POST: 2014-10-25T10:44:37+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)

ஒப்பற்ற புரட்சித்தலைவருடன் நீங்கள் பழகிய அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்கிறீர்களா?

புரட்சித்தலைவர் அவர்கள் என்னை மிக நன்றாக அறிந்தவர். நான் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்தபோதே தெரிந்தவர். நான் அந்தப் பணியில் சேர்ந்தபோதே அவரிடத்தில் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அவர் பதவியேற்றபோது, தலைமைச் செயலகமே அப்படியே குலுங்கியது, அவரைக் காண்பதற்கு மக்கள் வெள்ளம் திரண்டது. அலுவலர்கள், உயர் அலுவலர்கள் எல்லாம் நின்றபோது, நானும் கைகட்டி நின்றேன். இங்குதான் இருக்கிறீர்களா? என்று தோளில் ஒரு தட்டு தட்டினார். நல்லவேளை, அவர் தட்டிய வேகத்தில் தோள் முறிந்திருக்கவேண்டும். பிறகுபாருங்கள்….. ஒரு ஆறு மாதம் அவர் எதற்குமே என்னை அழைப்பதே இல்லை. அவருடைய கோப்பையே நான் மொழியாக்கம் செய்து அனுப்பினால்கூட, அவர் ஒரு புறமும் பார்த்ததில்லை. நான் காத்துக்கொண்டே இருந்தேன். ஒரு வேளை நம்மீது அவருக்கு அன்புதானே தவிர, கோபம் வராதே! ஒருவேளை நம்மைப்பற்றிப் பிறர் ஏதாவது சொல்லியிருப்பார்களோ? அல்லது என்னவோ? அப்படியெல்லாம் கூட நினைக்க முடியாது. என்னைப் பற்றி இதுவரையில் யாரும் எவரிடத்திலும் எதையும் கோல் சொல்வது என்கிற கருத்துக்கு நான் இடந்தந்ததில்லை.

ஆறு திங்கள் கழித்து, ஒருநாள் என்னை அழைத்தார். நான் எப்போதுமே கைகட்டி நின்று அண்ணா! என்றுதான் கூப்பிடுவேன். நான் கூப்பிடலன்னா, துர வரக்கூடாதா? என்று கேட்டார். என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டது. இல்ல அண்ணா! நான் எப்படி அண்ணா உங்களை வந்து பார்க்க முடியும்? ஏன் பார்க்கக் கூடாது? நான் ஒன்றுமே சொல்லவில்லை. நான் வணங்கிவிட்டு, அண்ணணுக்கு ஓய்வு நேரம் ஏதாவது கிடைக்குமானால், நான் காத்துக் கொண்டிருக்கிறேன் எந்த நேரத்திலும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

தமிழ்நாட்டரசின் பல பதவிகளை வகித்தவர் நீங்கள். அந்த வகையில் அரசின் செயலராகவும் நீங்கள் இருந்தீர்கள். அந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்கிறீர்களா?

வேங்கடசுப்பிரமணியம் என்ற ஒரு பெருந்தகை கல்வித்துறையின் தலைவராக இருந்தவர். அவர் என்னிடத்திலே சொன்னார்.

துணிந்துகேள்! அரசுச்செயலாளர் என்ற பொறுப்பைத் தாருங்கள், தமிழ் வளர்ச்சியின் தொடர்பாக ஒரு பத்து துறைகள் இருக்கின்றன, அந்தப் பத்து துறைகளையும் ஒரு துறையாக்கி அரசுச்செயலாளர் என்று கேளுங்கள். சட்டத்துறையில் அப்படிச் செயலாளர் தருகிறார்கள். மைய அரசில் அணு ஆராய்ச்சித் துறைக்கு அப்படிச் செயலாளர் உண்டு. இது விதிவிலக்கல்ல. ஒரு மதிவிளக்கத்திற்குப் பயன்படும் என்று சொன்னார். நான் இதைச் சொன்னவுடனே கேட்டார். சொன்னதையெல்லாம் எழுதிக்கொடுங்கள் என்றார் புரட்சித்தலைவர்.. வெள்ளிக்கிழமை என்று அதை வாங்கிக்கொண்டு, நம்முடைய இணையமைச்சரைப் பார்த்துச் சொன்னார். திங்கள்கிழமை 11 மணிக்கு நான் உங்களுக்கு விடை சொல்கிறேன். நான் தில்லி செல்கிறேன் என்றார். நம்புவீர்களா? திங்கள்கிழமை 11 மணிக்கு எனக்குத் தொலைபேசி வந்தது (வீட்டுத்தொலைபேசி). என்ன செயலாளரே எப்படி இருக்கிறீர்கள்? என்று புரட்சித்தலைவர் கேட்டார். நான் உடனே தோட்டத்திற்கு ஓடினேன். நீங்களே, தலைமைச் செயலாளர் சொக்கலிங்கம் அவர்களிடத்திலே போய் சொல்லி, அதற்குரிய ஆணையை இப்போதே பெறுங்கள் என்று தந்தார். அப்படித்தான் நான் அரசுச்செயலாளர் ஆனேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *