அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-3
பாவெல்லின் கண்கள் உடனே பளிச்சிட்டன.
தனது இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவர் சேக்ஸ்பியருடைய பதினான்கடிச் செய்யுள் ஒன்றிலிருந்து ஒதத்தொடங்கினார்;
‘‘பளபளக்கும் உலோகம் என்ன,
பருத்திருக்கும் பாறை தான் என்ன,
திணிந்திருக்கும் மண் தான் என்ன,
பரந்திருக்கும் கடல் தான் என்ன,
நிலையாமைக் காலன் தானே
அனைத்தையும் வென்று நிற்பான்!
அவனுடைச் சீற்றம் முன்னே
மலரினும் மெல்லிதான
அழகெனும் பேதையாலே ஆவதுதான் என்னே?’’
சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென நிறுத்திக் கொண்டார். செய்யுளின் எஞ்சிய பகுதியை அவரால் நினைவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. நான் பற்றிக் கொண்டேன். மொழியத் தொடங்கினேன்;
‘‘தவிடுபொடியாகத்தாக்கித் தகர்க்கவல்ல
காலனின் கொடும்பிடியில்
ஓ, இளவேனில் மலரேந்தும்
மதுமணம் தான் என்னாகும்?
பொருதவொண்ணாக் குன்றுகளும்
நிலைகுலையும் போதினிலே
தகர்க்கவொண்ணாக் கோட்டைகளின்
எஃகுக் கதவுகளும் சிதையுமன்றோ?
ஐயோ, நினைத்தாலே குலைநடுங்கும்!
அந்தோ, காலக்கருவூலம் ஈந்த
காலத்தின் அரும்பெறலைக்
காப்பாற்றி வைப்பதெங்கோ?
விரைந்ததிரும் இருங்கழலை
நிறுத்தவல்ல கரம் தான் எங்கே?
அழித்தாலும் செழித்தாலும்
தடுத்திடுவார் யாரிங்கே?
எவருமில்லை! ஒருவேளை
இந்த விந்தையிடம் வீறு உண்டோ?
கரிய மையில் என் காதல்
இன்னமும் பளிச்சென ஒளிர்ந்திடுதே!’’
பாவெல் திகைப்பும் வியப்பும் கலந்த பார்வையை என் மீது வீசினார். புனிதமெனப் போற்றப்படும் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் கூட இத்துணை சரளமாகவும் எவ்வித உதவியுமின்றியும் சேக்ஸ்பியரை மனப்பாடமாக ஒப்பிக்கவல்லார் எவருமில்லை என்று வியந்தார். அத்துடன், அவருடையதும் யுகாவாவினுடையதுமான சாதனைகள் சேக்ஸ்பியரின் கவிதை முன்னே பொருளற்றவையாக மங்கி மறைந்திடுவதாகவும் குறிப்பிட்டார். அவருடைய பார்வையில் சேக்ஸ்பியரின் கவிதைகள் மனித அறிவாற்றலின் சாதனைகளின் உச்சம்!

Add a Comment