ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)-2
உங்கள் பெயரின் விளக்கத்தை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா?
சிவபாதசேகரன் என்பது இராஜராஜ மன்னனுடைய பெயர். பிறகு எனக்கு நினைவு தெரிந்தது, என்னைத் திருப்பதியில் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வருகிறது. நாங்கள் பிறந்தவர்கள் பதினோரு பேர். அப்படிக் கணக்கெடுத்தால். அவர் வைத்த பெயர்களையும் சொல்லிவிடுகிறேன்.
மணிமேகலை,
திலகவதி,
தமிழரசி,
திருநாவுக்கரசு,
திருஞானசம்பந்தன்
மெய்கண்டான்,
நின்றசீர் நெடுமாறன்
என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயர் வைப்பதற்கெல்லாம்கூட என்ன சூழல் என்பதை நீங்கள் அறிந்து மகிழத்தக்கதாகும்.
மணிமேகலை உரையெழுதும்போது பிறந்த பெண். திருநாவுக்கரசர் தேவாரத்திற்குப் பொருள் செய்தபோது பிறந்த பெண் என்றெல்லாம் நாம் சூழலை எண்ணிப்பார்க்கலாம். ஒன்று சொல்ல விரும்புகிறேன். அது எப்படி ஔவை நடராசன் என்று உங்களை அழைக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நான் திருப்பதியில் இருந்தபோது ஐந்து, ஆறு வயதுதான் இருக்கும். பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு என் தந்தையார் வந்து சேர்ந்த பிறகு, அப்போதுதான் நான் தொடக்கப்பள்ளியில் சேர்ந்ததாக நினைவு இருக்கிறது.தில்லைக்கு வந்தபிறகு, அண்ணாமலை நகரில் நான் இருந்தபோது என்னுடைய தந்தையினுடைய தாயார் (பாட்டியார்) என்னை அழைப்பதற்கு, இந்த சிவபாதசேகரன் என்ற பெயர் அவருடைய வாய்க்கு அவ்வளவாக வரமுடியாததால் நடராஜன் என்று அழைத்தார். அதிலும் அண்ணாமலை நகரிலேயே நான் பல்லாண்டுகள் இருந்த வகையில் நடராசன் என்ற பெயர் எனக்கு அமைந்துவிட்டது.

Add a Comment