உரையாடல் நாயகர் அவ்வை நடராசனார்
————————————————————–
முனைவர் அவ்வை அவர்களுடன் எனக்குக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நல்லுறவு உண்டு. அவர் தமிழ்வளர்ச்சித்துறையின் செயலாளராகப் பணியாற்றியபோதே, அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிடைத்தது.
மொழியியல்பற்றிப் பல செய்திகளை நான் அவர்களுடன் பகிர்ந்துள்ளேன். அவரது உரையாடல்முறையை மிகவும் நான் விரும்புவேன். நம்மை முதலில் முழுமையாகப் பேச அனுமதிப்பார். பின்னர் நாம் என்ன கூறினோம் என்பதை அவர் நம்மிடம் திரும்பக்கூறி, உறுதிப்படுத்திக்கொள்வார். பின்னர்தான் அவர் நாம் கூறியதின்மேல் தனது கருத்தைத் தெரிவிப்பார்.
அவர்களுடைய அறிவாற்றல். நினைவுத்திறன் , பேச்சுத்திறன் ஆகியவற்றைக் கண்டு பல முறை நான் மிகவும் வியப்படைந்துள்ளேன். ஒருமணி நேரம் ஒரு தலைப்பு பற்றி நாம் அவருடன் பேசிக்கொண்டிருந்தாலும், நாம் பேசியதை ஒரு வரி விடாமல் அப்படியே அவர் திருப்பிக்கூறும்போது மிக வியப்பாக இருக்கும். உரையாடும்போது அவர் நம்மிடம் கேட்கும் அறிவார்ந்த வினாக்கள் நமது சிந்தனையை மேலும் தூண்டும். எந்தவொரு தலைப்புபற்றியும் உரையாடும் பொதுஅறிவு நிரம்பப் பெற்ற பேராசிரியர் இவர் என்பதில் ஐயமில்லை. நமக்குத் தெளிவில்லாமல் அவருடன் உரையாடமுடியாது என்பதும் மற்றொரு உண்மை.
தமிழ்மொழி அறிவுக்கு இணையான அவரது ஆங்கில அறிவையும் கண்டு வியப்படைந்துளேன். மேடையில் அவரது ஆங்கில உரையின்போது, ஆங்கில இலக்கியங்களிலிருந்து அவர் பல செய்திகளைக் கூறுவார். அப்போது , இவர் ஆங்கிலப் பேராசிரியரா அல்லது தமிழ்ப்பேராசிரியரா என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்படும்.
மனித உறவிலும் ஒரு சிறந்த பண்பாளர் பேராசிரியர் அவர்கள். நான் அவரைச் சந்திக்கும்போதெல்லாம், சிரித்த முகத்துடன் அவர் அரவணைக்கும்போது, உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருக்கும்.
தமிழறிஞர்களுக்கிடையில் ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ள பேராசிரியர் அவர்களுக்கு அகவை 75 நிறைவடைந்து, அவர் பவளவிழா காண்கிறார் என்பது மிக்க மகிழ்ச்சிக்குரியதாகும். அவர் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, தமிழ் உலகிற்குப் பல சிறப்புகளைத் தேடித்தரவேண்டுமெனப் பேராசிரியரை அன்புடன் வேண்டுகிறேன்.
முனைவர் ந. தெய்வ சுந்தரம்
மேனாள் தமிழ்மொழித்துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக்கழகம்

Add a Comment