POST: 2014-10-29T06:31:00+05:30

பேராசிரியர் நாகநந்தி நினைவுப்பொழிவு-
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

நாகநந்தி அவர்களை நினைவுகூர்வது எனக்கு மகிழ்ச்சியாகவும்,நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்னும் பல்லா ண்டுகள் அவர் நலத்தோடு வாழ்ந்திருக்கலாம் என்று நான் ஆர்வத்தோடு நம்பியவன். நான் சிட்னி மாநகருக்குச் சென்று,நான் அங்கே சில திங்கள் தங்கியிருந்து திரும்புகிறேன் என்ற வகையில்தான் அவர் சென்றதும்கூட எனக்கு நினைவிருக்கிறது.

பேராசிரியர் நாகநந்தி, அவர் எந்த ஆண்டு பயின்றவர் என்று என்னால் நினைவுகூர முடியவில்லை. எனக்கு அவரோடு பழக்கமும் நெருக்கமும் பாரதி கலைக்கழகத்தால் தான் நேர்ந்தன. பாரதி கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய தொடர்ப்பொழிவுகளும், அவர் எடுத்துரைத்த கருத்து விளக்கங்களும், பலரும் பாராட்டிச் சொன்னபிறகு தான், நானே போய் அவருடைய ஏழெட்டுமுறை அவருடைய கூட்டங்களில் நேரில் பங்குகொண்டிருக்கிறேன். இரண்டொரு நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கியிருக்கிறேன்.

நாகநந்தியினுடைய தோற்றமே கூட ஒரு அழகான தோற்றம். அந்த செந்நிறமான தோற்றத்தில் அவர் வெள்ளை உடையோடு, இறுக்கமான ஜிப்பாவை அணிந்துகொண்டு, அந்தமீசை, அது எப்படி அவ்வளவு கருப்பாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தக் கரியமீசையும், நான் அப்படி நினைப்பது, இத்தகைய தோற்றப்பொலிவை நான், நா. பா. அவர்களிடத்தில் கண்டிருக்கிறேன். அந்த எடுப்பான தோற்றத்தோடு, அவர் மிடுக்காக நின்றுபேசுகின்ற முறையே கூட புதுமையான முறைதான். நான் இப்படி நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து என்றெல்லாம் பொதுவாகப் பேராசிரியர்களெல்லாம் பேசுவதற்கு அஞ்சுவார்கள். வேறொரு இலக்கியத்தைச் சார்ந்து நிற்பதும் அல்லது இன்னொரு மேற்கோளுக்கு விளக்கம் சொல்வதுமாக இருந்த புலவர்களுக்கு நடுவில், நாகநந்தி அவர்கள், அவர் இயல்பாகவே, நாடக உணர்ச்சிவாய்ந்தவர் என்ற வகையிலும், நாடகங்களை எழுதுவதிலே பெரியநாட்டம் கொண்டவர் என்ற வகையிலும், அவர் நின்று பேசுவதேகூட, உணர்ச்சியோடும், துடிப்போடும், சில நேரங்களில் வெகுண்டு பேசுவது போலவும் அவர் ஆற்றிய உரைகளெல்லாம் பெருமிதமான உரைகளாகும்.

எளிதான ஆத்திச்சூடியின் தொடர்களைக்கூட மூன்று வகையாகப் பொருள் காணலாம் என்று ஒருமுறை அவர் எடுத்துக்காட்டினார். பாஞ்சாலிசபதத்தை நாடக வடிவத்தில் அமைத்ததோடுஅவரே கூட நடித்தார் என்று நினைக்கிறேன். பாரதியார் பாடல்களை எத்தகைய பழந்தமிழ் மரபோடு நாம் ஒத்துக்காணலாம் என்பதற்காகத் திருவள்ளுவரையும் பாரதியாரையும் இணைத்து நுணுக்கமாக உரையாற்றியது எனக்குத் தெரியும். பேராசிரியருடைய இயல்பைப்பற்றிச் சொல்வதென்றால், குறுக்கே எழுந்து எவராவது மறுத்து நின்று கேள்விகேட்டால், அவரால் பொறுத்துகொள்ளமுடியாது. அவர் உடனே, என்னுடைய பேச்சுமுடிகிறவரையில் இருங்கள். பிறகு உங்களுக்கு நான் விளக்கம் சொல்வேன் என்றுசொல்வார். நாகநந்தி என்ற புலமையரே வீரப்பெருமித த்தையும், நான் நினைக்கிறேன்,
புலிகேசி அரசனுக்கு இளவல் பெயர் தான் நாகநந்தி. கல்கியின்மீதுஅவர்கொண்டகாதல், நாகநந்தி எப்படி துணிந்து நின்று, துறவுக்கோலத்தில் இருந்தபோதும், தன்நெஞ்சில் பட்டதை எடுத்துரைக்கிற ஒருதிறம் பெற்றவராகத்திகழ்ந்தாரோ, அதுபோலத்தான் பேராசிரியர் நாகநந்திவிளங்கினார்.

நாகநந்திஅவர்களுக்கு, அவர் பெயர் வேணுகோபாலன். அவர் சீர்த்திருத்தச்சிந்தனையாளர். சீர்த்திருத்தச்சிந்தனை என்று சொன்னால், பகுத்தறிவின் எல்லைக்கே போய் நின்று சிலநேரங்களில் கருத்துக்களைச்சொல்வார். நான் கூட ஆலயமுற்றத்தில் இருந்து கொண்டு, இவ்வளவு அஞ்சாத கருத்துக்களை எடுத்துச்சொல்கிறாரே என்று நான் மருள்வதுண்டு. அவர் தன்னுடைய எண்ணப்போக்கில், சங்க இலக்கியங்களையும், பிற தமிழ்க்கருத்துக்களையும், ஒரு மீளாய்வு செய்யவேண்டும் என்ற பெரிய நோக்கம்கொண்டிருந்தார். அவருடைய வாழ்வினுடைய கனவாக இருந்தது, பாரதிகளஞ்சியம் என்ற ஒருபெருந்தொகுப்பை, பாரதியார் பயன்படுத்திய சொற்கள், தொடர்கள், அவை பிறந்த சூழல், அந்தத் தொடருக்கள் நுழைந்து நாம் எத்தகைய பொருளைக்காணவேண்டும் என்ற வகையில், பாரதிபித்தனாகவே வாழ்ந்தார் என்று நான் பலமுறை அவரைப்பற்றி மேடைகளில் சொல்லியிருக்கிறேன்.

பேராசிரியர் வேணுகோபாலன்அவர்கள், வகுப்புகளில் தமிழ் இலக்கியம் நடத்திய வகையில் அவருடைய எடுத்துச்சொன்னமுறையையும், அவர் கருத்துக்களை விளக்கிய அழகையும்,கவினையும் கண்டு மாணவர்கள் பலரும் மயங்கி, அவரைப்போலவே தங்கள் வாழ்க்கையில் மாறவேண்டும் என்றுஆர்வப்பட்டவர்கள் சிலரை நான் நன்றாக அறிவேன். அந்தவகையில் இங்கே பாரதி கலைக்கழகத்தில் அண்மையில் கூட (மூன்று மாதங்களுக்கு முன்னர்) நாகநந்தி அவர்களின் நினைவு நாளைக் கொண்டாடினார்கள். கொண்டாடினார்கள் என்றால் அவரைப்போற்றிப்பெருமிதமாக, அவருடைய கருத்துக்களைப் பாராட்டிப் பேசினார்கள். பேராசிரியர் வேணுகோபாலன்
துணைவியார் கூட அப்போது அங்கே இருந்து, அவர்கள் குடும்பத்தின் சார்பில் ஒரு நிதியத்தை வழங்கியதைக்கூட நான் நினைவுகூர்கிறேன்.

பேராசிரியர்கள் என்றால், பழைய மரபுடைய பேராசிரியர்களையும் புதுநோக்கில் திறனாயும் பேராசிரியர்களையும், கண்டுவந்த தமிழ் உலகத்திற்கு நாடக உலகத்தில் நாட்டம் கொண்டு, நாடக உலகத்தினுடைய நுணுக்கங்களையெல்லாம் தமிழில் படைத்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், தானே கூட நடித்துக்காட்டுகிற அளவுக்கு, நாடகங்களை அவர் புனைந்திருக்கிறார். நடிப்புத்திலகமாகத் திகழ்ந்த மனோகர் அவர்கள், இலங்கேசுவரன் என்றெல்லாம் புராணிகமரபைச் சார்ந்த நாடகங்களையெல்லாம், அந்த உடைகள், நடைகள், அணிகலண்கள், மகுடங்கள் இவைகளை வைத்துக்கொண்டு நாடகம் நடித்துக்கொண்டிருந்த நிலையில், துரியோதனைனக்கூட தலைவனாகக் கொண்டு, ஒருநாடகம் புனையவேண்டும் என்று ஒரு மாற்றுச்சிந்தனையை வரைந்துகாட்டவேண்டும். துரியோதனன், தன் வகையில் அரவக்கொடியுடையவனாக இருந்தாலும்கூட, அவன் மனம் எப்படி, அரசப் பொறுப்புக்காக எப்படி நெகிழாமல் இருந்த உறுதித்தன்மையைக் காட்டவேண்டும் என்றெல்லாம் அவர் நாடகம் புனைந்தார் என்று நான் கேட்டிருக்கிறேன்.

ஒய்வுபெற்றபிறகு, பாரதி களஞ்சியத்தை அவர் வெளியிடுவார் என்று நான் ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தேன். பேராசிரியருடைய நிறைவும், அவருடைய குடும்பத்தினுடைய பொறுப்புணர்ச்சியும் என்மனத்தைப் பெரிதும் நெகிழ்விக்கின்றன. நண்பர் நாகநந்தி, என்னைப்போல என்று நான் நினைக்கமுடியாத காரணம், நான் ஒன்றா? இரண்டா? மூன்றா? என்று சொல்லமுடியாத நோய்களுக்கிடையில் நொந்துவருந்தினாலும், நாகநந்தி அவர்கள், நிமிர்ந்த தோற்றத்தோடு, நல்லுடலோடுதான்அவர் சென்றார். எதிர்பாராத அவருடைய முடிவு, நமக்குக் கலக்கத்தைத் தந்தது. நண்பர்கள் சிலர் அப்போதே அவர் ஆற்றிய உரைகளையெல்லாம், பதிவுசெய்திருக்கிறார்கள் என்று நண்பர் அரிகண்டன் கூறுவதைக் கேட்டு நான் சிலிர்த்துப்போனேன். அந்த உரைகளையெல்லாம், மீளவும் கேட்டு, அந்த வகையிலேயே,சிந்தனைத்தடத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர்கள் பெருகவேண்டும் என்பதுதான் என்னுடைய நினைவாகும். அவருடைய இயற்பெயர் வேணுகோபாலன் என்று இருந்தாலும்கூட, நாடு முழுவதும் இன்று பாரதி அன்பர்கள், என்று திரண்டிருக்கிற தமிழக மக்கள் அனைவர் நெஞ்சிலும் நாகநந்தியினுடைய பேச்சும், உரை வீச்சும் என்றும் நினைக்கத்தக்கனவாகவே திகழ்கின்றன.

Click here to Reply or Forward

12.5 GB (83%) of 15 GB used

Manage

©2014 Google – Terms

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *