POST: 2013-06-23T17:32:16+05:30

அறிஞர்க்கு அறிஞராய்த் திகழந்த தனிநாயக அடிகள்

முனைவர் ஔவை நடராசன்-உரைச்சித்திரம்

தனிநாயக அடிகள் முதுகலை முடித்த நிலையில் ஆய்வு மாணவராக அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்த போதே நான் அவரைக்கண்டிருக்கிறேன்.

எந்தையார் மீது பரிவு கொண்ட நிலையில்,எவரையும் கவர்ந்த தோற்றத்தோடு மாநிறமும் மலர்ந்த விழிகளும் கொண்ட தனிநாயக அடிகள் தமக்கு வாய்த்திருந்த ஆங்கிலப் பெரும்புலமையோடு தமிழ் ஆர்வமும் ததும்பிப்பொங்க விளங்கியவர்.

தமிழுக்குத் தண்டமிழ்,வண்டமிழ்,பைந்தமிழ்,செந்தமிழ் என்னும் அடைமொழிகள் இருப்பன போலவே உலகத்தமிழ் என்னும் ஒப்பற்ற புகழாரத்தைத் தமிழன்னைக்குச் சூட்டிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும்.

மலேசியத்திருநாடு,தன் மலேசியப்பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிப்புலம் அமைத்தபோது தனிநாயக அடிகளை அறிஞர் மு அரசங்கண்ணனாருக்குப்பிறகு தகும் உயர்வளித்து மகிழ்ந்தது.

இந்நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் வலம் வந்த தனிநாயக அடிகள் தாம் சென்ற நாடுகளிலெல்லாம் செந்தமிழ் நாகரிகத்துளிகள் சிதறி இருந்ததைக்கண்டதோடு இந்தியத்திருநாடு என்றாலே வடமொழியும் இதிகாசங்களும்,வேதங்களும் மட்டுமே மண்டிக்கிடப்பதே என்னும் கருத்துதான் ஆய்வாளர்களிடையே பரவியிருந்ததையும் உணர்ந்தார்.

காலத்தொன்மையும் சாலப்பழமையும் வாய்ந்த கலையிலிக்கியக்கருவூலங்கள் நிரம்பியும் உலகளாவிப்பரவியும் இருந்த திராவிடப்பண்பாட்டின் ஊற்றுக் கண்ணாக அமைந்த தமிழின் பெருமிதத்தை ஆய்வறிஞர்களுக்கு முன்னால் அலைகடலைப்போல
ஆங்கிலத்தில் எடுத்துரைத்து உலகத்தமிழ் ஆய்வுக்கழகத்தை நிறுவிய பெருமிதமும் நெடிய
பெருமையும் தனிநாயக அடிகளுக்கே உண்டு.

பிரெஞ்சு நாட்டு பிலியோசா,ஆங்கில நாட்டு மார்,ஆஷ்ர்,செக் அறிஞராகிய கமில் சுவலபில்
ஆகிய பெருமக்கள் எல்லாம் ஒருங்கிணைந்த மாட்சியைத்தாம் பணியாற்றிய கோலாலம்பூரில் முதல் உலகத்தமிழ் மாநாடாக நடத்திக்காட்டினார்.

அறிவுலகதத்துக்கே புத்துணர்ச்சி பிறந்தது;ஆய்வுலகத்தில் புத்தெளுச்சி.தமிழ்,திராவிடபண்பாட்டுக்கூறுகளைப் பல்வேறு நாட்டு அறிஞர்கள் எழுதினர்.அதன் தொடர்ச்சியாக,பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நிகழந்தது.அந்த மாநாட்டில் தான் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சென்னை மாநகரில் தோற்றுவிக்க வேண்டுமென்றும்,உலக நாடுகெளல்லாம் ஒருங்கிணைந்து அந்நிறுவனத்தை ஒளிவிடச் செய்ய வேண்டும் என்றும் அடிகளார் நினைத்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *