POST: 2015-04-09T20:25:25+05:30

தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்தூன்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்கமுடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கிருந்து நிகழ்த்தினர். தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும்,அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப்பெற்றுச் செல்வது வழக்கம். தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்-றுகூடி அரசவையில் வீற்றிருந்து முறை செய்தலும் உண்டு, இத்தகைய ஒற்றுமைத் தோற்றம், தமிழ் மக்களுடைய உள்ளத்திற்க அளவில்லாத மகிழ்ச்சியை விளைவித்தது. பரிசில் பெறச் சென்ற பொருநன் ஒருவன், தன் சுற்றத்தாருடன் யாழிசையும் பாடலும் ஆடலும் ஒன்றுபட்டு நிகழ்ந்த செயலுக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் அரசவையிலே சேர இருந்த ஒற்றுமைத் தோற்றத்தை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் உவமையாகக் கூறுகின்றார். இவ்வுவமையால் தமிழரசர் மூவரும் தம்முள் ஒற்றுமையுடையவராய் அரசியலை நன்கு நிகழ்த்தித் தமிழ் மக்களை மகிழ்வித்தனரென்பது நன்கு புலனாகும்.

பத்மஸ்ரீ ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *