இந்தியப் பண்பாடு-2
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
நண்பர்களே!
நான் இன்று உங்களோடு ஒன்றாகக் கலந்து பேச வேண்டுமென்றுதான் நினைக்கிறேன். இந்தியப் பண்பாடு என்ற தலைப்பில் தலைவர் அவர்கள் விளக்கமாகச் சிலவற்றைக் குறித்தார்கள். பாரதிய வித்யா என்று சொன்னால் – அல்லது பாரதிய சம்ஸ்கிருத் என்று கூறினால் – இந்திய நாட்டின் கலை, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு வடிவம் தருவதென்றால் அதைத்தான் பாரதப் பண்பாடு என்று நாம் குறிக்கலாம். இதிலேகூட ஒரு சிக்கல் உண்டு. பண்பாடு என்ற சொல்லும் நாகரிகம் என்ற சொல்லும் வழக்கத்தில் உள்ளன. இந்த நாகரிகம் என்பது புறத்தே அமைந்த கருவிகளை, வாழ்க்கை வசதிகள், வாய்ப்புகள், பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள தகுதிகள் இவைகளெல்லாம் மேலோங்கி அமையும்போது, அந்த ஊர் நாகரிகம் உடையதாகத் திகழ்கின்றது. அந்த ஊரில் நாகரிகக் கருத்துக்கள் பல மிளிர்கின்றன என்கிறோம். civilization என்று அதைச் சொல்கின்றோம். அதே நேரத்தில் ஒருவர் பழகுவதை, ஒருவர் பரிவு காட்டுவதை, ஒருவர் அன்போடு உறவாடுவதைக் கருத்திற்கொண்டு மனம், செயல், உணர்வு சிந்தனைகளாகக் கொண்டு ஓங்கிய சிந்தனை, மேம்பட்ட சிந்தனை, மனித வாழ்க்கைக்கு மாட்சிமை தருகின்ற சிந்தனை என்றெல்லாம் கருதிப்பார்த்து அதனைப் பண்பாடு என்று நாம் சொல்கின்றோம். The cultured man என்று கூறுகிறோம் அல்லவா!

Add a Comment