கலைச்சொல் -ஒரு சொல்-தாரீர்
ஒரு முறை Screw driver என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் உருவாக்கத்தில் நான் சிரமப்படவேண்டிவந்தது. Screw driver என்பது திருகாணியை இறுக்கவும்,சுழற்றவும் பயன்படுவதால் அதனடிப்படையில் திருகாணி சுற்றுநர்,திருகாணி ஓட்டுநர்,திருகு சுழற்றுநர் என்றெல்லாம் அச்சொல்லுடன் இடர்பட்டுக் கொண்டிருந்தேன். Screw,driver இரண்டையும் இணைத்துப்பொருள் தரும்படி ஒரே சொல்லாகத் தமிழில் அமைந்தால் நன்றாயிருக்குமே என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.திருப்பான் சரியாயிருக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.ஒரு நாள்,வீட்டில் மரவேலை செய்து கொண்டிருந்த தச்சு ஆசாரி ஒருவர் தன் உதவியாளரிடம் அந்தத் திருபுளியை எடுத்துப் போடு என்று கூறியது காதில் விழுந்தது.அவரிடம் ஓடினேன் .மிக எளிமையாக எனக்கு விளக்கினார்-சாதாரண உளியிலிருந்து வேறுபட்டது திருப்புளி,இது திருப்புகிற உளி என்றார்.என் பேராசிரியத் தமிழ் சாதிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததை அந்தத் தச்சனின் தமிழ் சாதித்தது.நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம்,சொல்லுருவாக்கத்தில் ஈடுபடுமுன்,எத்தொழில் செய்வாரிடம் அது புழக்கத்திலிருக்கும் என்று பார்த்து, அவர்களைத் தேடிச் செல்வதை முதற்கடமையாகக் கொள்ளுங்கள்
உரைவேந்தர் ஔவை.சு .துரைசாமி

Add a Comment