POST: 2014-10-19T21:51:52+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)

என்னுடைய தந்தையாரைப் பற்றிச் சொல்வதென்றால், அவர் திண்டிவனத்திற்கு அருகில் ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அவர் பிறந்தபோது அவருடைய பெயர் துரைசாமி அல்லவா? அவரும் இன்னொரு துரைசாமியும் நெடுந்தொலைவு நடந்து வருவார்களாம் பள்ளிக்கு. அந்தப் பள்ளியின் பெயர் A A M உயர்நிலைப் பள்ளி என்பதும், அது டேனிஷ் பணிமன்றத்தால் நடத்தப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய தந்தையும் துரைசாமி அவரும் துரைசாமி என்று இருந்ததால் தமிழாசிரியர் சொன்னாராம், நீ ஔவை துரைசாமி என்று வைத்துக்கொள்ளட்டும். அவன் வெறும் துரைசாமி என்று இருக்கட்டும் என்று சொன்னார்களாம். அன்று முதல் அவர் ஔவை துரைசாமி என்று கையெழுத்திட ஆரம்பித்தார்.

ஊர்ப்பெயரை வைத்துக்கொள்வது மரபு என்று உங்களுக்குத் தெரியும். பசும்பொன் என்பது ஊரினுடைய பெயர்தான். எனவே புலவர்களெல்லாம் தன் பெயரைச் சொல்லாமல் போனாலும் ஊரைச் சொல்லுவது என்கிற வழக்கத்தில், ஒரு பழமொழி இருக்கிறது ‘ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே’. கோவூர் கிழார், கோவை கிழார், ஆவூர் மூழங்கிழார் என்று பெயர் வைத்ததுபோல ஔவை துரைசாமி என்று அவர் அழைக்கப்பட்டார். அது இருக்கட்டும்.

நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, நான் ஆங்கில முறைப்படி D. நடராசன் என்றுதான் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தேன். என் உடன் இருந்த மாணவர்களெல்லாம், பெண் பிள்ளைகள் அங்கே நடந்து போகும்போதெல்லாம், என்னடீ நடராஜன், என்னடீ நடராஜன் என்னடீ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உடனே நான் என்ன செய்வது என்று பார்த்தேன். துரைசாமி என்றதனால்
து. நடராசன் என்று பார்த்தேன். அதையும் கூட விடாமல், அப்போது அறியாப்பருவத்தில் து நடராசன், து நடராசன் என்றார்கள். இது என்னடா செய்துவது என்று பார்த்து, துரை. நடராசன் என்று பார்த்தேன். அதுவும் எப்படியோ ஒத்துவராமல் போய்விட்டது. பிறகு எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தந்தையாரையும் எப்போதும் எண்ணுவதற்குப் பயனாகவும் அவரே ஔவை என்று கையெழுத்திடுவதால், நான் ஔவை நடராசன் என்று அழைக்கப்பட்டது பச்சையப்பன் கல்லூரிக்கு வந்த பிறகுதான் அமைந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *