நேர்காணல்-14.3.2011 -2
கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன?
பதில்-என்னுடைய தந்தையார் புறநானூற்றை அவர்,உரையோடு பதித்தார். நற்றிணையும் கூட உரையோடு பதித்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் நற்றிணை பதிப்புக்காக ஒரு பத்து பன்னிரண்டு ஓலைச்சுவடிகளைப் பையிலிருந்து யாரோ கொடுத்தார்கள் என்று கொண்டுவந்து தமிழாசிரியர்கள் மூவர் நால்வர் இருந்து நற்றிணை பாடல்களையெல்லாம் படித்துச் சில ஆண்டுகளைக் கழித்தார்கள். பிறகு சோர்வாக ஒரு முறை சொன்னார், பின்னத்தூராருக்குக் கிடைத்த ஏடுகள்தான் மீளமீள எனக்கும் கிடைத்தனவே தவிர புதிய ஏடுகள் என்று சொல்வதற்கில்லை.அப்படியே தொடர்கள், சொற்கள் என்று சில மாறியிருக்கலாம். ஏறத்தாழ ஓலைச்சுவடிகள் என்று 1900த்தின் தொடக்கத்தில் என்று பார்த்தால், தமிழகத்தில் படித்தவர்களுடைய எண்ணிக்கையைக் கணக்கில் வைத்துப்பார்த்தால், இலக்கிய வகையான ஓலைச்சுவடிகள் எல்லாவற்றையுமே உ.வே.சா.அவர்கள் திரட்டிவிட்டார்கள் என்றே நாம் மனநிறைவு கொள்ளலாம். அவருக்குக் கிடைக்காத ஓலைச்சுவடிகள் என்று என்னால் ஒன்றையும் சொல்லமுடியவில்லை.
மந்திரம், மாயம், தந்திரம், வாகடம்,மருத்துவம், ஆருடம், மகளிர் அழகு நலன்கள், பருவமடைந்தால் ஏற்படுகின்ற மாற்றம், யானைகளைப் பற்றியது, குதிரைகளைப் பற்றியது என்ற பொய்க்கதைகளினுடைய மூட்டைகளாக, போலிச்சுவடிகள்தான் ஓலைச்சுவடிகள் என்ற பெயரில், வண்டிவண்டியாக எழுதப்பட்டனவோ, என்ற ஒரு ஐயம் இருக்கிறது.ஏனென்றால் திங்கள்கிழமை பருவமடைகின்ற பெண்ணுக்காகவே ஓலைச்சுவடிகள் இரண்டு என்றால்,இல்லையென்றால் அகராதிப் பொருள் சொல்லுகின்ற நிகண்டுகளே 1000 ஓலைச்சுவடிகள் என்று பார்த்தால் பக்கத்தின் கணக்கோ, அல்லது பாழாய்ப்போன ஓலைச்சுவடிகள் ஒடிந்துபோனபிறகு முடிந்திருப்பதை நாமாக, நிறைவுசெய்வது என்ற வகையிலோ, அந்த ஓலைச்சுவடிகளெல்லாம் அந்த நிலையில்தான் நான் கண்டேன். இதிலே தொன்மையான கருத்துகளை எழுதுவதற்கு ஓலைதான் சிறப்புடையது என்று குழந்தைகள் பிறந்ததும், (கடிப்பதற்கு)படிப்பதற்கு ஓலைச்சுவடியில் எழுதுவதும் அல்லது ஓலைச்சுவடியில் எழுதிவைத்தால், வாழ்வு நீளும் என்கிற கதையும் இருப்பதால்,எழுதினார்கள்.
எனக்குத்தெரிந்து நான் 85 வயது முதியவர்களைக் கண்டு பேசும்போது கூட நான் ஓலைச்சுவடியில் எழுதுபவர்களைப் பார்த்ததில்லை என்றுதான் சொல்கிறார்கள். அப்படியே எழுதினாலும்கூட ஓர் இரண்டொரு தொடர்கள், அல்லது மூன்று தொடர்களைத்தான் ஓலைச்சுவடியில் அவர்களால் எழுதமுடிந்ததே தவிர அந்தப்பழக்கம் ஒர் 150 ஆண்டுகளுக்கு முன்பே நின்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
வள்ளல் பெருமானைப்பற்றி நான் அறிந்த வகையில் அவர் பாடல்கள் சிலவற்றை ஓலைச்சுவடியில் எழுதத்தொடங்கினார் என்றும் ஓலையில் எழுதியதாகவும் பின்னர் அவர் வெள்ளைத்தாளில் அந்த நாளில் பழுப்புத்தாளில் கடுதாசியில் எழுதினேன் என்று எழுதுகிறார். எனவே அப்போது தாளில், மையில் கையும் மையுமாக எழுதுகின்ற பழக்கம் வந்துவிட்டது. வந்ததுமட்டுமில்லாமல் அந்த நாளில் ஓலைச்சுவடிகளாக உள்ள நூல்கள் என்று ஏடுகள் என்று இருக்குமானால், அவற்றை விலையில்லாமலே நாங்கள் வெள்ளைத்தாளில் பதிக்கிறோம் என்று கூறியதாகவும், அதனால் ஓலைச்சுவடிகளைப் பலர் குவியலாகக் கொடுத்து, வெள்ளைத்தாளில் அதை மீள அச்சில் கொண்டார்கள் என்று சொல்லுகின்ற நிகழ்ச்சியும் நான் கேட்டிருக்கிறேன்.
மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் நூல்கள் அச்சிடக்கூடாது என்றுகூட ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக நான் எங்கோ படித்திருக்கிறேன்.இது ஒரு நல்ல முயற்சிதான் என்றாலும், சேற்றில் செந்தாமரை முளைக்கும் என்று உண்டே தவிர சேற்றில் கைவைத்தபடியே நண்டும் நத்தைகளையும் எடுத்துப்போட்டு, நாளெல்லாம் நம்முடைய உழைப்பை வீணாக்குகிறோமோ? என்ற அவலம்தான் எனக்குத் தோன்றுகிறது. பிழையாக எழுதுவது, எழுத்துச் சொற்புணர்ப்பு தெரியாமல் எழுதுவது, சொற்களை மாற்றுவது, குழைப்பது, அதை மீளப்படிக்கமுடியாமல் திகைப்பது, என்றெல்லாம் அந்த நாளில் இருந்த அறியாமை இருளில் கிடந்த மக்களின் கையில்தான் இந்த எழுத்துப்பணி அடங்கிவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

Add a Comment