POST: 2013-06-26T14:41:35+05:30

பேருரை கண்ட பெருஞ்செல்வர்

மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம்

பல்வேறு காலத்தமிழிலக்கியங்கள்,உரைகள்,வரலாறு,கல்வெட்டு,
சமயங்கள் என்றின்ன துறைபலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள்.

தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித்தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும்.

எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறு,நற்றினை,புறநானூறு,பதிற் றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரை விளக்கம் செய்தவர்.இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக்குறிப்பும் கல்வெட்டுக்குறிப்பும் மண்டிக்கிடக்கின்றன.

ஐங்குறு நூற்றுச்செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல்,விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறனைக் காண்கின்றோம்.உரை எழுதுவதற்கு முன்,ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெளிந்து வரம்பு செய்து கோடல் இவர்தம் உரையொளுங்காகும்.தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரை கண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஔவை துரைசாமி ஆவார்.இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப்பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று.

பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்த தெளிவும் உடையவராதலின் சிவஞான போதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார்.சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி சித்தாந்த கலாநிதி என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர்.

சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவகசிந்தாமணி,சூளாமணி,
யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச்செய்தவர்.

மதுரை குமரனார்,சேர மன்னர் வரலாறு,வரலாற்றுக்காட்சிகள்,நந்தாவிளக்கு,ஔவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

கடவுட் பற்றும்,சைவத்தெளிவும்,பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு பெற்று இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம் தமிழ்ப்பேழைக்குத்தாங்கொணாச் செல்வமாகும்.நூலுரை,திறனுரை,பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஔவை துரைசாமி நெடும் புகழ் என்றும் நிலுவுவதாக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *