அன்பின் முகவரி ஒளவை
——————————————————————————– நான் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்றுகொண்டிருக்கும்போது என் நண்பன் மணிகண்டனின் வாயிலாக அன்புப்பழம் ஔவையின் அலுவலகத்தில் கணினி பழுதுபார்ப்பதற்காக அவரோடு அறிமுகமானேன். பின்னர் அவரோடு பலவேளைகளில் கணினித்தமிழ் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் விவாதித்துக் கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஔவையின் அன்பாலும் அரவணைப்பாலும் ஈர்க்கப்பெற்ற நான் அவருக்கு உதவியாளராக, செயலாளராகப் பல்வேறு நிலைகளில் அவரோடு வாழ்ந்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் அவரோடு பல நாட்கள் மகிழ்வுந்தில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போது பல்துறை அறிவினையும் பல்வேறுபட்ட மனிதர்களைப் பற்றியும் உலக வழக்குகளையும் எனக்குச் அறிவுறுத்தியிருக்கிறார். அவர் குடும்பத்தில் ஒருவனாக என்னைச் சேர்த்து அலங்கரித்திருக்கிறார். பல நபர்களிடம் சுந்தரம் என் நான்காவது மகன் என்று கூறி, என்னை அறிமுகப்படுத்துகிற பேற்றினையும் நான் அடைந்திருக்கிறேன்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, அறிஞர் அண்ணா விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது போன்றவை அவரை வந்துசேரும்போது நான் அவருடன் இருந்திருக்கிறேன்; வாழ்ந்துகொண்டிருந்தேன் என்று கூறுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
எந்த ஒரு நபரும் அவரிடம் வந்து எளிமையாக அணுகலாம். எவர் வந்து பார்த்தாலும் உயர்வு தாழ்வு பாராமல் அனைவரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர். அவரது அலுவலகத்திற்கு எந்த ஒரு பணியாளர் அல்லது மாணவ நிலையில் இருக்கும் ஒருவர் என, எவர் வந்து பணிசெய்தாலும் அணுகினாலும் அவர்களை, தனது பல்வேறு பணிகளுக்கிடையில் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வந்து கேளுங்கள், இது உங்கள் அலுவலகம் போல் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி, அவர்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு அறிவுரைகளைக் கூறுவார். மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் பல்வேறு பணிப்பொறுப்புகளில் இருந்தவர் என்று நினையாமல் அனைவரிடமும் முகமலர்ச்சியுடன் எளிமையாகப் பழகுபவர். இவர் கோபப்பட்டு உரத்த குரலில் பேசி நான் பார்த்தது கிடையாது. பொறுமையானவர். கோபத்துடன் நெருக்கமானவர்களைத் திட்டிய வார்த்தை ‘மடையா’, ‘மடச்சாம்பிரானி’ இவைகள்தான். நான் கண்ட அவரது தலையாயப் பண்புகளுள் இத்தகைய பொறுமையும் ஒன்றாகும்.
எந்த ஒரு கருத்து அல்லது செயல்பாடு பற்றி மற்றவர் கூறுவதற்கும் அந்தக் கருத்து இவரது நாவால் சொல்லப்படுகிற முறைக்கும் வேறுபாடு இருக்கிறது. இவர் சொல்லும் முறையில் அந்தக் கருத்து உய்வு பெறுகிறது. அழகுணர்வுடன் எந்த ஒன்றையும் கூறுவார். ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதை ஏன், எதற்கு, எப்படி போன்ற வினாக்களைத் தொடுக்கவேண்டும்; மாணவ நிலையில் ஆசிரியர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்? இப்படிக் கூறினால் என்ன? என்று வித்தியாசமாகச் சிந்தித்துக் கேளுங்கள் என்று கூறுவார். எனக்குப் பிறகு நான் கூறும் கருத்துக்களை வரும்காலத்தில், ‘ஔவை இவ்வாறு கூறுவார்’ என்று நீதான் எடுத்துக்கூறவேண்டும் என்பார்.
ஏதாவது ஒன்றினைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது நான் கூறுவதையெல்லாம் அப்படியே சரி என்று ஏற்றுக்கொள்வதற்கு நீ தேவையில்லை. உனது கருத்தை, சரியானது எது என்று என்னிடம் பேசு என்று கூறும் ஏற்புத்தன்மை கொண்டவர். யாராவது தவறாக எந்தச் செயலையும் செய்தால் அதனைப் பார்த்து எரிச்சலடையாமல் பொறுத்திருந்து அறிவுரை வழங்கும் சகிப்புத்தன்மை கொண்ட பண்பாளர்.
அன்புப் பழம் ஔவை 75 -வது வயதைக் கடந்திருக்கிறார். அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை. வணங்குகிறேன். அவரால் நான் கல்வியுலகில் உயர்ந்துகொண்டிருக்கிறேன். எனது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் தந்தையாக இவர் வாழ்கிறார் என்பது எனக்குப் பெருமைதருகிறது.
இல. சுந்தரம்
துணைப்பேராசிரியர்
ஒருங்கிணைப்பாளர், கணினித்தமிழ்க் கல்வி
தமிழ்த்துறை, SRM பல்கலைக்கழக

Add a Comment