நேர்காணல்-14.3.2011
பத்மஸ்ரீ ஒளவை நடராசன் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள், தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்பு குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.2011 மார்ச் 14 அன்று, சென்னை, தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் இந்த நேர்முகம் பதிவானது. உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ஏதும் இருக்கிறதா? என்ற அவரின் கேள்வி, ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. அவருடனான குரல் நேர்காணலை, இங்கே படிக்கலாம்.
கேள்விகளைக் கேட்பவர்: அண்ணாகண்ணன்:கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.
கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன?
பதில்: எனக்கு இப்போது வயது 75 ஆகிறது. ஓலைச்சுவடிகளையெல்லாம், திரட்ட வேண்டும், அவற்றைத் தொகுக்க வேண்டும், என்று அறுபது ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஆண்டுதோறும் பேராசிரியர்களும், அறிஞர்களும், மாணவர்களும், ஆர்வலர்களும், அறநிலையத்துறையைச் சார்ந்தவர்களும் தேடித்தொகுத்ததாக 1 இலட்சம் ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன என்று சொல்லுகிற கணக்குபடிப் பார்த்தால் இந்த அறுபது ஆண்டுகளில் ஏறத்தாழ 60 இலட்சம் ஓலைச்சுவடிகளைத் திரட்டியிருக்க வேண்டும்.எனக்கு இதுவொன்று விளங்கவில்லை. ஏனென்றால், ஓலைச்சுவடிகள் துறை என்றே ஒரு துறை, அரிய கையெழுத்து ஏடுகளை உடைய துறை என்று ஒரு துறை. இரண்டு துறைகளும் தனித்தனிப் பேராசிரியர்களையும், துணைப்பேராசிரயர்களையும், ஆய்வு மாணவர்களையும்கொண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏன் 20 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறது? உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்கூட சுவடிப்புலம் என்று அமைத்து, சுவடிகளைத் திரட்டுவது என்ற பணியும் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையில்கூட ஓலைச்சுவடிகளைத் திரட்டுவது என்பது ஒரு துறையாகவும், ஓலைச்சுவடிகளைத் திரட்டுவதற்காகவே மாணவர்களுக்குப் பயிற்சி தருவது என்பதோடு சுவடிகளை எப்படிப் படிப்பது? என்பதற்குரிய வகுப்புக்களை நடத்துவது என்றெல்லாம், அறிஞர் நாகசாமி ஆர்வம் காட்டியது எனக்குத் தெரியும். அவ்வளவு தூரம் செல்வானேன். இன்றுகூட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சுவடிப் பயிலரங்கு, 4 நாட்களாக நடைபெறும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
ஏதோ ஓலைச்சுவடி என்று சொல்வது கிட்டத்தட்ட நாடிபார்ப்பது என்று சொல்லுவதுபோல ஒரு மோடி வித்தை காட்டுவதுபோல வாய் திறந்தால், தமிழ் வளர்ச்சி என்றால் ஓலைச்சுவடிகளின் தொகுப்பு என்று பேசுவதுபோல எனக்குத் தெரிகிறது. ஏனென்றால், தமிழ் கலைகளுக்கெல்லாம் தந்தை என்றும் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதித்த பாட்டனார் என்றும் நாம் பாராட்டி மகிழ்கின்ற அறிஞர் உ.வே.சா.வுக்குப் பிறகு, பொருத்தமான, திருத்தமான, சிறந்த இலக்கியம் புதிதாக ஓலைச்சுவடியில் இருந்து யாரும் பெயர்த்து எழுதவும் இல்லை. பதிக்கவும் இல்லை.

Add a Comment