திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும்-2
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
• தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்.
• உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் அன்பு மகன் சொல்வேந்தர்.
• தமிழுக்காக பல நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கும் உரை வரைந்தார். எனினும் திருக்குறள் உரை போலப் பரிபாடல் உரை வளமும் வனப்பும், திட்பமும் நுட்பமும் செறிந்ததில்லை. அதனால் பரிமேலழகர் உரைதானோ என்று ஐயுறுவோரும் உண்டு. எனவே பரிமேலழகர் உரை என்றால் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கும் நிலை தோன்றியது. இத்தகைய சிறப்போடு மிளிர்வதால் பரிமேலழகர் உரையின் தனிப் பாங்கை அறிந்து மகிழ்வதில் அறிஞர்களுக்கு ஆர்வம் பெருகியது.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
`சிறிது` ஈயப்படும் என்பது எவ்வாறு பொருந்தும் என்று தாமே வினவிக்கொண்டு அதற்கு விடை கூறும் நிலையில் வயிற்றுணவு மிகுமானால், இடையூறு உண்டாகும் என்று நினைத்தார். ஆகவே வயிற்றுணவு பெரியதாயவழி – வயிற்றுணவு மிகுமானால் அது நோயும் காமமும் விளைவித்தலின், திருவள்ளுவர் ‘‘சிறிது’’ குறித்ததே பொருத்தம் என்று கருதினார். ‘‘சிறிது என்பது ஏன்? சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா? என்று வினவினால் அதற்கும் விளக்கம் தருவாராய்’’ அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும் தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றுக்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல ‘‘ஈயப்படும்’’ என்று வைப்பது பொருத்தமோ என்ற வினாவும் பிறக்கும். இதனை நினைத்துப் பரிமேலழகர் பொருத்தம் காட்டுவாராய், ‘‘ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது’ என்று கூறினார். உணவு மிகுமானால் காமமும் நோயும் தோன்றலால் ‘‘ஈயப்படும்’’ என்று எழுதியது பொருந்தும் என அமைதி காண்கிறார்.
சொல்வன்மை அதிகாரத்தில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமைத்து என்பதனை விரித்துப் பொருள் விளக்கும்போது அக்குணங்களாவன வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயினென்று காட்டும் பரிமேலழகர் தம் உரையையும் அவற்றுக்குச் சான்றாகுமாறு வரைந்தார். இதன் நலம் பாராட்டிய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கண்கவர் வனப்பிற்றாயதோர் படிவமமைக்கும் ஓவியப் புலவன் ஏற்புடைய வண்ணங்களை இடனறிந்து அளவானுய்க்குமாறு போலப் பரிமேலழகரும் அவ்வவ்விடங்கட்கு ஏற்ற சொற்களை மிகை, குறையின்றி அளவானே பெய்து அணிநலம் விளங்கத் தம் உரையை யாத்தார். அதனால் அவரது உரையின் கண் உள்ள ஒவ்வொரு சொல்லும் நல்லியற் கவிஞர் நாவிற் குறித்தமர்ந்த நாமச் சொல்லெனவே விளங்கும் பெற்றியன கற்பார்க்குச் சான்றோரது செஞ்சொற் கவிதையைப் போன்றே இவ்வுரையாலும் ஒருகாலைக்கொருகால் இன்பம் மிகுதல் ஒருதலை எனப் போற்றுகின்றனர். எனவே ‘‘பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ, நூலின் பரிந்துரை எல்லாம் பரிமேலழகன், தெளித்த உரையாமோ, தெளி’’ என்று பாராட்டும் பழம்பாட்டும் நிலவுகிறது. நூல்களைப் பயின்று தெளிவுறப் பொருளறிந்து கொள்வதற்கு உதவும் அரும்பணியே உரைவரையும் நலப் பணியாகும். அருஞ்சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும் அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுள் முதல் வகையை அரும்பதவுரை, கண்ணழித்துரை, பதவுரை என்றும் பின்னதைப் பொழிப்புரை என்றும் கூறுவர். உரைக்கப்பட்ட உரையின் கண் அடங்கிய கருத்துகளை வினா,விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்குறிப்பை உய்த்துணர்ந்து நூலின் சொற்பொருளமைவுக்கு மாறுபடாவண்ணம் அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரையாசிரியர் தோன்றி, உரையெழுதியது ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்த செயல் வகையாகும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி முழுவதுமாக அறிய முடியவில்லை. எனினும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழைமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்ப வைத்து நோக்கும்போது, உரையாசிரியர் வழிவழியாக மேற்கொண்டிருந்த மரபொன்று வெளிப்படுகிறது.
எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று நெறிகளால் இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. பிற்கால நூல்களான நன்னூல், நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் அம்மரபு புலனாவது போல், இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பருந்தும் அதன் நிழலும் போன்று நூலோடு இயைந்து செல்லும் பழைய உரை முறையை மறவாது கடைப்பிடித்ததொன்றே, பரிமேலழகர்க்குச் தனிச் சிறப்பையும், உரைவளத்துக்கு உயர்ந்த அழகையும் வழங்கியது.
எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து தெளிவிக்கும் திறமும் அருமையும் வாய்ந்ததாகும். வினா-விடைகளால் நுண்ணறிவோடு நுழைந்து தெளிவு பெறும் பயிற்சியைக் கல்வி முறையிலேயே மாணவர் கடைப்பிடிக்குமாறு கற்றுத் தருவது ஆசிரியர் கடனாகும். கல்வி பயில்வோரிடையே காரண காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் உரம் உருவாகும்.

Add a Comment