POST: 2014-11-06T19:39:06+05:30

நேர்காணல்-14.3.2011

கேள்வி 3: பூதம் புதையலைக் காக்க என்று ஒரு பக்கம் இருக்க, இந்த நாயானது தேங்காயைத் திண்ணமுடியாமால் உருட்டிக்கொண்டே இருப்பதுபோல, பலரும் இப்படியான பழஞ்சுவடிகளைக் கையில் வைத்துக்கொண்டு அவற்றைப் படிக்கத்தெரியாமல், அவற்றில் என்ன இருக்கிறது என்று தெரியாமல், ஆனால் அதில் ஏதோ ஒன்று பெரிய விசயம் இருக்கப்போகிறது என்ற நம்பிக்கையோடு, ஒருவேளை நமக்குச் சொத்துக்கணக்கு எழுதிவைத்திருக்கிறார்களோ? அல்லது புதையல் இந்த இடத்தில் புதைந்திருக்கிறது என்று ஏதாவது குறிப்பிட்டிருக்கிறார்களோ? என்றெல்லாம் சிலபேர் எதிர்பார்ப்போடு அவற்றை முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளைக் கேள்விபடுகிறோம். இவற்றைப் படிப்பதற்கான வல்லுநர்கள் நம்மிடம் போதுமானவர்களாக இருக்கிறார்களா? அவர்கள் படித்துச்சொல்வது நம்பகத்தன்மை உடைய செய்திகள்தானா?

பதில்: நீங்களே அதற்கு ஒரு பெரிய விளக்கத்தைச் சொல்லிவிட்டீர்கள். புதைந்து கிடப்பதெல்லாம் புதையல் என்று நாம் நினைக்க வேண்டாம். நாம் எதைப்புதைக்கிறோம் என்று உங்களுக்கே தெரியும். எனவே, அதை ஒரு பெரிய புதையல் என்பதோ, அதற்குள்ளே அடங்கியிருப்பது பொற்குவியல் என்றோ, நாம் வீணாக நினைத்து மருளவேண்டாம். படிப்பவர்கள் குறைவு. படித்தாலும் அவர்கள் சரியாகப் படித்தார்களா? என்பதும் குறைவு. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. காலப்பழமையைப்பற்றி நாம் பெரிதும் மதிப்பதனால், இதைப்பற்றி நமக்கு மருட்சியாகத்தான் இருக்கிறதே தவிர, இவ்வளவு அறிவியல் வளர்ச்சி வந்த பிறகு, கருவிகளில் புதுமை வந்தபிறகு, அதை உடனடியாக என்ன இருக்கிறது என்பதை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொள்ளுகின்ற பணியை, யாரும் செய்ததாகத் தெரியவில்லை.

நீங்கள் கேட்ட வினாவின் படி ஒரு 100 ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்துவிட்டு, இவைகளில் இந்தக் கருத்துகளைக் கண்டோம் என்று எழுதலாம் என்றே நான் நினைக்கிறேன். நான் ஒருமுறை படித்த ஏட்டை ஒருவர் விளங்காமல் சொன்னார். யானை ஏழு குட்டிகளைப் போடும் என்றும் ஒரு குட்டியினுடைய அளவு ஒன்பது அங்குலம் என்றும் படித்தார். நான் என்ன சொல்வது, அது யானையா? என்று கேட்டேன். இல்லையில்லை, அது யானை என்ற பெயருடைய ஒரு புழுவைக் குறிப்பது என்று பிறகு சொன்னார். இதற்கெல்லாம் நான் என்ன விடைசொல்வது.

அந்த மருத்துவச் சுவடிகளைப் பற்றி நீங்கள் மருத்துவர்களைக் கேட்டாலேயே பலர் சொல்வார்கள். முரண்படுகின்ற மருத்துவங்கள், எண்ணாயிரம் எழும்புகள் என்பார்கள். யாரும் எண்ணிப் பார்க்கப்போகிறோமா என்கிற கருத்தா? இப்படியாக மருட்சியாக இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *