ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்
தங்களுடைய பள்ளி, கல்லூரி நாள்களைப் பற்றி பகிர்ந்துகொள்கிறீர்களா?
என்னுடைய பள்ளிக்கல்வி இராமசாமி செட்டியார் உயர்நிலைப்பள்ளி (கிளை) என்று அண்ணாமலை நகரில் இன்றுவரை புகழோடு திகழ்கின்ற பள்ளியாகும். நான் படித்தபோது எனக்குத் தலைமையாசிரியர், புர. சாமிநாதன் என்பவர் ஆவார். அவர் பெரும் புகழ்வாய்ந்த தலைமையாசிரியர் மட்டுமில்லை. தமிழகத்தின் அறிஞர்கள் பலரும் அவருக்குத் தெரியும். அவர் ஞானியார் அடிகளுடைய மாணவர் என்பது அவருடைய புகழுக்கு ஒரு சிறப்பைத் தருவதாகும். ஏறத்தாழ அவர் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோதெல்லாம், பேரறிஞர்கள் பலர் அந்தப்பள்ளியில் வந்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பேராசிரியர்கள், ஞானியார் அடிகளாரின் மாணவர்கள், இராமநாதன் செட்டியார், மா. பாலசுப்பிரமணிய முதலியார், யார்யாரெல்லாம் அவருக்குத் தெரியுமோ அவர்களெல்லாம் வந்து பேசுவார்கள். எனக்கு அது வியப்பாக இருக்கும். மிகப்பெரிய புகழ்வாய்ந்தவர்கள் வந்து பேசியிருக்கிறார்கள். ஒன்று சொல்வதென்றால் சர்.சி.பி. பேச நான் கேட்டிருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைக்கிற போது என்னுடைய மனத்தில் பெரிய ஒரு ஆர்வம் பிறந்தது.
என்னுடைய தமிழாசிரியர் தன்னிகரில்லாதவர். அவர் பெயர் புலவர் கணபதி என்பதாகும். குழுஉத் தலைவன் என்று எழுதுவார். கணம் என்றால் குழு, குழுஉத் தலைவன். அவர் கையெழுத்து முத்துமுத்தாக அச்சடித்ததுபோல் இருக்கும். அவர் நடந்து வருவதும், அவருடைய தன்னுடைய விரல் நகங்கள், கால் நகங்கள், வாரி முடித்த தலை, உடுத்திருக்கிற சட்டையெல்லாம் ஒரு தூய்மையினுடைய வடிவத்தைக் காட்டுகின்ற ஒரு தோற்றத்தோடு இருந்தது. தமிழார்வம் அவருக்குத் ததும்பியது. ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
என்னுடைய ஆசிரியரில் கணக்கு சொல்லிக்கொடுத்தவர் பெயர் காளஸ்திநாதன் என்பதாகும். அவர் எப்போது வகுப்பறைக்கு வந்தாலும், நாள்தோறும் Mahatma’s Maxims ஒன்று எழுதுவார். அதிலே ஒரு வேடிக்கை, தமிழாசிரியர் வந்தால் ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று எழுதிப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்று எழுதுவார். நான் இப்போது சொல்லுகிறேன். எங்கள் தமிழாசிரியராலேதான் பாரதிதாசன் கவிதைகளை 1000 வரிகளையாவது நாங்கள் மனனம் செய்கின்ற பழக்கம் வந்தது. எந்தப் பேச்சுப்போட்டி நடந்தாலும், பேரன்பு கொண்டோரே பெரியோரே, பெற்ற தன் தாய்மாரே, நல்லிளம் சிங்காங்காள், நீரோடை நிலங்கிழிக்க….. அந்தப் பாட்டு இருக்கிறதே, அதை அப்படியே சொல்லிச்சொல்லி ஊறுவோம். அந்தப்பாட்டில் அவ்வளவு பெரிய மயக்கத்தைத் தந்தார். என்ன பகுதி பாடுவார் தெரியுமா? மனோன்மணியத்திலிருந்து, போர்க்குறி காயமே புகழில் காயம், யார்க்கது வாய்க்கும் என்றெல்லாம் உணர்ச்சியோடு, அந்தத் தமிழின் எழுச்சியை எங்கள் உள்ளத்தில் ஊட்டியவர் புலவர் கணபதிதான். அதை எண்ணிப்பார்த்து நான் கூட நினைப்பேன், ஒரு நாள் நாம் இந்தப்பாடல்களை எல்லாம் திருப்பிச்சொல்லி, மக்கள் உள்ளத்தில் இப்படிப்பட்ட உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். புலவர் கணபதி அவர்கள் இன்னும் தில்லையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

Add a Comment