கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 28.12.2014 அன்று நேரில் ஔவை நடராசன் ஐயாவை சந்தித்தபோது வாசித்த கவிதை
ஆழி உள்ள வரை
அவ்வை வாழி
அவ்வையே எழுவாய்; இன்னும்
ஆண்டுகள் நூறு வாழ்வாய்
செவ்வையாய்த் தமிழைக் கற்ற
சிங்கமே வெல்வாய்; சற்றும்
கவ்வையே அற்ற சொல்லால்
ககனத்தை வென்ற வேந்தே
கொவ்வைபோல் இனிக்கும் உந்தன்
குரல்கொண்டு குறளைச் சொல்வாய்
ஆங்கிலம் அறிந்தாய்; கண்டம்
ஐந்திலும் தடம்ப தித்தாய்
பாங்கிலும் உயர்ந்தாய்; கொண்ட
பதவியில் சிகரம் தொட்டாய்
தேங்குழல் தமிழால் ஆழி
தித்திக்க வைத்தாய்; சற்றே
மூங்கிலாய் வளைவாய்; ஆனால்
முறிந்துநீ வீழ மாட்டாய்
ஆயிரம் பட்டி மன்றம்
ஆயிரம் அரங்கம்; நூலின்
பாயிரம் போன்றே நீங்கள்
பதிக்கின்ற சொல்வி ளங்கும்
ஆயிரம் புலவர்க் கெல்லாம்
அடைக்கலம் தந்த உம்மைத்
தாயினைப் போல எண்ணித்
தமிழ்க்கூட்டம் தலைவ ணங்கும்
கிழவர்க்கு வீழ்ச்சி உண்டு
கீர்த்திகள் தேய்வ துண்டு
உழவர்க்கும் பஞ்ச முண்டு
உண்மைக்கும் தோல்வி உண்டு
மழவரைப் போலே தங்கள்
மார்மீது தமிழைத் தாங்கும்
புலவர்க்கு வீழ்ச்சி யில்லை
பொய்யில்லை அவ்வை வாழ்க

Add a Comment