POST: 2014-10-24T10:16:22+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)

தமிழ்நாட்டரசு செய்தித்துறையின் துணை இயக்குநர் பதவி அனுபவத்தைப்பற்றி பகிர்ந்து கொள்கிறீர்களா?

நான் சென்னைக்கு வந்தபிறகு, இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலாளர் என்ற வகையில், எத்தனை பெருமக்களோடு பழகினேன். அறிஞர்கள் என்ற வகையில் எல்லாக் கட்சித் தலைவர்களோடும் நான் நெருங்கிப் பழகினேன்.

நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் மாணவனாக இருந்தபோதே, எனக்குத் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைத் தெரியும். நான் மாணவனாக இருந்தபோதே புரட்சித்தலைவர் என்மீது பரிவு காட்டியவர். நான் மாணவர் மன்றத்தலைவராக இருந்து ஒரு கடிதம் தந்ததைக் கொண்டு, உடனே அந்தக் கல்லூரி மாணவருக்கு, வேண்டிய சம்பளத் தொகையைக் கட்டுவித்த பொன்மனச் செம்மலையும் இப்போது எண்ணுகிறேன்

இந்த வகையில் இராமலிங்கர் பணிமன்றத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் இருந்தபிறகுதான், தமிழ்த்துறைக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா? என்று ஒரு கல்லூரி விடாமல் நடந்தேன், கிடைக்கவேயில்லை. தோல்வி பாருங்கள். இது தோல்விதானா? என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, நான் எல்லா நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்தேன். நான் விண்ணப்பம் அனுப்பிய கல்லூரிகளோ அல்லது நிறுவனங்களோ, என்னைவந்து பேச அழைத்தார்களே தவிர, பணி தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். சரி இதுதான் இராமலிங்கர் பணிமன்றமே நமக்கு வாழ்வு என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, எனக்கு வாய்ப்பாக என்னுடைய வேண்டுகோளைக் கருதி உடனடியாக என்னைப் பணியில் செய்தித்துறையின் துணை இயக்குநராகப் பணியில் தமிழ்நாட்டு அரசில் சேர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான். அவருடைய உரைநடையும் அவருடைய கவிதை நெருக்கையும் வைரம் போன்ற வசனங்களையும் சொல்லிச்சொல்லிப் பழகிய வாய் என்ற வகையில், அவர் இந்தப் பணி தந்தவுடனேயே, அருட்செல்வரிடத்தில் மெல்லபோய் பணிந்து நான் அரசுப்பணிக்குப் போகிறேன் என்றபோது, விடுவிக்க மனமில்லாமல் சென்று வருக! எந்த நேரத்திலும் நீங்கள் திரும்பி வரலாம் என்று அனுப்பினார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *