தொல்பொருள் ஆய்வுத்துறை, ஆசியவியல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு நிறுவனங்களிலும் சுவடித்துறை என்று உண்டு.
மேலும், கீழ்த்திசை சுவடிகள் நூல் மையம் என்ற ஒரு நிறுவனமும், டாக்டர் உ.வே.சா. நூலகமும், திருவனந்தப்புரம் பல்கலை திராவிட மொழிகள் ஆராய்ச்சி நிறுவனமும் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து வெளியிட்டு தமிழுக்கு வளம் சேர்க்கிறோம் என்று 40 ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொல்காப்பியத்திற்கு தெய்வச்சிலையார் உரையையும், சிலப்பதிகாரப் புகார் காண்ட உரையையும் ஓலைச் சுவடிகளிலிருந்து வெளியிட்டதாகத் தகவல் உண்டு.
தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் ஓலைச் சுவடிகளைத் திரட்டி வைத்திருப்பதாகவும், ஓலைச் சுவடியிலிருந்தே சில நூல்களை வெளியிட்டதாகவும் கூறுவர். திருக்கோவையார் பழைய உரையென்றும், திருக்குறள் பழைய உரையென்றும் வெளியிட்டார்கள்.
பள்ளியகரம் நீ கந்தசாமி பிள்ளை சரசுவதி மகால் செயலாளராக இருந்தபொழுது இலக்கண விளக்கம் பிரயோக விவேகம், தொன்னூல் விளக்கம் முதலிய நூல்களை இலக்கண இமயம் கோபாலையர் துணையோடு வெளியிட்டார். இந்தப் பணியே உருப்படியான பணி. இவையும் ஓலைச் சுவடிகள் வழி வெளியிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தாலும், அச்சிட பழம் பதிப்புகளையே மூலமாகக் கொண்டனர்.
தருமை ஆதினம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் ஆதினங்கள் ஓலைச்சுவடிகளைக் கொண்டு இருந்தாலும் அச்சிட பழம் பதிப்புகளையே மீள வெளியிட்டார்கள்.
எனக்குத் தெரிந்து ஓலை எழுதுவார்களை நான் காணவில்லை.ஆருடம், சாதகம், பொய் மருத்துவம், வரவு செலவுக் கணக்ககுகளைச் சிலவற்றைக் கண்டேன். அவைகளையும் அச்சுக்கு உதவாதென என்று தள்ளப்பட்டன.
நாகர்கோயிலில் அயல்நாட்டார் ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்குவதாகப் புரளி வந்ததால் பணையோலைகளை நறுக்கி வைத்துக்கொண்டு எழுத்தாணியால் சிலவற்றைக் கிறுக்கி, சாணியிட்ட குழியில் பல நாள் போட்டு வைத்து மீள எடுத்துக் காலத்தால் பழைய ஓலை என்று சொல்லி விற்பனை நடக்கிறது என்று எதையும் துருவிக்காணும் அறிஞர் வையாபுரியார் எழுதியிருக்கிறார்
இந்நிலையில்,ஒரு பல்கலைக்கழகம் 52,000 ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்திருப்பதாகவும், ஆக ஆண்டுக்கு ஒரு முறை 5 லட்சம் என்று கணக்கெழுதி தமிழ்நாட்டில் பணை மரங்கள் இல்லை என்று முடிவுக்கு வருவார்கள் போலத் தெரிகிறது.
சங்க இலக்கியத் தலைவி கட்டியிருந்த தழை ஆடையை ஆய்வாளர்கள் தேடிக் கண்டிருப்பதாகத் தகவல்.இவைகளைப்பற்றிய உண்மை விவரங்களை உ.வே.சா.விற்குப் பிறகு வெளிவந்த கூத்த நூல், ஐந்திறம் என்று வந்த திருக்கூத்துக்களையும் அறிஞர் சோ.ந.கந்தசாமி போன்றவர்களாவது உண்மை விவரங்களை எழுதுவாரா?

Add a Comment