POST: 2014-10-21T09:15:25+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்

தங்களுடைய பள்ளி, கல்லூரி நாள்களைப் பற்றி பகிர்ந்துகொள்கிறீர்களா?

பள்ளிப் பருவத்திலேதான், நான் மெல்ல பத்தாம் வகுப்பு முடித்தபிறகு, என்னுடைய தந்தையார் மதுரைக்கு மாற்றலானார். மதுரை தியாகராசர் கல்லூரிக்கு நான் சென்றபிறகுதான், எனக்குக் கல்லூரிப்பருவம் தொடங்குகிறது. தியாகராசர் கல்லூரி, கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் பெயரால் அமைந்த ஒரு திருக்கோயில் என்று சொல்ல வேண்டும். தெப்பக்குளத்திற்கு அருகே, அந்த அறிவு மன்றம் மிக அழகாக அமைந்திருக்கும். அங்கே நான் சேர்ந்த வகுப்பு, இடைநிலைப் பல்கலைக்கழக வகுப்பு என்பதாகும்.

என்னுடைய மாமனாரும் அப்போது சென்னையில் இருந்தார். என்னுடைய மாமனாரின் திருமகள்தான், அப்போது மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த என் மனைவி டாக்டர் தாரா அவர்கள். நான் பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்றது ஏன் என்று கேட்டால், நான் மதுரையில் இருந்தபோது, என் வீட்டிற்கு ஒரு பால்காரார் வருகிறவர் தோளில் கயிறு சார்த்தியிருப்பார். கையில் கள்ளோ? காவியமோ? எடுத்து வந்து சொல்லுவார். அப்போது நாடெல்லாம் மு.வ.வினுடைய தனிப்பெரும்புகழ் ஓங்கியிருந்தது. எனவே மு.வ. வைக் கண்டால் போதும் என்கிற எண்ணத்தினால், நானும் என்னோடு உடன் இ.சு. பாலசுந்தரம் என்பவருமாக நாங்கள் இருவரும்தான் பச்சையப்பன் கல்லூரியில் வந்து சேர்ந்தோம். எங்களைப் பார்த்தவுடனேயே மு.வ. கேட்டது என்ன தெரியுமா? ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? வேறு படிப்பு படித்தால் கிடைக்கிற ஊதியம் இதில் வராதே! என்றார். நாங்கள் நகைத்தோம். எங்களுக்கு மிகவும் ஆர்வம் இருக்கிறது என்று சொன்னேன். ஆர்வம் இருந்தால் நீ தமிழை எப்போதும் படித்துக்கொள்ளலாம். நீ முயன்று வேறு படிக்க வேண்டாமா? என்று கேட்டார். பிறகு அங்கேயே பயின்றேன். அந்த மூன்றாண்டு பருவமும் என்னுடைய அறிவு வளர்ச்சிக்குப் பயன்பட்ட எழுச்சிக்காலம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *