பனித்துளிக்குள் படுத்திருக்கும் ஈரம்
விழித்தெழுந்ததும்
ஔவை உதட்டுக் கதவுகளைத் தட்ட
அன்றன்றும் வந்து சேரும்.
மலர்களில் வானவில்லில் சலிப்புத்தட்டினால்
வண்ணங்கள்
ஔவைபேசும் அரங்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும்.
நடராசன் பேச்சு முடிந்தபிறகும்
தொடர்ந்து மேடையில் தமிழ்த் துடிப்புகள்
இருந்து கொண்டே இருக்கும்.
கேட்டவர் நெஞ்சங்களில்
குற்றாலமும் ஒகேனக்கல்லும் அருவிகள்
கொட்டிக் கொண்டே இருக்கும்.
கடந்துபோன நொடிகளின் கைகளுக்குள்
அழகிய சொற்கள் மலிந்து கொண்டே இருக்கும்.
பிசிறில்லாமல் நிகழ்ச்சிகள் நடத்த
மார்கழி மன்றங்கள்
குறிப்பெடுத்துக்கொண்டு போனதைச்
சுதா ரகுநாதனிடமும் நித்திய சிற்பியிடமும்
சொல்லிக் கொண்டிருக்கும்
ஔவையின்
வார்த்தை இடுப்புகள் வளைவதைப்
பார்த்த பிறகுதான்
பத்மா சுப்பிரமணியனிடம் வந்து சேர்கின்றன,
நாட்டிய நளினங்கள்
பேச்சாளர்கள் ஔவையைப்
பிரித்துக் கொண்டபோது, நாட்டில்
குட்டி நடராசர்கள் கொள்ளை கொள்ளையாய்.
இன்றைய
மைதாசு மன்னன் மயக்கும் பேச்சு
ஔவை நடராசன்.
தொட்டது பித்தளைப்பாட்டும் வெண்கலப்பாட்டும்
தங்கப்பாட்டுகளாய் மின்னல் போடும்.
தொடாத தங்கப் பாட்டுக் கதைக்குள்ளே
பிளாட்டினக் கனவும் பிரளயம் பொங்கும் !
அதிசய வேதியல் ஔவையின் நோக்கியல் !
மேன்மைத் தமிழுக்கு
அன்பன் நானோ இவரின்
மேடைத் தமிழுக்கும் நிரந்தர அன்பன்.
ஈரோடு தமிழன்பன். 26.4.2011

Add a Comment