ஆங்கிலம் அறிந்தால்
பேரறிஞர் அண்ணாவின் தம்பிக்கு கடிதம்-22.5.1960
ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது.
பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், – காணலாம் ஆங்கில மொழி மூலம்!
கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் – போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம், நெறிகளில் நேர்த்தி பெறலாம், ஆங்கில மொழியின் துணையால்.
உமார்கயாம் பாடலின் இனிமை, டாண்டே கவிதையின் கெம்பீரம், மில்டன் கவிதை காட்டிடும் உருக்கம், ஷெல்லி தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம், ஆங்கில மொழியின் அருந்துணைகொண்டு.
ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம், ஆங்கில மொழியின் துணைகொண்டு.
செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா – எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும்.
ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட், ஜோலா, டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பெர்ல்பக் – என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!
மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட, அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை – ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம்.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் “விஜயம்’ வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது.
நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன். ஆங்கிலத்தின் துணையுடன்
அக்ராவில் நடமாடலாம், ஆக்ராவிலும் உரையாடலாம், பீகிங்கில் பேசலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும், வாμங்டனானாலும் டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்!

Add a Comment