POST: 2015-02-27T19:14:06+05:30

அம்மூவனார்-3
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

முன்னரே குறித்தபடி சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டி நகரமும், அந்நாட்டின் கண்ணதாகிய மாந்தை நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொள்கைநகரமும், நடுநாட்டின் கண்ணதாகிய கோவலூரும் ஐங்குறு நூற்றிலும் பிற தொகை நூல்களிலும் இவராற் பாராட்டப் பெற்றிருத்தலின், இவர் அந்நகரங்களில் இருந்தவரென்றும் இவர் காலத்தில் அவைகள் மிக விளக்க முற்றிருந்தன வென்றும் கூறலாம். கபிலர், மாறோக்கத்து நப்பசலையாரென்னும் புலவர்கள் இவர் காலத்தினர் என்று சொல்லுதற்கிடமுண்டு. சிறுபாணாற்றுப்படையில் ஒய்மானாட்டு நல்லியக் கோடன் என்னுந் தலைவன் பேகன் முதலிய கடையெழு வள்ளல்களுடைய ஈகைப் பாரத்தைப் பறித்தான் என்று கூறியதனால் அவர்களுடைய காலத்திற்குப் பிற்காலத்தானாகக்கூறிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர் அக்கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரியைப் பாடிய இவருடைய காலத்திற்குப் பிற் காலத்தவர் என்று சொல்லுவதற்கு, யாதோரைய முமின்று.

இவருடைய பாடல்களின் பொருளை உற்றுநோக்குங்கால் பெரும்பாலன நெய்தல் நிலவளத்தைப் பற்றிக் கூறுவனவாக இருத்தலின் நெய்தற்றிணை வளம் பாடுதலில் மிக்க வன்மையுடையவர் என்றும், அந்நிலத்திலேயே மிகப் பயின்றவரென்றும் இவர் எண்ணப்படுகிறார். ஐங்குறுநூறு கிழவற்குரைத்த 13-ஆம் பத்தில் தலைவி மிக்க இளமையுடையாள் என்பதற்கேற்ப அவளுடைய பேதைப்பருவ விளையாட்டுக்களிற் பலவற்றை அழகாகக் கூறியிருத்தல் படித்து இன்புறற்பாலது.

ஐங்குறு நூற்றின் இரண்டாம் நூறாகிய நெய்தல் இவர் பாடியிருத்தலும்,
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *