தமிழ்,தமிழன்,தமிழ்நாடு? ஒரே கேள்வி ஒரே பதில் – 1999 குமுதம்
கேள்விக்கு பதில் அளித்தவர் :தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன்
கேள்வி:தமிழுக்கு வயது எவ்வளவு? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன் தோன்றி மூத்தக்குடி என்ற சொல்,தமிழரை குறிப்பிடுகிறதா?
ஔவை அவர்களின் பதில்
புறப்பொருள் பகுதியான வீர மாண்பை எடுத்து விளக்கும் புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூலில்,மறவர் குடியின் மாட்சியைப்பற்றிக் குறிப்பிடுகையில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன் தோன்றி மூத்தக்குடி என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.இந்தத் தொடர்,மரபுப்பொருள் கொண்டதாகும்.கல் என்பது மலையைக்குறிக்கும்.மண் என்பது வயர் பரப்பைக் குறிக்கும்.கல் என்பது இயற்கையின் படைப்பு;வயல் என்பது மனிதனின் படைப்பு.காடு மேடு களை அழித்து உழுது பண்பட்ட நிலத்தில் நெற்பயிர் விளையும்.வாள் என்பது ஏர் கலப்பையின் கொழு முனையைக்குறிக்கும்.இவ்வாறு,உழுதுண்டு வாழும் தொன்மையைக் குறிப்பது,இத்தொடரின் பொருளாகும்.இப்பொருள் அறியாது,கல் தோன்றுவதற்கு முன் மக்கள் எவ்வாறு தோன்றுவார்? இது புனை கதை என்று எள்ளி நகையாடியோர் சிலர் இருந்ததுண்டு.தமிழ்நாட்டவர்,உலகில் வாழும் பழங்குடியினர் என்பதில் ஐயமில்லை.
மொழி என்பது ஒரு காலத்தில் ஒருவரால் தோற்றம் பெறுவதில்லை.குழுவினராக வாழ்ந்த மக்கள் தத்தம் உணர்வுகளையும்,அறிந்த பொருள்களையும் பிறர்க்கு உணர்த்த முயன்ற பல்லாண்டுக்கால முயற்சியால் மொழி உருவாகின்றது.மொழியின் அமைப்பாலும்,அது சுட்டும்
பேருண்மையாலும்,தமிழின் தொடக்க நூலே தொல்காப்பியம் எனும் இலக்கணமாய் அமைந்த சீர்த்தியாலும்,உலகத் தொன்மொழிகள் சிலவற்றோடு வைத்து எண்ணத்தக்கது நம் அருமைத் தமிழ் மொழி என்பதில் ஐயமில்லை.
மலி திரையூர்ந்து மண் கடல் வெளவுதல்,குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள முதலிய குறிப்புக்களால் கடற்கோள் நிகழும் முன்னரே தமிழ் மொழி வழங்கலாயிற்று என்பதை அறிய முடிகின்றது.மறைமலையடிகளார்,பாவாணர் கருத்துக்கொப்ப,இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட நாளிலேயே தமிழ் நிலவியது என்று குறிப்பிடுவது உண்மையாகலாம். உலகம் தொடங்கிய நாள் தொட்டு,23 நாகரிகங்கள் உலகில் பல்வேறு பகுதிகளில் மிளிர்ந்து,அவற்றுள் 21 நாகரிகங்கள் உலர்ந்தன என்றும்,எஞ்சியவை சீன நாகரிகம்,இந்திய நாகரிகம் என்பர்.எஞ்சிய இந்திய நாகரிகத்திற்குத் தலைமை தாங்கும் பெருமையுடைய தொன் மொழி தமிழ் மொழி
.

Add a Comment