
தடுப்பூ எங்கள் தோளைத்தொட்டது !

மகளிர் தினத்தில் மாதர் மாட்சியை நினைத்தேன் .என் மனத்தரசியின் இழப்பை எண்ணி ஆற்ற முடியாமல் சில நொடிகள் கண் கலங்கினேன் .
என் அருமைப் பெயர்த்தியும் , எங்கள் குடும்பத்தின் நிகரிலாச் செல்வமும் ஆகிய டாக்டர் நிகிதா தாரா கண்ணன் எனக்கு ஆசுதிரிலேயாவிலிருந்து ” மகிழ்ச்சியில் திளைக்கும் மனிதன் ” (The Happiest Man on Earth ) என்ற இனிய நூலை எனக்கு அனுப்பிக் ” கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள் .கருத்தோடு இந்த நூலைப் படித்து மனத்தளர்ச்சியை நீக்கிக் கொள்ளுங்கள் தாத்தா ” என்று எழுதியுள்ளார் .
இந்த நாளில் அருளும் , நானும் என் செயலாளர் பொன்னேரி பிரதாப் செய்த அருமையான ஏற்பாட்டின் பேரில் காஞ்சி காமகோடி மழலையர் அறக்கட்டளை நல மருத்துவமனைக்குச்(8.3.2021) சென்றோம் .
எங்கள் குடும்பத்தின் தனித்தெய்வம் மருத்துவமாமணி டாக்டர் பிரியா இராமச்சந்திரன் எனக்கு ஆறுதல் சொற்களைக் கூறினார்கள் .
என்ன நடந்தது தடுப்பூ எப்போது இட்டார்கள் என்றே தெரியவில்லை .
தண்மை பொங்கித் ததும்பும் மருத்துவ அரங்கை விட்டு வெளியே வந்தோம்.
அவர்கள் வழியனுப்பிய போது என் கண்ணில் நீர் வழிந்தது .அடுத்தபடி முகத்தில் புன்னகை ஒளிர்விட்டிருந்தது
வாழ்க என்று என் வாய் வாஞ்சையோடு முணுமுணுத்தது .
மருத்துவமாமணி டாக்டர் பிரியா அவர்கள் துணைவேந்தராக அமர்ந்தது போன்ற கனவு என் கண்ணில் தனைப் படர்ந்தது .
ஆக்சுபோர்டுக்குத் தலைவணங்குவோம் என்று நேற்றுத்தான் கட்டுரை எழுதினேன் .அந்த மருந்து தான் தடுப்பூசியாக(0.5 அளவு கோவீஷில்டு) இட்டுக்கொண்டோம் .
ஒளவை நடராசன்
அன்புள்ள அம்மா


ஒளவை நடராசன்
ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினோறு பிள்ளைகளில், புகழ் பெற்ற பிள்ளை நீ என்று நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத் தில் இருந்து, என் தந்தை பிறந்த ஒளவையார் குப்பம் ரெட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக் காரணம் நீதானே !
உன் இருபதாவது வயதிலேயே உன் தந்தையாரை இழந்ததால், நாதியில்லாமல் என் பாட்டி லட்சுமி வீட்டில் வளர்ந்தாயாம் !
உரக்க உரக்கப் பேசுவாய், கோபத்தில் கொதித்துப் போவாய். ஆனால் உனக்கு ஈரமனம், இளகிய போக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டும் தெரிந்த நீ, தினம் அதிகாலையில் திருவருட்பா பாடலை எப்படிப் பாடினாய் என்று இப்பொழுதும் ஆச்சர்யப்படுவேன். சித்தி பெண் ஞானாம்பாள், தாய் மாமன் ஏகாம்பரம், லட்சுமி பாட்டி, சந்திரமதியம்மாள் பாட்டி, நாங்கள் பதினோறு பேர், இத்தனை பேரையும் வைத்து அப்பா பார்த்த ஆசிரியர் தொழில் மூலம் கிடைத்த குறைந்த வருவாயை வைத்து, குறை இல்லாமல் குடும்பம் நடத்திய சிறந்த நிர்வாகி நீ ! எனது தந்தை கற்றுத் தேர்ந்த கல்விமான்.
ஆனாலும் அவரை, ” உங்களுக்கு என்ன தெரியும் ” என்று அடிக்கடி கூறுவாய். என் தந்தை கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், எனக்கு என்ன தெரியும் என்று சொன்னால் அவளுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பார்.
உனக்கு 5 ஆண் பிள்ளைகள் இருந்தாலும், ஒரே பிள்ளை நான்தான் என்பாய், என் மகனுக்கு ஈடில்லை
என்பாய். ஒருமுறை அப்பாவைப் போல் ஆசிரியர் வேலைக்குப் போகிறேன், என்று செய்யாறில் இருக்கும் போது சொன்னேன். வேண்டாம்பா நீ அரசாங்க உத்தியோகத்தில் பெரிய ஆபீசரா போ என்றாய். ஆனாலும் நான் அப்பாவைப் போல் தஞ்சை சரபோசி கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்த போதும், நீ ஆசைப்பட்டது போல், டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய போதும், தமிழக அரசில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக ஆனபோதும் ஆனந்தத்தில் திளைத்தாய், புரட் சித்தலைவர் எம்.ஜி. ஆர் தமிழ் மொழி வளர்ச்சி பண்பாட்டுத் துறை என்ற ஒரு துறையை புதிதாக உருவாக்கி என்னை அரசு செயலாளராக அழகு பார்த்தபோதும், மதுரை உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது முதல் முதலாக நம் வீட்டுக்கு தொலைபேசி வைக்கப்பட்ட போதும் ஒரு குழந்தையைப் போல் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தாயே !.
அப்பா மறைந்தவுடன் நீ பேசுவதையே நிறுத்திக் கொண்டாய், அமைதியே வடிவமாகிப் போனாய் இந்த நிலையில் உன்னை பொள் ளாச்சி மகாலிங்கம் மதுரை வந்து பார்த்த போதும், அப்பாவின் மாணவர் புலவர் கோவிந்தன் உன்னை விசாரித்த போதும், உணர்ச்சி வசப்பட்டுப் போனேன் மதுரை மருத்துவக் கல்லூரியில் என் மனைவி உனது மருமகள் தாரா நடராசன், என் தம்பிகள் மெய்கண்டான். நெடுமாறன் பிரபல மருத்துவர்கள் ஆனாலும் ஆயிரமாகட்டும் என்பிள்ளை நட ராசனை விடவா நீங்கள் பெரியவர்கள் என்று சொல்வாய் ! என் தந்தை எந்த பிள்ளைகள் வீட்டிலும் போய் இருக்கப் பிடிக்காது. ஆனால் உனக்கு ஒவ்வொரு பிள்ளைகள் வீட்டிலும் இருக்கப் பிடிக்கும்.
ராமநாதபுரத்தில் நீ நோய்வாய்ப்பட்டு கிடந்தபோது கடைசியாக நான் உன்னை பார்க்க வந்தேன். அப்பொழுது நான் உயர் அதிகாரி என்ற வகையில் நான் காரை விட்டு இறங்கியவுடன் 5 , 6 பேர் புடை சூழ நின்று வணக்கம் வைத்தார்கள், நானும் வணக்கம் சொன்னேன். இதைப் பார்த்த நீயும் கும் பிடு போட்டாய் ! அதை இன்று நினைத்தாலும் நெக்குருகிப் போகிறேன்.
சின்ன வயதில் சர்க்கரை டப்பாவை திருடி எடுத்துக் கொண்டு சாப்பிடுவேன். ஒவ்வொரு முறையும் அடிக்க கை ஓங்குவாய், ஒரு நாளும் அடித்ததில்லை . ஒரு வேளை நீ ஒரு முறையாவது அடித்திருந்தால், 50 ஆண்டு காலமாய் சர்க்கரை வியாதியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்காமல் இருந்திருப்பேன் !
நன்றி : பாக்யா – வார இதழ் – ஜூன் 19 – 25 – 2009 .
இரக்கத்தின் வடிவம்
வள்ளலாரும் தைப்பூசமும் என்ற தலைப்பில் 18.2.25 செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.00 மணியளவில்
பாரிமுனையிலுள்ள ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் உரையாற்றினேன்.








திருப்பாவை பேருரை



பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 2
========
- வையத்து வாழ்வீர்காள்!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
- திருப்பாவை செய்யுள்.2
எதைச் செய்தாலுமே நல்ல முறையில் திருத்தம் உறச் செய்ய வேண்டும். “செய்வன திருந்தச் செய்“ என்ற பழமொழி எதைச் செய்யவேண்டும். எப்படிச் செய்யவேண்டும்? எனக் கருதுதல் நல்லது. “செய்தக்க அல்ல செயக்கெடும். செய்தக்க செய்யாமையானும் கெடும்“ என்பர் திருவள்ளுவர். கொள்ளுவன, தவறுவன, அறிந்து, தெரிந்து செய்வோரே வெற்றி பெறுவர். இங்ஙனம் விதிவிலக்கு அறிந்து செய்வது “செய்யும்முறை ஞானம்“ இதனையே “கிருத்யாகிருத்ய விவேகம்‘ஹ‘ என்பர் வடநூலார். ஆண்டாள், “நீராட ஆசை ஒன்றே போதுமானது. வருகிறவர்கள் அனைவரும் வாருங்கள்“ – என்று அழைத்தாள் அல்லவா? அப்ப வந்தவர்களைப் பார்த்து – நமது நோன்புக்குச் செய்யத்தக்கவை என்ன? செய்யத் தகாதவை என்ன? என்று சொல்லுகிறாள்“. நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ“ என்று ஆண்டாள், “நீராடப் போதுமின்“ என்று தோழியரை அழைத்தாள். கேட்ட தோழியருக்கு “கிருஷ்ணாநுபவமே“ அதன் உள்ளுரை என்று பட்டது. அதில், ருசியும் ஆசையும் உடையார் பலரும் ஓரூராய்த் திரண்டுவந்தனர். அதுகண்டு, அவளுக்குப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. அதற்கு உரிய காரணங்கள் பலவுண்டு. பொதுவாக, நல்லது சொல்லாரும் கேட்பாரும் உலகில் மிகவும் அரியர். இலங்கை அகப்பட விபிஷணன் ஒருவனே அப்படி இருந்தார். ஆனால், அதன்படி கேட்டவர் எவருமே இல்லை. “சீதையை விடுவது உண்டோ ! இருபது நிலத்தோள் உண்டால்“- என்று மறுத்தாள் இராவணன். ஆனால், இங்கு தன்னூல் கேட்டு, ஊராய்த் திரண்டது வியப்பிற்கு உரியது தானே ! நல்லதுக்கு நாலுபேர் என்பர். இங்கோ தோழியர் திரள் முழுவதுமே வந்து கூடிற்று. இவர்களை, நோக்கி ஆண்டாள் “வாழ்வீர்கான்“ என்கிறாள். வாழப்பிறந்தவர்களே- என்று கருத்து.
இவ்வுலகினை, இருள் தருமா ஞாலம்“ – கொடுவுலகம்“ என்றெல்லாம் கூறுவர் ஞானிகள் தன்னுள் அகப்பட்டோரை மதிமயக்கி இழிநிலைக்கு ஆட்படுத்தி அழியச்செய்யும். இதில் இருந்து தப்பி, பகவத் விஷயத்தில் ஈடுபடுவது – பாலை நிலத்தில், நீரூற்றுப் போலே அல்லவா? மானிடம் அறிந்து மடிவுருவண்ணம், ‘போதுமின்“ என்ற உடன் வந்தவர்கள் – “வாழப்பிறந்தவர்கள் தாமே!“ தேகமே ஆத்மா, போகமே புதுஷார்த்தம்“ என மருண்டு திரிவோரை “இறப்பதற்கே இருக்கின்றாரே“ என்றது ஒரு தமிழ்க்கவி. அவர்களோடு இவர்கட்கு உள்ள வாசி தெரியும்போது இவர்களை “வாழ்வீர்கான்“ என்று விளித்தது பொருந்தும். வெறும் வியப்பில் வந்த பேச்சில்லை. இனி, மற்றொன்றும் உண்டு.
எம் பெருமான் உகந்து எழுந்தருளியுள்ளே இடங்களே திருக்கோயில்கள். அவையுள்ள ஊர்களே ‘திவ்யதேசம்‘ எனப்படும். அங்கு குடியிருப்பு நமக்கு மிகவும் மேலானது. கோயில் இல்லா ஊரில் குடியிருப்பு தகாது. பிற இடங்களில் இருப்பது வாசம் என்றால், திவ்யதேசங்களில் இருப்பது வாழ்ச்சி ஆகும். “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்கான்“ என்று சுரம், சர்வேஸ்வரன் கண்ணனாய் அவதரித்துத் தன்னைத் தாழவிட்டுப் பரிமாறும் இடம் திருவாய்ப்பாடி. அங்குள்ளவர்கட்கு, வசிப்பதே வாழ்க்கையாகி மலர்ச்சிதரும் ஆய்ப்பாடியை வாழ்விடமாகக் கொண்டு வாழுவோர்களை “வாழ்வீர்கான்“ என்றதில், திருத்தமும் மிகவுண்டு. வியப்பில் வந்த புனைந்துரை என்று ஆகாது.
கண்ணன் பிறந்த காலத்திலே பிறப்பது. அவன் இருக்கும் ஊரிலே இருப்பது. இவை மட்டும் அன்றி, மேலும் தனிப்பட இவர்கள் பெற்ற பேற்றினை நினைத்து மகிழுகிறாள் ஆண்டாள். அவன் பிறந்த காலத்திலும், அவன் இருந்த ஊரிலும் பிறந்து இருந்து – அவன் விரும்பாத, முறட்டு ஆண்களாய் இருந்தால் பயன் என்ன? இல்லை. பருவர் முதிர்ந்த பெண்களாய் இருந்தாலும் பயன்தராது. அப்படிக்கு இன்றி, ‘கிருஷ்ணகடாக்ஷத்துக்கு இலக்கான கன்னிப்பருவம் வாய்த்தவர்களாய் இவர்கள் இருப்பது பெறுதற்கு அரிய பேறு அல்லவா? இதனைக் கருதி மகிழும் அவள், “உலகத்து உள்ளீர்“ என்னாமல் “வையத்து வாழ்வீர்கான்“ என்றது, சுவைமிகுதி உடையது. முற்கூறிய வாய்ப்பும் வசதியும் எல்லாம் இவளுக்கும் ஒத்தது தானே ! அப்படி இருக்க ஆண்டாள், “வாழ்வோங்கள்“ என்று தன்னையும் அகப்படப் பேசலாம் அல்லவா? அதைவிடுத்து முன்னிலையில் “வாழ்வீர்கான்“ என்பான் ஏன்? என்று கேள்வி எழும். உலகில் தாழ்வான விஷயாநுபவங்கட்கு மட்டுமே தனிமை தேவை. பகவத்விஷயத்தைப் பலரோடு கூடி அநுபவத்திலே தக்கது“ என்பது சாஸ்திரம். அப்படியானால் இத்தோழிமார்களது கூட்டுறவு இல்லையானால் அவளுக்கு பகவத்விஷயம் ரசிக்காது. இதனால், ஆண்டாள் தன் பகவதநுபவத்தை ரசமாக்கித் தருமவர்களது பெருமை நோக்கி, வாழ்வீர்கான்“ என்கிறாள்.
பாவை நோன்பு கன்னியர் அனைவருக்குமே பொதுவானது. நல்ல கணவனைப் பெறும் பொருட்டுச் செய்வது. அதில் ‘என் நோன்பு, உன் நோன்பு“ என்று கூறுதற்கு இடமில்லை. அப்படியிருக்க “நம்பாவைக்கு“ என்று ஆண்டாள் தனது ஆக்கிப் பேசுகிறாளே. இதில் ஆழ்ந்த கருத்துநயம் உண்டு. இவர்கள் நோக்பு இயற்றுவதில் உள்ள தனிச்சிறப்பினைச் சுட்டிக்காட்டும். உலகில் நமக்கு எல்லாம் முடிந்த முடிவு இறைவனை அடைந்து விடுபெறலே ஆகும். அவனை அடைந்து, அவன் மூலம் பிறிது ஒன்றினை விரும்புதல் தகாதது“ சிந்தாமணியே ! திருவேங்கடம் மேய எந்தாய் இனியான் உனை என்றும் விடேனோ“- என்று பாசுரம் அவளை, உபாயமாகப் பற்றி பொன்னும் போகமும் பதவியும் விரும்பும் வரை“- மாணிக்கத்தை விற்று தவிடு கொள்ளுவோரை ஒப்பர்“ என்பர் வைணவ பூர்வாசிரியர்கள். ஆகவே இறைவனை அடைந்து “அவனையே கணவனாக வேண்டும் என்று விரும்புகிற இவர்கள் நோன்பு தலையாயது இல்லையா?
“எங்கள் பெருமான்! ஒன்று உரைப்போம் கேள். எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க“- என்று திருஎம்பாவை. ஆனால், ஆண்டாளின் வேண்டுதல் என்ன தெரியுமா? பெருமானே ! நம்மிடையே இயல்பாக அமைந்த உறவு நாயகி நாயக பாவம். அது இம்மையில் மட்டுமல்ல, ஏழேழ்பிறவியிலும் தொடர்ந்து வருவது. ஆத்ம சம்பந்தமான அவ்வுறவு ஒழிக்க ஒழியாதது. நீயே எங்கட்கு கணவனாக வேண்டும். உனக்கு வேண்டிய பணிவிடைகள் நாங்களே செய்தல் வேண்டும். உன்னைத் தவிர பிற மானிடர் மீது எழும் காதலைமாற்றி உன்னையே அடையுமாறு செய்தருள்க“ – என்கிறாள் “உன் பொன் தாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் ! இற்றைப் பறை கொள்வாள் அன்று, ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம். உனக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்று“ என்று திருப்பாவை இவ்வேறுபாடு சுட்டவே நம்பாவைக்கு என்று தனித்துப் பேசுகிறாள் ஆண்டாள்.
நம்மில் பலரும் நாள்தோறும் பூஜை, பஜனை, பாராயணம், ஆராதனம் எனப் பலவற்றைச் செய்து வருகிறோம். இவ்வுபாயங்களால் பகவானை அடைந்து விடலாம் என்கிறது நினைப்பு. ஆனால் இதற்கு முற்றிலும் மாறான உண்மை வேறு. தன்னை அடையத் தடையான இடையூறுகளைப் போக்கி, நம்மைத் தம்முடையவளாக்கித் தானே தேடிவந்து அடைகிறான். அன்றியும் நம்மை அடைந்த பேற்றுக்குத் தானே மகிழவும் செய்கிறான் – என்று இறைவன் செயல்முறையைச் சமய நூல்கள் தெளிவாகக் கூறும். “பாரமாய பழவினை பற்று அறுத்து வாரமாக்கி வைத்தான். வைத்தது அன்றி என்னுள் புகுந்தாள். கோரமாதவம் செய்தன்ன் கொல்? அறியேன்“ – தூர்த்தரோடு இசைந்த காலம். மாதரார் கயல்கள் என்றும் விலையுள்பட்டு அழுந்துவோனைப் போதரே என்று சொல்லி புந்தியுட்புகுந்து. தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்“ என்பன ஆழ்வாரது பாசுரங்கள். சைவசமயத்திற்கும் இதில் ஒத்த கருத்து உண்டு. விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் சிவலோகன்“ என்று திருவாசக நூல் கூறும். “அகம் த்வா சர்வபாபேயோ மோக்ஷ இக்ஷயாமி“ – என்று கண்ணனும் கீதையுள் கூறியுள்ள கருத்து இதுவே.
அப்படியானால் அடியார்கள் ஆகிய நாம் எதுவுமே செய்ய வேண்டியது இல்லையா? என்று கேள்வி எழலாம். இல்லை, நாமும் செய்ய வேண்டியது உண்டு “நாமும் செய்யும் கிரிசைகள் கேளீரோ“ – என்று ஆண்டாள் சொல்லவில்லையா? நாம் செய்யும் கிரிசைகள் என்னாமல் “நாமும்‘ என்ற உரைமைக்குப் பொருள். இறைவன் செயலோடு மட்டும் அன்றி நாமும் செய்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தலே எனலாம். குழந்தை பசிநேரம் அறிந்து தானே வந்து பாலூட்டுபவள் தாய். பால் நினைந்து ஊட்டும் தாய் சாலப் பிரிவுடையவள் இல்லையா? இந்த நேரத்தில், குழந்தை கையைக் காலை அசைத்து அழுது குரல் கொடுக்கவும் காணுகிறோம். குழந்தை இர செய்யவது தாய் பால் ஊட்டக் காரணமா? செய்யாவிட்டாலும், தாய் பால் தரத்தானே செய்வள். ஆனாலும் அறிவுடைய மக்கட்பிறவி ஆகையால் குழந்தை இது செய்யத்தான் வேண்டும். அழுது குரல் தராவிட்டால், தாய் தன் கடனே என்று குழந்தைக்குப் பால் தருவாள். அழுகையும் குரலையும் குழந்தைபால் கண்ட தாய் உவந்து தருவள். இந்த அளவு வேறுபாடு உண்டில்லையா? இறைவனும் இதைபோலத்தான். நாம் செய்யும் பூஜை பஜனைகளால் அவனுக்கு முகோல்லாசம் ஏற்பட்டு மனம் குளிர்ந்து அருள் செய்குவன். இதனால் “நமது ஸ்வரூப ஸித்திக்காக“ நாம் அவசியம் செய்யவேண்டிய ஸ்வாபவிசேஷங்கள்‘ என்பர் மேலோர். இது கருதியே ஆண்டாளும், ‘உவந்து நாம் செய்யும் கிரிசைகள்“ என்று கேட்டச் செய்தாள்.
“நாமும் – என்பதில் உள்ள நாம்“ என்பது ‘அகங்கார கர்ப்பம்“ உடையது இல்லை. தற்பெருமை சுட்டாமல் தங்களது ஸ்வரூப விசேஷத்தை குறிப்பதாகும். இறைவனையே“ உபாயமும் உபோயமும் எனக் கொள்ளுவர் மேலோர்“. பகவானை வேறு உபாயங்கள் மூலம் அடையாதவர்களாயும். பகவானை அடைந்தபிறவி வேறு ஒன்றை அவள் மூலம் விரும்பாதவர்களாயும் உள்ளவர்களுக்கு “பிரபந்தர்“ என்று பெயர். அவர்கள் மேற்கொண்ட நெறி “பிரயத்தி“ என்றும் சொல்லப்பெறும். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி‘ – என்பர் மணிவாசகர். அவன் திருவடிகளை நாம் வணங்கினோம் என்றால் அதுவும் அவன் செயலே என்று கருத்து“ உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உளத்து இருத்தல் பொருட்டு அவனை நெஞ்சுள் இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே“ – என்று பாசுதம். அதுபோல “நாராயணனே நமக்கே பறை தருவான்“ என்று “அவனாலேயே பேறு“ என்றிருக்கிற நாமும் – என்கிற வேறுபாடு சுட்டுகிறது இது. இதை ஒப்பவே – நம்பாவை“ என்றதும் விசேஷமான நோன்பு என்றதே கருத்து.பிறரை அழித்தற்குச் செய்யும் கும்பகருணன் முதலானோர் யாகம் போல இல்லை. பகவானும் அவனடியார்களும் வாழ்வதற்காகச் செய்யும் நோன்பு இது என்று பொருள்.
பாவை நோன்பிற்குச் செய்வன, தவிருவன எவ்வெவை என்று மேலே கூறுகிறான். நாட்காலே நீராடுதல். பரமன் அடியாடுதல். ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் இடுதல். உய்யுமாறு எண்ணுதல், அனைத்தினையும் உவந்து செய்தல் என்பன செய்யத்தகுந்தவை. மையிட்டு எழுதானை, மலரிட்டு முடியாமை, மேலையோர் செய்யாதன செய்யாமை. தீக்குறளை பேசாதிருத்தல்- ஆகியவை செய்யத் தகாதவை. இவற்றுள், செய்யக்கூடாதனவற்றையும்‘ செய்யும் கிரிசை‘ என்று பேசப்படுகிறது இல்லையா? பொய் பேசாமை. கனவு காணாமை என்று சொன்னால், பொய்யினைப் பேசாது இருத்தல். களவினைச் செய்யாதிருத்தல் என்றுதானே பொருள்? ஆக, இவையும் எதிர்மறை வாய்ப்பாட்டால் இருத்தலாகிய செயலில் அடங்கும். ஆகையால் “செய்யும் கிரிசைகள் என்று பேசியது பொருந்துவதே ஆகும்.
“கிரியை“ என்று செயலுக்குப் பெயர். இது ஒரு வடசொல். ஒரு மொழியில் பல காரணங்களால் பிறமொழிச் சொற்கள் வந்து புறங்கவே செய்யும். இது தருதற்கு இயலாதது. ஆனால், தமிழில் வரும்போது தமிழுருவம் தந்து நடமாட விட வேண்டும். இது தமிழிலக்கண நெறிமுறை. தமிழ் இலக்கிய மரபும் இதுவே ஆகும். இம்மொழிமரபு பேணியே, ஆண்டாள்“ க்ரியை என்பதை “கிரிசை“ என மாற்றி வழங்குவது காணலாம். செயல்திறம் கெட்ட ஒருவனை கிரிசை கெட்டவன் என்று கூறுவது நாட்டு வழக்கிலும் உண்டு. இங்ஙனமே, ‘தேஜஸ்‘ என்பதை “தேசம் உடையாய் திறவேவோர் எம்பாவாய்“ என்பள். குதூஹலம் – என்பது கோதுகலம் உடைய பாவாய்“ எனவும் வரும். உயரிய புலமையோடு நல்ல தமிழுணர்வும் கூடி அமைந்த அவளது திறமை வியக்கத் தக்கது இல்லையா?
மேலும் “செய்யும் கிரிசைகள்“ என்றதன் தொனிப்பொருள் மிகவும் சுவையுடையது. “செய்வனவும் தவிர்வனவும் ஆகிய இரு செயல்களையும் சேர்த்தே செய்தல் வேண்டும். ஒன்றை விட்டு மற்றொன்றை மட்டும் செய்தல் தகாது“ என்று வற்புறுத்தும் கருத்தது அது. தகாத செயல்களை மேற்கொண்டு, நீராடலும் பரமனடி தொழலும் பயனற்றது. அதேபோல, பரமனடி தொழலும் நீராடலும் செய்து மற்றைய தகாத செயலோடு கூடியிருந்தால் – அதுவும் பயன்தராது. எனவே, இவை தொடங்கி இடையே நிறுத்துமவை அல்ல. பலன் கைபுகும் அளவும் விடாது. பத்தும் பத்தாகவே செய்து தீரவேண்டும் என்பது உள்ளுறை‘ த்யாக மாத்ரத்தையே ஸ்வீகரித்து ப்ராப்யத்திலே ருசி இன்றிக்கே நினைத்தபடியே நடக்கில் நாஸ்த்கத்துவமே பலித்துவிடும் அத்தனை“ என்றது. இவ்விடத்து வியாக்யான வாக்யம், எம்பெருமானது குணவிசேஷங்களில் ஈடுபாட்டால், பரமனடிபாடுகை முதலாயின எல்லாம் தடையின்றி தாமே அடுத்தடுத்து நெருங்கிவரும். இப்படி வருவதை “ஸம்பாவிதஸ்வா பாவங்கள்“ என்பர்.
நீராடல் ‘போதுவீர் போதுமிரோ“ என்றவுடன் ஒருவர் இருவராக அன்றி ஒரு ஊராக தோழியர்கள் வந்து திரண்டார்கள் இல்லையா? அதுகொண்டு, மற்றையோர்- பகவத் விமுகர் கோலாஷயத்திலே கிருஷ்ணநுபவத்திற்கு இத்தனைபேர் உண்டாவதே‘ என்று மகிழ்ச்சி மிக்கு மெய்ம்மறந்து இருந்தார்கள். அவர்களது கவனம் திரும்புகைக்காக“ கேளீரோ“ என்று திரும்பவும் சொல்ல வேண்டியது ஆயிற்று. மேலும், பகவத்விஷயம் சொல்லுவார்க்கும் கேட்பாருக்கும் இனியதாய் வீடு தர வல்லதாயும் இருப்பதால் கேளீரோ‘ என்று வற்புறுத்துவதாகுமாம். வைசம்பாயன பகவான் கிஷ்யனான ஜனமே ஜயனுக்கு மகாபாரதம் முழுமையும் சொன்னார். அதில், வரும் “சதுர்வித புருஷார்த்தங்களுள்“ எதை நீ விரும்புகிறாய் என்று முடிவில் அவளிடம் கேட்டார். ஜனமே ஐயன் பதில் கூறினார்.- நான் புருஷார்த்தமாகக் கருதுவது நான்குமில்லை. நான்கில் ஒன்றும் இல்லை. தேவரீர் பகவத் குணங்களைச் சொல்ல நான் இருந்து கேட்டதே புருஷார்த்தமாகக் கருதினேன்“ என்று செவிபடைத்த பயன் நமக்கு பகவத்குணங்களைக் கேட்டலும், வாய்படைத்த பயன் பிறர்க்கு அவற்றை எடுத்துச் சொல்லலும், ஆகும். நாங்களும், வாய்படைத்த லாபம் படைத்து, நீங்களும் செவிபடைத்த இலாபம் பெற வேண்டாவோ என்பாள், “கேளீரோ“ என்றாள்.
ததும்பிய காதலும்-நிறைந்த வாழ்வும்
இன்றைய நாள் ( 10 – 12 – 2024) எங்கள் பெற்றோர்களின் 63 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது
திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது.
59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்…
நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும்
அப்பா அம்மாவின்
ஞான ஒளியும் தொடர்ந்து
எங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி
கண்ணன், அருள், பரதன்



அப்பாவின் ஈர்ப்பு -தொடர் காவியம்














அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்…
இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்கள் ஒளிப்படங்களுக்கு முன்
மலர் வணக்கம் செய்வதும்
தன்னுடைய சீருந்திலும் அப்பாவின் ஒளிப்படத்தினை அணி செய்து வணங்குவதையும் கண்டு நெகிழ்ச்சியுடன் எங்கிருந்தோ வந்தான் என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் உள்ளேன்.
எந்தை ஈராண்டு நிறைந்த எங்களின் சிந்தை










ஔவை நடராசன்
ஒளி 24.04.1935
நிழல் 21.11.2022
எந்தை
ஈராண்டு நிறைந்த
எங்களின் சிந்தை
பெருந்தகையீர்,
வணக்கம்.
உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஒளவை நடராசன் (21.11.2022) மறைந்து ஈராண்டுகள் நிறைவுபெற்று, எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் பதினோராம் நாள் செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை 7.30 -09.00 மணிக்குத் ‘தாரகை இல்லத்தில்’
(ஜெ 82 இரண்டாம் முதன்மைச் சாலை அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102) இரண்டாமியாண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வி சைவத் தமிழ்மணி ஒளியகம்
ந. ஒளியரசு அவர்களின் வாயிலாக நடைபெறவுள்ளது.
நினைவேந்தலுக்குத் தவறாது வருகை புரியுமாறு நெஞ்சார அழைக்கிறோம்.
கண்ணன், அருள், பரதன்