163 ஆம் செய்யுளாகிய “யாரணங்குற்றனை“ என்பதில் …

‘பூழியர்‘ எனவும் , ஐங்குறு நூற்றில் 188 ஆம் செய்யுளாகிய “இருங்கழி‘ என்பதில் ‘கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை‘ எனவும் வந்திருப்பனவற்றால் தமிழ் நாட்டிலிருந்த முடி மன்னர்களுள் சேரனொருவனும், பாண்டியன் ஒருவனும் இவரால் புகழப்பட்டுள்ளார்கள் என்று மட்டும் தெரிகின்றதன்றி அவர்களுடைய சிறப்புப் பெயர் கூறப்படாமையால் இன்ன சேர அரசன் காலத்தினரென்றாவது, இன்ன பாண்டியன் காலத்தினர் என்றாவது இவரைக் கூறுதற்கிடமில்லை. அகநானூற்றில் 35 ஆம் செய்யுளாகிய ‘ஈன்று புறந்தந்த‘ என்பதில் ‘துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி‘ கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்‘ என்று வந்திருப்பதைக் கொண்டு இவர் பெண்ணையாற்றங்கரைக் கண்ணதாகிய கோவலூரில் இருந்தவனும், கடையெழு வள்ளல்களில் ஒருவனுமான மலையமான் திருமுடிக்காரியென்னும் சிற்றரசன் காலத்தினர் என்றும் நினைக்கப்படுகிறார். தமிழ் நாட்டரசர்களுள் சேரன், பாண்டியன் என்னும் முடியுடைவேந்தர் இருவராலும், திருக்கோவலூரையாண்ட காரியென்னும் வள்ளலாலும் ஆதரிக்கப் பெற்றவர்.முன்னரே குறித்தபடி சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டி நகரமும், அந்நாட்டின் கண்ணதாகிய மாந்தை நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொள்கைநகரமும், நடுநாட்டின் கண்ணதாகிய கோவலூரும் ஐங்குறு நூற்றிலும் பிற தொகை நூல்களிலும் இவராற் பாராட்டப் பெற்றிருத்தலின், இவர் அந்நகரங்களில் இருந்தவரென்றும் இவர் காலத்தில் அவைகள் மிக விளக்க முற்றிருந்தன வென்றும் கூறலாம். கபிலர், மாறோக்கத்து நப்பசலையாரென்னும் புலவர்கள் இவர் காலத்தினர் என்று ச…ொல்லுதற்கிடமுண்டு. சிறுபாணாற்றுப்படையில் ஒய்மானாட்டு நல்லியக் கோடன் என்னுந் தலைவன் பேகன் முதலிய கடையெழு வள்ளல்களுடைய ஈகைப் பாரத்தைப் பறித்தான் என்று கூறியதனால் அவர்களுடைய காலத்திற்குப் பிற்காலத்தானாகக்கூறிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர் அக்கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரியைப் பாடிய இவருடைய காலத்திற்குப் பிற் காலத்தவர் என்று சொல்லுவதற்கு, யாதோரைய முமின்று.

இவருடைய பாடல்களின் பொருளை உற்றுநோக்குங்கால் பெரும்பாலன நெய்தல் நிலவளத்தைப் பற்றிக் கூறுவனவாக இருத்தலின் நெய்தற்றிணை வளம் பாடுதலில் மிக்க வன்மையுடையவர் என்றும், அந்நிலத்திலேயே மிகப் பயின்றவரென்றும் இவர் எண்ணப்படுகிறார். ஐங்குறுநூறு கிழவற்குரைத்த 13-ஆம் பத்தில் தலைவி மிக்க இளமையுடையாள் என்பதற்கேற்ப அவளுடைய பேதைப்பருவ விளையாட்டுக்களிற் பலவற்றை அழகாகக் கூறியிருத்தல் படித்து இன்புறற்பாலது.

ஐங்குறு நூற்றின் இரண்டாம் நூறாகிய நெய்தல் இவர் பாடியிருத்தலும்,
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.

என்னும் ஐங்குறுநூற்றுச் சிறப்புப் பாயிர வெண்பாவும் இவர் இன்னராதலை வலியுறுத்தும். மேலெடுத்துக் காட்டிய இவருடைய பாடலால் மலை நாட்டின் கடற்கரையில் மாந்தை, தொண்டி என்பனவும், பாண்டிநாட்டின் கடற்கரையில் கொற்கை என்பதும் மலையமானாட்டில் கோவலூர் என்பதும் இவர் காலத்தில் சிறந்த நகரங்களாக இருந்தனவென்று தெரிய வருகின்றன. “பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்“ என அகநானூற்றில் பெண்ணையாறு இவராற் பாராட்டப்பட்டுள்ளது….

தலைவன் தன் நாட்டையும் கொடுத்துத் தலைவியை மணக்கத் துணிந்தனன் என்று தலைவியின் பெறற்கருமையை இவர் பாராட்டுகிறார். ஐங். 147, இக் கருத்தே அகநானூறு 280 –ஆம் செய்யுளிலும் வந்துள்ளது.

‘கடலினும் நட்புப் பெரிது‘ (184) எப்பொழுதும் மொழியத் தக்க சொற்கள். ‘மெல்லிய இனிய மேவரு தகுந‘ (குறுந். 306) ‘நல்கூர்த்‘ தோர்வயின் நயனில ராகுதல் தகாது‘ (குறுந். 327) என்பன இவர் எடுத்துக் காட்டும் சில நீதிகளாகும்.

ஐங்குறுநூறு தொண்டிப்பத்து முழுவதையும் ஒரு செய்யுளின் ஈற்றடியிலுள்ள சொற்களைக் கொண்டு அதற்கடுத்த செய்யுளை இவர் தொடங்ப் பாடியிருக்கும் நயம் படித்து மகிழ்வதற்குரியதாகும்.

குறுந்தொகையில் பலவிடங்களில் இவர் பெயர் அம்மூவன் என்றே காணப்படுகிறது.

இவர் பாடிய பாடல்களாக 127 பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் உள்ளன. அவை நற்றிணை-10, குறுந்தொகை – 11, ஐங்குறுநூறு இரண்டாம் நூறாகிய நெய்தல் செய்யுள்-100, அகநானூறு-6, 127 ஆம் அகச் செய்யுட்களின் ஆசிரியராகிய அம்மூவனார். அகத்தினைப் பாட்டெண்ணிக்கையில் இரண்டாமவராக இலங்குபவர் ‘புறத் தொழா மாந்தர்‘ என்பது போல, இவர் புறப்பாட்டு யாதும் பாடியதில்லை. வரலாற்றுக் குறிப்பு இவர் பாடல்களில் சாலச் சிறிது களவில் கற்பில் பலதுறை பற்றியும் பல மாந்தர்கள் பற்றியும் பாடலாக்கிய விரிவுச் சிறப்பு உடையர் அம்மூவனார். அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு என்ற சங்க அகத்தொகை நான்கே. இந்நான்கினும் இவர் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள என்பதும் ஒரு சிறப்பு.

கனவுப் பாடல் 82
கற்புப் பாடல் 45…
தலைவி கூற்று 56
தோழி கூற்று 43
தலைவன் கூற்று 17
பரத்தை கூற்று 10
நற்றாய் கூற்று 1

பிற்கால இலக்கியங்கட்குப் பல புதுவழி திறந்தவர் அம்மூவனார். அகத்திணை நிகழ்ச்சிகள் கோவையாக நிரல் படத் தொடுக்கப்படும் பெற்றியதன்று, இவ்வடிப்படை இலக்கணத்திற்கு இவர்தம் ஐங்குறு நூற்றின் தொண்டிப்பத்து (171-80) பெருமுரணாகும். இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம். இரந்து குறையுறல், வரைவு கடாதல் என்று களவின் ஒழுகலாறுகளை ஒரு பத்துப்பாட்டில் தொடர்ச்சியாகக் கூறுவர். ஒவ்வொரு தலைப்பில் பப்பத்துப் பாடல் யாப்பது என்று நூல் அமைத்துக் கொண்டமையால், இவர்க்குக் களவுக் கோவை பாடும் எண்ணம் முளைத்தது போலும். அவ்வெண்ணம் நன்கு மலரவில்லை என்பது களவிற்குச் சிறந்த உடன்போக்கு, அறத்தொடு நிலைத்துறைகளைப் பாடாமையாற் போதரும். தமிழில் கோவை ஒரு தனியிலக்கியமாகத் தோன்றி வளர்தற்கு ஐங்குறு நூற்றுத் தொண்டிக் கோவையே மூலம் என்று அறிக.

அகப்பொருட் கோவைக்கே யன்றி அந்தாதி யிலக்கியத்திற்கும் வழிகாட்டியவர் அம்மூவனார். கோவைபட அமைந்த இத்தொண்டிப் பாடல்களே அந்தாதிபடவும் அமைந்துள. இரு புதுமைக்கும் இடனாக ஒரே பத்துப்பாடல்களை யாத்தார் ஆசிரியர். சங்க விலக்கியத்தின் மொழிநடைக்கு மாறான இவ்விரு புதிய கூறுகளையும் ஐங்குறு நூற்றின் பழையவுரைகாரர் அன்றே கண்டு எழுதியுள்ளார்…

அம்மூவனார் நெய்தலறிஞர் இந்நிலையிலும் இரங்கற்பொருளே நெய்தலுக்கு உரியது எனினும், புணர்தல் இருத்தல் ஊடல் என்ற புறவுரிப் பொருள்களை நெய்தற் சூழ்நிலையில் வைத்துப் பாடியுளர்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்றெவனோ, (ஐங். 170)

என்பது கணவனது பரத்தொழுக்கம் பற்றித் தலைவி புலந்துகூறும் பாட்டு இது நெய்தல் நிலத்து மருதவொழுக்கம் கூறுவது. புணர்தலுக்கு மலைப்பாங்கும். ஊடலுக்கு வயலிடமும், இருத்தலுக்குக் காட்டுச் சார்பும் சூழ்நிலையாக அமைதல் வேண்டும் என்பது புலனெறி வழக்கம். இவ்வழக்கம் இலக்கியக் கற்பனைக்குச் சிறக்கும் என்பது கருதி நம் முன்னோர் வகுத்தனர். ஊடல் ஓரிடம் கூடல் ஓரிடம் நடை முறையில் இல்லை. இயலாது என்பது வெளிப்படை அம்மூவனார் இயல்புநெறிப் புலவர் போலும்! அவர் பாட்டுக்கு நெய்தல்வாழ் மக்களே பெரும்பாலும் தலைமக்கள் ஆதலின் எல்லா உரிப்பொருளுக்கும் களமாக ஒரு திணையையே கொண்டனர். பரத்தையைக்கூட “நெய்தலங் கண்ணி‘ (ஐங் 135) என்று குறிப்பர்.

மூவன் என்பது மூப்பன் என்றும் அழைக்கப்படலாம். இந்நாளில் மூப்பனார் என்பது சாதிப் பெயராக வழங்குகிறது. அம்மூவன் என அடையொடு இடம் பெறுதலால் இக்காலத்தில் அம்மு, திம்மு, திப்பு என்னும் பெயர்கள் மக்களுக்கு இடப்பெற்று வழங்கியது போலும் ! எனவே அம்மூவன் என்பதே இயற்பெயராகும் எனக் கொள்ளலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *