இந்தியப் பண்பாடு-23
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
…
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
நம்முடைய பண்பாடு கல்வியிலும் ஓங்கிய பண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால், நம்முடைய கல்விப்பண்பாடு இலக்கியத்தோடு நின்றது; சமயத்தோடு நின்றது. இலக்கியம், சமயம் இரண்டையும் தாண்டி வீசுகிற காற்றைப் பற்றி, எரிகிற நெருப்பைப் பற்றி, ஓங்கிய மலைகளைப் பற்றியெல்லாம் ஆராய்கிற பொருளாய்வுகள் நமக்கு அன்றைக்கு இந்த அளவுக்கு இல்லை. எனவே மொத்தமான ஒரு கருத்தைத்தான் முன்னோர் எண்ணிச் சொன்னார்கள். இன்றும்கூடச் சிலர் சொல்வார்கள், நம்முடைய நாட்டை இந்திய நாடு என்ற பெயரில் ஒரு வடிவாக்கித் தந்த பெருமை ஆங்கிலேயரைச் சாரும் என்று! ஏனென்றால் ஆங்கிலேயருக்கு முன்னால், நம்முடைய நாட்டில் அங்க, வங்க, கலிங்கம் என்று தொடங்கி 56 நாடுகளின் பெயர்களை அடுக்கிச் சொல்வார்கள். 56 நாடுகள் மட்டுமில்லை, 650 சிற்றரசுகள் இருந்தனவென்றும் சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் துண்டுபட்டிருந்தாலும் கூட, மனத்தளவில் சில நிலைகளில் ஒன்றுபட்டிருந்தார்கள் என்பதைக் காணமுடிகிறது. எனவே இந்திய நாடு என்ற கருத்து ஆங்கிலேயர்கள் தான் நமக்கு அளித்தார்கள் என்பதில்லை. அதற்கு முன்னால் இந்திய நாட்டில் ஒரு கருத்து எப்படி இருந்ததென்றால், வடக்கே காஷ்மீரம் வரை போகிறோம் என்று சொன்னால், அங்கே வணங்குகிற ஒரு தெய்வம் இருப்பதாகக் கருதினார்கள். வடக்கே பத்ரிநாதன் கோயிலும், கிழக்கே சகன்னாதர் கோயிலும், மேற்கே சோமநாதர் கோயிலும், தெற்கே இராமநாதர் கோயிலும் இருந்தன. இந்த நான்கு நாதர்கள் தான் திசைதோறும் இருந்துகொண்டு இந்திய நாட்டுக்கு ஆன்மீக உணர்வு ஊட்டினார்கள் என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment