ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)
..
உங்களுடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
என்னுடைய மக்களில் தாயைப்போலவே, முதல்மகன் கண்ணனும் ஒரு மருத்துவரையே மணந்து, ஆஸ்திரேலியாவில் பிரிஸ்மன் மாநகரில் வாழ்கிறார். என்னுடைய மூன்றாம் மகனோ, பரதன் என்ற பெயர். பரதன் என்று சொன்னால் ஏன் பெயர் வைத்தீர்கள் என்பார்கள். பரதன் என்றால் தாங்குபவன் என்று பொருள். இரண்டாவது அண்ணாவுக்குப் புனைபெயர் பரதன் என்று வைத்து எழுதினார். அப்போது அண்ணாவிடம் ஏன் பரதன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, எனக்குத் தலைவர் இராமசாமி தானே என்றார். அந்த வகையிலே பரதன் என்ற பெயரில் எனக்கு மிகவும் ஒரு, பங்கமில் குலத்து பரத நம்பி, ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோ என்ற தொடரைப் பார்க்கும்போது அவனுக்குப் பரதன் என்று வைத்தேன்.
இரண்டாம் மகனைப் பற்றிச் சொல்லவேண்டும். என்னை விடச் சிவந்த மேனியாகவும், பார்கிறவர்கள் பலருக்கு நீங்கள் ஔவை மகன் என்று சொல்லமலே தெரிகிற அளவுக்கு, ஆர்வம் ததும்ப விளங்குகின்ற அருள். அவனுக்கு ஆங்கிலத் திறம் உண்டு. நான்தான் வலியுறுத்தி, இரண்டுபேரும் மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். எனக்கென்று நீ தமிழ் படி என்ற நான் தள்ளி, தமிழ் படிக்கவைத்தேன். அவனும் விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் முதுகலை முடித்தான். அவன் முதுகலை முடிக்கும்முன்பே ஒரு பணியில் சேர்ந்துவிட்டான். அவனுடைய தனி ஆற்றலால் ஒரு விளம்பரத்துறைக்குத் துறைத்தலைவராகவே விளங்கினான். பிறகு நான் வலியுறுத்தியதால், அவன் எம்.லிட்., பட்டம் பெற்றான். பிறகு அவன் தில்லி மாநகரிலேயே பணியேற்று இருந்ததனால், தில்லிப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அங்கே பதிவு செய்துகொண்ட தலைப்பு, ஷேக்ஸ்பியர் நாடகத் தமிழ்மொழி பெயர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நுணுக்கமான ஆய்வை ஆங்கிலத்திலேயே எழுதினான். அந்தவகையில் தமிழ்க் கல்வியெல்லாம் பயின்றபிறகு, அவன் திருமணம் என்ற வகையில், மூத்த மகனுக்கும், மூன்றாம் மகனுக்கும் மருத்துவர்களே மணந்துகொண்டதுபோல, இவனுடைய துணைவியாரும் வாணி என்பவர் பொறியியலில் வல்லவர். அதுவும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறையில் தலைமை தாங்குபவர். அதனால் அவர் பல நாடுகளுக்குச் செல்லுகின்ற வாய்ப்பு இருந்ததனால், அருள் தன்னுடைய பணியில் இருந்தபடியே, அவன் செல்லாத நாடுகள் இல்லை. இலண்டன் மாநகரத்திலேயே தங்கிவிடுவார்களோ என்ற அச்சம் எனக்கு வந்ததாலும், நான் அப்போது கேட்டேன், இரண்டு பிள்ளைகளும் இல்லை. இவன் என்னோடு இருக்கவேண்டும் என்பதற்காக, அவனுடைய தமிழ்த்தகுதியைக் கல்விப் பட்டங்களைக் கருதிப்பார்த்து, என்னை எப்படி திடும் என்று மொழிபெயர்ப்புத்துறை இயக்ககத்தில் சேர்த்தீர்களோ அதுபோல அவரையும் கருதிப்பார்க்கவேண்டும் என்று நான் வேண்டினேன். வேண்டியதனால், அப்போதைய முதலமைச்சர் வழங்கிய பரிசுதான் அவன் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகத் திகழ்கிறான். எனவே எனக்கு எந்தக்குறையும் இல்லை.
எனை ஈன்ற தந்தைக்கும் மக்கள் இனம் ஈந்த தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால், செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும் என்ற தொடரையே சொல்லி, தமிழ் உண்டு, தமிழ் உண்டு, தமிழ் மக்கள் உண்டு, நாளும் தமிழுக்குச் செய்வோம் நல்ல தொண்டு என்று என் வாழ்க்கையில் விரைந்த ஒரு ஓட்டத்தில் எனக்கு நினைந்த கருத்துகளை முறையாகச் சொல்லியிருப்பேனோ என்ற ஐயத்திலேயே என் கருத்தை முடித்துக்கொள்கிறேன்.

Add a Comment