POST: 2014-11-09T09:17:52+05:30

பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-1
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே

இன்றைய விழா, நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், மகள் தன் தந்தையை நினைத்து நடத்துகின்ற கூட்டம் என்று பார்க்கின்றபோது, நமக்கு அது நெகிழ்ச்சியைத் தருகிறது.
நான் கூட சொன்னேன்,

ஆறு பெண்களைப் பெற்றால், ஆண்டிகூட அரசனாவான் என்று நாம் அந்த முதுமொழியை மாற்றிச் சொல்லவேண்டும். நாம் பாடிய பாடல், ஈசனுடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்று, கூறும் அடியார்கள் குறை தீர்த்த முகம் ஒன்று என்று சொல்லி இந்த ஆறு முகங்களும், தந்தை தாயரை வணங்குவதில் வேறுமுகங்கள் இல்லை என்று காட்டுகின்ற வகையில், அவர்களுடைய குடும்பத்தினுடைய முதல்மகனும், இளையமகனும் ஆகிய இரண்டுபேரையும் சேர்த்தால், இப்படி எட்டுச்செல்வங்களைப் பெற்ற ஒப்பற்ற பெருந்தகை பேராசிரியர் வேங்கடராமர் அவர்கள்.

பேராசிரியர், வித்வான், பெருந்தமிழ்க்கடல், நற்றிணை பதிப்பாசிரியர், ஒரு 1000 மாணவர்களுக்குப் போதக ஆசிரியர், எளிய மாணவர்களையெல்லாம் இல்லத்திற்கு அழைத்து அமரவைத்து, அவர்களுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஞானசிரியர். எனவே, உரையாசிரியர், போதகாசிரியர், ஞானசிரியர் என்று, இந்த மூன்று பெருமிதங்களையும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள், சேக்கிழார் பிள்ளைத் தமிழில் சேக்கிழாருக்குச் சொல்லி மகிழ்கிறார். அந்த வகையிலேதான் பேராசிரியர் எச். வெங்கட்ராமன் அவர்கள், உண்மையிலேயே காசியிலிருந்து கங்கை வருகிறதோ இல்லையோ? காசியிலிருந்து வந்த ஒரு தமிழ்க்கங்கையாகத்தான் அவர்கள் குடும்பம் வந்தது. மாட்சிமை வாய்ந்த காசியில் வாழ்ந்துகொண்டிருந்த, ஆசிரியராக இருந்து பெருமிதமாக வாழ்ந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டதுபோலவே, பெரிய இழப்புகளையும் கண்டு, அந்தத் துன்பங்களையும் இன்பங்களையும் ஒன்றாகக் கண்டு, சென்னையில் வாழ்ந்த பெருந்தகை. பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள், தமிழ் கற்றுத்தந்தது யார்? என்று கேட்டால்,

தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்த்துறையினுடைய பெருந்தலைவராகத் திகழ்ந்த, பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள், நான் திருவையாற்றுக் கல்லூரியில் படித்தேன் என்றார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த, பேரசிரியர் இராஜேந்திரன், திருவையாற்றில் பயின்றவர். திருவையாறு கல்லூரி தமிழகத்திலேயே அப்போது புகழ்வாய்ந்த கல்லூரியாகும். தமிழும் வடமொழியும் ஒருசேரக்கற்றுத்தந்த அந்தத் திருவையாற்றுக் கல்லூரியில்தான் பெரும்பேராசிரியர்கள் எல்லாம் தலைமை தாங்கியிருந்தார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பின்னாளில், வடமொழி பேராசிரியராகச் சென்ற பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் என்ற பெருந்தகை, தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததோடு, சொல்லதிகாரக் குறிப்புரை என்றே நுணுக்கமான உரைகளையெல்லாம் எழுதினார்கள். எனவே தமிழும், வடமொழியும் பின்னிப்பிணைந்திருந்த, அந்தத் திருவையாற்றுக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேரறிஞர்களெல்லாம் பணியாற்றியது மட்டுமல்ல, ஆர்வம் கொண்ட மாணவர்களெல்லாம் தமிழுணர்ச்சி ததும்ப வேண்டும் என்ற நிலையில் திருவையாற்றில்தான் வந்து சேர்ந்தார்கள். உங்களுக்கு நன்றாக நான் நினைவூட்டுவது என்னவென்றால் பேராசிரியர் கு. இராஜவேலு, திருவையாற்றில் பயின்றவர். திரவியம் கூட சிலதிங்கள் திருவையாற்றுக் கல்லூரியில் தமிழ்பயில வேண்டுமென்று நினைத்தவர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *