தொழில்நுட்பவியல், இயற்கை வளங்கள், உற்பத்தி மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை அமெரிக்கா நாட்டின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் மாபெரும் உந்து சக்திகளாகத் திகழ்கின்றன. அமெரிக்கா வளர வேண்டும் என்று கனவு கண்ட ஒரு சிலரும் நவீன அமெரிக்காவின் உருவாக்கத்திற்கு வித்திட்டனர். ஆண்ட்ரூ கார்னகி, ஜான்ராக்பெல்லர், கார்னெலியஸ் வான்டெர்பில்ட், ஜே.பி. மார்கன் மற்றும் ஹென்றி போர்டு ஆகியோர் தங்களுடைய தொழில் ஆர்வம் மற்றும் புதுமையான அணுகுமுறை ஆகியவற்றன் வாயிலாக தொழிலை மேம்படுத்தினர். அது, அமெரிக்கா, நவீன தொழில் சகாப்தத்திற்கு மாறுவதற்கு பேருதவிபுரிந்தது. அவர்கள், சாலைகள், இரயில் மற்றும் துறைமுகங்கள் உட்பட அமெரிக்கா, உருக்குத்தொழில், எண்ணெய் வாயு, இயற்கை வளங்கள், சுரங்கத்தொழில், உற்பத்தி, நிதியுதவி மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகியவற்றுக்கான அடித்தளங்களை அமைத்தனர்.
இந்த ஐவரும், மாபெரும் புரவலர்களாகவும் இருந்தனர். இவர்கள், சமுதாயம் பெருமளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தங்களுடைய செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடையாகவும் வழங்கினர். இவர்கள் வழங்கிய நன்கொடைகள், பெரிய பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், அருங்காட்சியகங்கள் கலை மற்றும் பண்பாட்டு மையங்கள், நூலகங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. பல்கலைக்கழகங்கள், ஆற்றல் வாய்ந்த அறிவுசார் ஆராய்ச்சி மையங்களாகவும் பங்காற்றின. மேலும், தொழில்நுட்பவியல், பருப்பொருள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி, கட்டுப்பாடற்ற கலை மற்றும் அரசியல் அறிவியல் போன்ற துறைகளில் கருத்துக் கருவூலமாகவும் செயல்பட்டன. மேலும், அவை, அரசியல், தொழில் மற்றும் பிற துறைகளில் தலைவர்கள் உருவாகவும் உதவின. இவை, பெருமளவில் வேலைவாய்ப்புகளையும், தொழில் முனைவோர்களையும் உருவாக்கியுள்ளன.

Add a Comment