ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)
ராஜ் தொலைக்காட்சி வழியாக, என்னைப் பற்றிய சில செய்திகளைச் சொல்லுகிற ஒரு வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
என் வாழ்வு இன்று வரை மாணவர்களைச் சூழ்ந்தே இருக்கிறது. மாணவர்கள், கலை ஆர்வலர்கள், இளைஞர்கள் என்று நான் எங்கே போனாலும், ஏழெட்டு இளைஞர்களுக்கு நடுவிலேதான் என்னைப் பார்க்க முடியும். எனக்குப் பெயர்தான் ஔவையே தவிர, நான் வேடிக்கையாகச் சொல்வது நான் இளமையானவன் என்று எண்ணி எல்லோரும் என்னிடம் அன்பாகப் பழகுகிறார்கள் என்று.
நான் பிறந்ததைப் பற்றிக் கேட்கிறீர்கள்.
என்னுடைய தந்தையார், உரைவேந்தர் என்றும் சிந்தாந்தக் கலாநிதி என்றும் நாடு புகழ்கின்ற பெரும் பேராசிரியராகத் திகழ்ந்த ஔவை துரைசாமி அவர்கள்.
என்னுடைய தாயார் லோகாம்பாள். சிற்றூரில் பிறந்தவர்கள். அவர்களுக்கு அவ்வளவாக எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் வாய்திறந்தால் பழக்கத்தால் மனனம் செய்த பாடல்களை, ஒரு நூறு பாடல்களையாவது சொல்வார்கள். அவர்களுக்கு நான் இரண்டாவது பிள்ளையாகத்தான் பிறந்தேன். எங்கள் பெயர்களைப் பார்த்தாலேயே தெரிந்து கொள்ளலாம் எந்த ஊரில் பிறந்தோம் என்று.
சான்றாக என்னுடைய தந்தையார், ஒரு மாநகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். நான் பிறந்த ஊர் செய்யாறு என்பதாகும். திருவற்றிபுரம் என்று கூடச்சொல்வார்கள். செய்யாறு அப்போது வடஆற்காடு மாவட்டத்தில் இருந்தது. இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது. எனக்கு அந்த ஊர் நினைவிலேயே இல்லை.
என்னுடைய தமக்கையார் பெயர் பாலகுசம் என்பதாகும். பாலகுசம் என்பது செய்யாற்று திருக்கோயிலில் உள்ள அம்பிகையின் பெயரை நினைவு கூர்ந்து வைத்திருக்கிறார்.
என்னுடைய தந்தையாரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிவிடுவார்கள். அவர் எழுச்சியானவர், உணர்ச்சியானவர், பல கருத்துக்களை எல்லாம் நாட்டுமக்களுக்கு அப்போது எடுத்துப் பேசியதில், அந்த மாநகராட்சி தலைவர்களுக்கெல்லாம் அவரை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்ற நினைப்பு இருந்தது. அதை இப்படிச் சொல்கிறேனே குறிப்பாக, என்னுடைய தந்தையாருடைய வளர்ப்பில் வளர்ந்த ஒரு மாணவர் திலகம்தான் மாபெரும் புலவராகத் திகழ்ந்த புலவர் கோவிந்தன். சட்டப்பேரவைக்குத் தலைவராக இருந்தவர். சங்க இலக்கியம், சமய இலக்கியம் எழுத்தெண்ணிக் கற்ற பெரும் புலவர். அந்த வகையில் அவரை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். செய்யாற்றிலிருந்து போளூர், போளூரிலிருந்து செங்கம் என்று மாற்றிக்கொண்டிருந்தபோது, அவருக்குச் செங்கம் வந்த பிறகுதான் என்று நினைக்கிறேன், திருப்பதியில் கீழ்த்திசைக் கலைக்கல்லூரியில் விரிவுரையாளர் என்ற வாய்ப்பு கிடைத்தது. எனவே எனக்கு வேறு ஊர்கள் நினைவில்லை.

Add a Comment