இந்தியப் பண்பாடு-1
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
தகுதி மிகுதி படைத்த தலைவர் அவர்களே,
டாக்டர் லட்சுமிபதி அவர்களே,
பாரதிய வித்யா பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவது எனக்கு வாய்த்த பேறு என்றுதான் கருதவேண்டும். தலைவர் அவர்கள் கூறியது போல வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலும் கோவையில் பாரதிய வித்யா பவன் ஆற்றிவரும் பணிகளைப் பல்லாண்டுகளாகக் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர, இவ்வளவு அழகிய இடத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து வித்யா பவன் ஆற்றும் பணிகளைப் பற்றி நான் அறியும்போது மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய இந்தியத் திருநாட்டில் கலை, பண்பாடு, நாகரிகம், ஒழுகலாறுகள் இவைகளை எல்லாம் வளர்த்துக் காக்கவேண்டும் என்ற வகையில் நிறுவனங்கள் பல இருக்கின்றன. ஆனால், இந்திய நாடு முழுமையிலும் எனக்குத் தெரிந்த வகையில் பெருந்தகையாளர் கே. எம். முன்சி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பாரதிய வித்யா பவனைத் தொடங்கி வைத்தார். இந்தியக் கலை, பண்பாட்டை இளைஞர்களும் முதியவர்களும் உலகத்திலுள்ள பல்வேறு நாட்டவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பல கிளை நிறுவனங்களை இணைத்துச் செம்மையாகப் பணியாற்றுவதோடு நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்ட பெருமையும் வித்யா பவனைத்தான் சாரும். பாரதிய வித்யா பவன் பணிகளைச் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் பண்பாட்டு வளர்ச்சிக்காக அமைந்த ஒரு பல்கலைக் கழகம் என்று கூறலாம். பல்கலைக் கழகம் என்னும் பெயரில்லாமலேயே அரசின் சார்பில்லாமல் தனியாக அமைந்து உலகமெல்லாம் கிளைகளைப் பரப்பிப் பணியாற்றும் நிறுவனம் என்று எண்ணுகின்றபோது மிகுந்த நன்றியோடு வித்யா பவனைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

Add a Comment