POST: 2014-10-22T10:51:02+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்

படித்து முடித்தபிறகு தங்களுடைய வேலை தேடிய, வேலை பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்களா?

இந்த வகையில் நான் 1958 இல் என்னுடைய படிப்பை முடித்து, நான் மதுரைக்கு வந்த பிறகு, அப்போதெல்லாம் இப்படிப்போய் அலுவலுக்கு அலைய வேண்டியதில்லை. அந்த நேரத்திலேயே தந்தை சரபோஜி மன்னர் கல்லூரியில் துணை விரிவுரையாளர் (பயிற்றாசிரியர்) என்ற நிலையில் (அப்போது Tutor என்பார்கள், அது இப்போது இல்லை) அந்தப் பணியில் நான் தஞ்சையில் சேர்ந்தேன். நெஞ்சை விட்டு அகலாத தஞ்சையில் மாணவர்களைச் சுற்றித்தான் நான் நிற்பேன். அதிலும் பேசுவது என்பதும், 19மாணவர்களோடு கலந்து சிரிப்பது என்பதும், மகிழ்வது என்பதும், ஒரு பெரிய அரங்கம் போல இருந்தது. இந்த அழகில் நான்தான் விடுதிக்குவேறு காப்பாளராக இருந்தேன். எல்லோர் முன்னிலையிலும் விடுதியைக் காப்பதுபோல் இருந்தாலும், இரவு வேளையில் நானும் ஒரு 50 மாணவர்களோடு போய் திரைப்படத்தைப் பார்த்து வருவோம். அப்போது எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் பேராசிரியர் முருகையன். தமிழ்த்துறையின் தலைவர் பெயர் வெங்கடாசலம். ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். எனக்குத் தலைவராக இருந்த வெங்கடாசலம் அவர்கள், ஒரு கையில் வெண்சுருட்டும், இன்னொரு கையில் ஆங்கில நூலும்தான் வைத்திருப்பார். அதைப்பார்த்த பிறகுதான் நான் அவரிடத்தில் பழகும்போதெல்லாம், எனக்கு எப்படியோ இந்த ஆங்கிலக் காதலும் அப்போதே வளர்ந்ததனால், என் தந்தையாரைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். பகலெல்லாம் அவர் தமிழ் நூல்களுக்கு உரை எழுதினாலும்கூட, அந்திவேளையில் எளிமையாகப் படித்து மகிழவேண்டும் என்பதற்காக ஆங்கில நூல்களை ஆயிரக்கணக்கில் வாங்கி வைத்திருந்தார். அந்த வகையில் அவரிடத்தில் (வெங்கடாசலம்) போனவுடனே, நானும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னவுடனே, வேங்கடாசலம் அவர்கள் என்னை மகன்போல அரவணைத்துக் கொண்டார்.

பிறகு நான் அங்கே, எனக்கு வரவேண்டிய வளர்ச்சி வராதோ? என்று ஐயம் வந்தபோது, திடும் என்று நான் எப்போதோ விண்ணப்பித்திருந்ததனால், தென்கிழக்கு ஆசிய நேயர்களுக்கான ஒளிபரப்பு என்கிற துறையில் புதுதில்லியில் எனக்கு அந்தப்பணி கிடைத்தது. அப்போது தன்னந்தனியாகத் தில்லி மாநகருக்குச் சென்றேன். செல்லும் நேரத்தில் எனக்குத் தஞ்சையில் நாராயணசாமி ஐயர் என்பவர் ஒரு கடிதம் தந்தார். அப்போது செய்தி படிப்பவர் பெயர் நாகரத்தினம் என்பவர் ஒருவர். சரி என்று அவர் காட்டிய பரிவும், தொடர்வண்டியில் நான் செல்லும்போதெல்லாம் தமிழர்கள் அரவணைத்துக் கொண்டதும் எனக்கு ஒரு பெரிய பெருமிதமாக இருந்தது. குருவிக்கரம்பையில் வைரவத்தேவர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவருடைய இல்லத்தில்தான் நான் தங்கினேன். எப்படிப்பட்ட தாய் உள்ளம் தெரியுமா? வைரவத்தேவருக்கு? எனக்குத் தில்லியில் இருந்தாலும்கூட என்னைத்தவிர அந்தப்பணியில், அந்தப்பகுதியில் சேர்ந்திருந்தவர்களெல்லாம் ஐந்தாவது, ஆறாவது படித்தவர்கள். முதுகலையை முடித்துவிட்டு நான் இங்கே வந்தேனே என்று வருந்தத் தொடங்கினேன். எனக்கு இயக்குநராக இருந்தவர் பெயர் மினுமசானி. மசானி என்பவர் புகழ்வாய்ந்த ஒரு நாட்டின் தலைவர். அந்த அம்மையார் கேட்டார்கள், you go back to your place and try to get Doctorate a will become a great leader in Tamil என்று சொன்னார்கள்.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால் நான் சென்னைக்குத் திரும்பினேன். திரும்பியதும் அப்போதும் வேலை இல்லை. பிறகு தியாகராசர் கல்லூரியில் என்னுடைய தந்தையார் வேண்டாவெறுப்போடு என்னைப் பணியில் சேர்த்தார். நான் பணியாற்றுகிற இடத்திலே நீயும் பணியாற்றுவதா? என்றார். வேறு வழியில்லாமல் திக்குமுக்காடினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *