சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009
டாக்டர் ஔவை நடராசனார்
தகுதிவாய்ந்த தமிழ்ப்பெருந்தகை, தமிழகத்தில் அன்னைப் பல்கலைக்கழகம் என்று நாங்கள் போற்றுகின்ற, சென்னைப் பல்கலைக்கழத்தில் தனிப்பெருந் துணைவேந்தராகத் திகழும் பெருந்தகை திருவாசகம் அவர்களே,
இந்த அருமையான கருத்தரங்கத்தைத் தமிழ்த்துறையோடு இணைந்து நடத்துகின்ற, ஒரு பெருமிதப் பணியைச் செம்மொழி ஆய்வு நிறுவனம், மிகச்சிறப்பாக நடத்துகிறது.
நேற்று முந்நாளுக்குள் தமிழகத்தில் மூன்று பல்கலைக்கழகங்களில் செம்மொழி மத்திய நிறுவனம் ஆங்காங்கே பயிலரங்குகளை நடத்துகிறது என்று காணும்போது நமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியும் பெருமிதமும் விளைகின்றன. செம்மொழி நிறுவனம் மாணவர்களையும், பேராசிரியர்களையும், ஆர்வலர்களையும் அறிஞர்களையும், ஒன்றுதிரட்டிச் சங்கத்தமிழ் மாட்சியையும் தமிழின் தொன்மையையும், பெருமிதத்தையும் உணர்ந்து மகிழவேண்டும் என்பதற்காக அவர்கள் இந்தக் கருத்தரங்கத்தை நடத்துவதை நான் மகிழ்ச்சியோடு பாராட்டுகின்றேன்.
அறிஞர் தெய்வசுந்தரம் அவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாள் எனக்குத் தெரியும். ஆர்வமும், ஆற்றலும், தணியாத தொண்டாற்றும் உள்ளமும் கொண்ட, ஒரு புரட்சி இளைஞராக வந்தவர் நண்பர் தெய்வசுந்தரம் அவர்கள். அவர்கள் தன்னலம் இல்லாமல் ஆரவாரம் இல்லாமல் தன்னுடைய மொழித்துறையை மிக நுட்பமாக நடத்திக்கொண்டு வருகிறார்கள். எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி, துணைவேந்தர் கேட்டால் இன்பமடைவதற்குரிய வகையில், கணிப்பொறியில் முதுகலை வகுப்பைத் தமிழ் மாணவர்கள் பங்குபெற்றுப் பெறலாம் என்று மாற்றியிருக்கிற தகுதியை, I hope think in any of the university’s in India. They have attempted of Teaching computer with knowledge basically of the local language அந்த வகையில் இந்த தமிழ் முதுகலை படிக்கிறவர்கள், அறிஞர் திருவாசகம் கனவு கண்ட வகையில் தமிழறிவும் கணிப்பொறி அறிவும் ஒன்றாகப் பெற்று, உலக அரங்கில் தலைநிமிர்வதற்குரிய வாய்ப்பை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பேராசிரியர் திருவாசகம் அவர்கள் பேசிய பிறகு, இனிமேல் தமிழறிஞர்கள் மேடையில் பேசவேண்டாம். கடல்மடை திறந்ததுபோல அவர் தன்னுடைய மனக்கருத்துகளை எடுத்துக்காட்டிய மாட்சி, நம்மை நெகிழச்செய்கிறது. சொன்னால் செய்கிறவர் பேராசிரியர் திருவாசகம். அவர் எளிமையாகப் பிறந்ததைப் பலநேரங்களில் சொல்கிறபோது, நமக்கு கண்களில் நீர் துளிர்க்கும். அந்த எளிமைதான் என்னுடைய ஈடற்ற வலிமை என்று அவர் காட்டியிருக்கிறார். ஒரு பாடலை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
உலகமெல்லாம் கடலால் சூழப்பட்டு, நிலங்களெல்லாம் மறைந்த பிறகு, தன்னந்தனியாக இருந்து வருந்தினாராம்…. யார் அவர் என்று கேட்டால் இப்பாட்டுதான் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை சொல்லுகின்ற தொடர், யாருமே துணையில்லையே என்று சொல்லி, சிவபெருமான் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டார். அவருடைய தனிமையை எப்படிப் போக்குவது? என்று கேட்டார்களாம். திருவாசகத்தைக் கையில் கொடுங்கள் போதும்.
கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்து
உறையான் திருவாசகத்தின் ஒரு பிரதி கருதியதே.
என்பது மனோன்மணீயம் சுந்தரனாருடைய தமிழ்த்தாய் வாழ்த்து. அதுபோல் துணையில்லாமல் தமிழ் எவ்வளவு தத்தளித்தது தெரியுமா? இப்போது ஒரு துணைவேந்தருடைய துணை கிடைத்திருக்கிறது என்றால் தமிழ் எவ்வளவு மகிழ்கிறது என்று சொல்லலாம்.

Add a Comment