இந்தியப் பண்பாடு
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை-1-32
தகுதி மிகுதி படைத்த தலைவர் அவர்களே, டாக்டர் லட்சுமிபதி அவர்களே, பாரதிய வித்யா பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவது எனக்கு வாய்த்த பேறு என்றுதான் கருதவேண்டும். தலைவர் அவர்கள் கூறியது போல வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலும் கோவையில் பாரதிய வித்யா பவன் ஆற்றிவரும் பணிகளைப் பல்லாண்டுகளாகக் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர, இவ்வளவு அழகிய இடத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து வித்யா பவன் ஆற்றும் பணிகளைப் பற்றி நான் அறியும்போது மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய இந்தியத் திருநாட்டில் கலை, பண்பாடு, நாகரிகம், ஒழுகலாறுகள் இவைகளை எல்லாம் வளர்த்துக் காக்கவேண்டும் என்ற வகையில் நிறுவனங்கள் பல இருக்கின்றன. ஆனால், இந்திய நாடு முழுமையிலும் எனக்குத் தெரிந்த வகையில் பெருந்தகையாளர் கே. எம். முன்சி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பாரதிய வித்யா பவனைத் தொடங்கி வைத்தார். இந்தியக் கலை, பண்பாட்டை இளைஞர்களும் முதியவர்களும் உலகத்திலுள்ள பல்வேறு நாட்டவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பல கிளை நிறுவனங்களை இணைத்துச் செம்மையாகப் பணியாற்றுவதோடு நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்ட பெருமையும் வித்யா பவனைத்தான் சாரும். பாரதிய வித்யா பவன் பணிகளைச் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் பண்பாட்டு வளர்ச்சிக்காக அமைந்த ஒரு பல்கலைக் கழகம் என்று கூறலாம். பல்கலைக் கழகம் என்னும் பெயரில்லாமலேயே அரசின் சார்பில்லாமல் தனியாக அமைந்து உலகமெல்லாம் கிளைகளைப் பரப்பிப் பணியாற்றும் நிறுவனம் என்று எண்ணுகின்றபோது மிகுந்த நன்றியோடு வித்யா பவனைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
நண்பர்களே! நான் இன்று உங்களோடு ஒன்றாகக் கலந்து பேச வேண்டுமென்றுதான் நினைக்கிறேன். இந்தியப் பண்பாடு என்ற தலைப்பில் தலைவர் அவர்கள் விளக்கமாகச் சிலவற்றைக் குறித்தார்கள். பாரதிய வித்யா என்று சொன்னால் – அல்லது பாரதிய சம்ஸ்கிருத் என்று கூறினால் – இந்திய நாட்டின் கலை, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு வடிவம் தருவதென்றால் அதைத்தான் பாரதப் பண்பாடு என்று நாம் குறிக்கலாம். இதிலேகூட ஒரு சிக்கல் உண்டு. பண்பாடு என்ற சொல்லும் நாகரிகம் என்ற சொல்லும் வழக்கத்தில் உள்ளன. இந்த நாகரிகம் என்பது புறத்தே அமைந்த கருவிகளை, வாழ்க்கை வசதிகள், வாய்ப்புகள், பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள தகுதிகள் இவைகளெல்லாம் மேலோங்கி அமையும்போது, அந்த ஊர் நாகரிகம் உடையதாகத் திகழ்கின்றது. அந்த ஊரில் நாகரிகக் கருத்துக்கள் பல மிளிர்கின்றன என்கிறோம். civilization என்று அதைச் சொல்கின்றோம். அதே நேரத்தில் ஒருவர் பழகுவதை, ஒருவர் பரிவு காட்டுவதை, ஒருவர் அன்போடு உறவாடுவதைக் கருத்திற்கொண்டு மனம், செயல், உணர்வு சிந்தனைகளாகக் கொண்டு ஓங்கிய சிந்தனை, மேம்பட்ட சிந்தனை, மனித வாழ்க்கைக்கு மாட்சிமை தருகின்ற சிந்தனை என்றெல்லாம் கருதிப்பார்த்து அதனைப் பண்பாடு என்று நாம் சொல்கின்றோம். The cultured man என்று கூறுகிறோம் அல்லவா!
இன்னும் சொல்வதென்றால் nobility, magnanimity என்றெல்லாம் பாராட்டிச் சொல்கின்றோம். எனவே இந்த இரண்டு சொற்களைக் காணும்போது நாகரிகம் மிகுந்துள்ள வாழ்க்கை, பண்பாடு பரிமளிக்கும் மனமேம்பாடு என இரண்டாகக் கொள்ளலாம். உலகிலுள்ள நாடுகளைக் கருதும்போது நாகரிகம் மிகுந்த நாடுகள் பல உள்ளன. எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அறிவியலின் வளர்ச்சியாகப் பெற்று மிளிரும் நாடுகளையெல்லாம் நாகரிக நாடுகள் என்று சொல்வதில் பிழையில்லை. அமெரிக்க நாட்டை நாகரிக நாடு என்று சொல்வதில் எந்தக் குற்றமும் இல்லை. காரணம் வளங்கள்; திரும்பிப் பார்க்கின்ற இடங்களிலெல்லாம் வசதிகள்; மக்கள் வாழ்க்கையில் மிளிரும் செல்வச் செருக்கு மிகுந்துள்ளது. ஆனால், பண்பாடு என்று நாம் எடுத்துச் சொல்வதென்றால் நமக்குத் தயக்கம் நேர்கிறது. அதனால் நாகரிக நாடுகளைக் குறைவாகச் சொல்கிறோம் என்பதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித மனம் ஒரு பழக்கவழக்கத்தில் தோய்ந்துள்ளது. ஐயாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடம் மரபாக மலர்ந்த கதைச் செல்வங்கள், சுவடிகள், எண்ணிவைத்த அறிஞர்களின் கருத்துக்கள் தொடர்ச்சியாக மெல்ல மெல்லத் தங்கிப் படிந்து மக்கள் மனத்தில் அமிழ்ந்துள்ளதென்றால் அதை நாம் பண்பாடு என்று அழைக்கிறோம். முன்சி அவர்கள் தான் ஓரிடத்தில் குறிப்பிட்டார்கள்! பழமை என்று சொன்னால் அமெரிக்கர்களுக்கு இல்லை. ரஷ்ய நாட்டினருக்குப் பழமை என்று சொன்னால் வெறுப்பு. எனவே, ரஷ்ய நாட்டுக்காரர்களுக்குத் தங்கள் பழமையை நினைத்தால் கோபம் வருகிறது. அமெரிக்க நாட்டுக்காரர்களுக்குத் தங்களிடத்தில் பழமை இல்லையே என்பதற்காக அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், நமக்கெல்லாம் வாய்த்த சிக்கல், நமக்குப் பழமை மட்டும் தான் இருக்கிறது! எனவே தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தோய்ந்து வருகின்ற மனப்பண்பாட்டை அவ்வப்போது நாம் வளர்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அவ்வப்போது அது உடைந்துபோகும் என்ற நிலைகூட உள்ளது.
அண்மையில் நான் ஒரு நூல் படித்தேன். கொஞ்சம் அச்சமாக இருந்தது! அறிவியலால் உலகமெல்லாம் ஒன்றாக அமையவேண்டும் என்ற கருத்து உருவாகும்போது அந்தந்த நாட்டினுடைய பண்பாடு குறையும். அவரவர் பேசும் மொழியின் பெருமிதம் குறையும், ஒருவித கலப்புப் பண்பாடு உருவாகும். காரணம், காலையிலிருந்து மாலை வரை நம்முடைய வாழ்க்கையில் நாம் எத்தனை நாடுகளின் கண்டுபிடிப்புகளோடு உறவுகொள்கிறோம் என்று எண்ணிப் பார்க்கலாம். நாம் உடுத்தும் உடை, உண்ணுகிற முறை, படிக்கிற படிப்பு, பயன்படுத்தும் பொருள், நாம் அமர்ந்திருக்கும் முறை என வாழ்க்கையில் கையாள்கின்ற நடைமுறைகளையெல்லாம் ஆராயும்பொழுது நம்மை அறியாமலே முப்பது, நாற்பது நாடுகளின் இயல்புகள் நம்மோடு கலந்திருப்பதை அறியலாம். காலையில் நாம் காப்பி அருந்துகிறோம் என்று தொடங்கினாலே பிரேசில் நாட்டில் முதன் முதலில் தொடங்கிய காப்பிப் பயிர் அல்லவா என்ற கருத்து உருவாகிறது. அதை எடுக்கின்ற பீங்கான் குவளைகளைப் பார்க்கிற போது ஓகோ இது சீன நாட்டுப் பீங்கானோ என்ற கேள்வி எழுகிறது. உண்ணுகிற முறையைப் பார்க்கிற போது மேசையில் இருந்து உண்ணுகிற பழக்கத்தை நாம் வைத்துக்கொண்டிருந்ததில்லை.
நண்பர்களே! நகைச்சுவையாக ஒன்றைச் சொல்ல விழைகிறேன். அமெரிக்க நாட்டிலிருந்து வந்த ஒருவர் தமிழ் படிக்கவந்தார்; வந்தவர் என்ன சொன்னார்? உங்கள் நாட்டுப் பண்பாட்டிற்கேற்ப எனக்கு உணவு படையுங்கள் என்றார். நான் அதற்கென்ன, படைக்கலாமென்று சொல்லி வீட்டில் ஒரு மணையை இட்டு அந்த மணைக்கு எதிரே ஒரு வாழை இலையை விரித்து வையுங்கள் என்று கூறியிருந்தேன். அவருக்கு நமது பண்பாட்டைக் காட்டலாமென்று நினைத்து நான் போய்க் கையைத் துடைத்துக்கொண்டு வருவதற்குள் அவர் விரித்திருந்த வாழை இலையில் அமர்ந்துவிட்டார். ஏன் அப்படி நடந்தது என்றால், அவர்களுடைய பழக்கம். அவர்களுக்கு உண்ணுகின்ற முறை எப்போதுமே சற்று மேலே ஒரு மேசையில் தான் இருக்கும். நாம் உண்ணுகின்ற பழக்கம் எப்போதும் குனிந்து எடுத்து உண்ணும் பழக்கமாகும். இப்படிப் பழக்க வழக்கங்கள், பல மாறுதல்களைக் கொண்டன. எனவேதான் நாம் நம்முடைய இலக்கியங்களை, பழமையானவர்களை, நம்முடைய தலைமுறையினர்களையெல்லாம் எண்ணிப்பார்த்து விலக்க வேண்டியவற்றை விலக்கிக் கொண்டு, விளக்க வேண்டியவற்றை விளக்கிச் சொல்லியாக வேண்டும். பிறகு ஆராய்ந்து பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக அமைக்க வேண்டுமென்பதுதான் பண்பாட்டுக் காவலர்களின் பணியாகும். அரசராகட்டும், அறிஞர்களாகட்டும், பல்கலைக்கழகங்களாகட்டும், மக்களுக்கு இப்படியெல்லாம் பண்பாடு இந்த நாட்டில் தோன்றியது, இந்தச் சூழ்நிலையில் வளர்ந்தது என்பதையெல்லாம் விளக்கிக் காட்டும் ஒரு பணியை நாம் முறைப்படுத்தவேண்டும். இந்தியப் பண்பாட்டைப் பற்றி எண்ணத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு நிகழ்ச்சியை நான் சொல்ல விரும்புகிறேன். தாயன்பி என்ற பேரறிஞரை உங்களுக்குத் தெரியும். உலகப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர். அவரை அழைத்துவந்து நமது நாட்டில் ஒருமுறை பேசச் சொன்னார்கள். நான் சொல்வது நாற்பதாண்டுகளுக்கு முன்பு. அபுல்கலாம் ஆசாத் நினைவுச் சொற்பொழிவுக்காகத் தாயன்பி வந்திருந்தார்கள். நினைவுப் பொழிவை – முதல் சொற்பொழிவை நிகழ்த்தியவர் பண்டிட் ஜவஹருலால் நேரு. தாயன்பி பேசத் தொடங்கும்போது,
‘‘இது ஒரு வியப்பான சொற்பொழிவு. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சி செய்த வெள்ளையன் என்ற பிரிட்டன் வழிமுறையைச் சார்ந்தவன் நான். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உங்களை ஆட்சி செய்த இனத்தைச் சார்ந்தவர் அபுல்கலாம் ஆசாத். அந்நிய ஆட்சியில் சிறைக்கொடுமையில் யார் மிகவும் அவதிப்பட்டாரோ அவர்தான் முதல் சொற்பொழிவை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது ஆங்கிலேயனாகிய என்னை இங்கு அழைத்திருக்கிறீர்கள். இதைப்பார்த்தால், ஆள்கிறவன், ஆளப்படுகிறவன், ஓர் இனத்தைச் சார்ந்தவன், மறு இனத்தைச் சார்ந்தவன் – ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள், வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றெல்லாம் வேறுபாடு காணாத பரந்த மனப்பண்பாடு இந்திய நாட்டில் ஆண்டாண்டுகளாக ஊறிவந்திருக்கிறது’’ எனத் தொடங்கினார்.
பாரதம் கற்றுத்தரும் பண்பாடு என்னும் தலைப்பில்தான் நான் உரையாற்றப் போகிறேன். மக்கள் என்று நினைக்கும்போது அவர்கள் உடுத்தும் உடை, சார்ந்துள்ள இனம், பேசும் மொழி என்று வேறுபாடு காணாமல் ஆட்சி செய்தவர்கள், ஆட்சியில் சிறைப்பட்டவர்கள் என்ற சிந்தனையில்லாமல் ஒன்றாகக் காணும் ஒரு பண்பு என்பதை இந்திய நாடு தான் உலகத்திற்கு எடுத்துக்காட்ட முடியும். இந்திய நாட்டினுடைய பண்பாடு இப்படிப்பட்ட ஒரு பொறையுடைமையை, பிறரைத் தாங்கிக் கொள்கிற ஒரு பெரிய சிறப்பைப் பெற்றிருக்கிறது. அதனாலேதான் குடும்பத்தில்கூட இணைந்திருக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது இங்கேதான் உண்டு. பிறர் மீது பரிவு காட்டுவதுதான் நம்முடைய கடமையே தவிர, அவர்கள் மீளவும் பரிவு காட்டுகிறார்களா என்றுகூட எண்ணவேண்டாம் என்னும் கருத்துக்களை இந்திய இலக்கியங்கள் பல்லாண்டுகளாகப் பறைசாற்றுகின்றன.
நம்முடைய பண்பாட்டின் கூறுகள் எப்படியெல்லாம் நூல்களில் புதைந்துள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பழைய பாடலில் ஒரு வேந்தன் பாடுகின்றான்; எனக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைத்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்! மூத்த மகன்தான் வரவேண்டுமென்று கூறுவீர்கள். மூத்த மகன்தான் ஆட்சிக்கட்டிலில் அமர்வது முறை. உலகத்தில் மூத்தவன் என்ற சொல்லுக்கே தந்தைக்குப் பிறகு முடிசூட்டிக் கொள்கிறவன் என்றும் பொருள் கூறுவார்கள். ஆனால், இந்த வேந்தன் பாடுகிறபோது சொல்கிறான், ‘‘மூத்தோன் வருக! என்று கருதாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’’ மூத்தவன் வரவேண்டுமென்பது முறையல்ல. விவரம் தெரிந்தவன் யார், செய்திகளைப் புரிந்தவன் யார், அறிவாற்றல் நிறைந்தவன் யார் என்ற வகையில் தக்கவனுக்கு முதன்மை தரவேண்டுமே தவிரப் பிறப்பால் மூத்தவன் என்பதால் மட்டுமே ஒருவன் பெருமையுடையவன் ஆகமுடியுமா என்று நினைக்கும் வேந்தன் பாடியிருக்கிறான். இது நம்முடைய பண்பாடு! நீங்கள் இந்திய நாட்டு வரலாற்றையும் எண்ணிப் பாருங்கள். இதிகாசங்களைக் கூடப் பாருங்கள், இது முறைமையில்லை என்றுசொல்லிக் கோசலை மனம் வருந்தினாலும் கூட `நின்னினும் நல்லவன் நிறை குணத்தவன்` என்று பரதனைப்பற்றிச் சொல்லி முறைமையில்லையே என்று வருந்துகிறாள். எனவே வயது, ஆளவேண்டுமென்னும் முறைமை இவற்றையெல்லாம் கருதாமல் தகுதியுடையவர் வரவேண்டுமென்கிற வகையில்தான் மூத்தவனாக இருக்கிறான் என்று மட்டுமே எண்ணாமல், அறிவாற்றல் உள்ளவனாகத் திகழ்கிறானா என்று மட்டுமே கருதியிருக்கிறார்கள்.
எனவே இந்திய நாட்டுக்கென்று அமைந்த அறிவாற்றலுக்குச் சிறப்புக்கூட்டுவது என்பதோடு எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில்தான் வேந்தனுக்குப் பெருமை எனச் சொன்னார்கள்; படையிருந்தால்தான் வேந்தனுக்குப் பெருமை, படைகளுக்குச் செலவிடுவதுதான் பெருந்தொகையாக இன்றும் உள்ளது. படைவீரர்கள் சுற்றியிருப்பது தான் வேந்தனுக்கும் அழகு. இந்தியப் பண்பாடு என்று எண்ணிப்பார்த்தால், ‘‘ வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோல் அதுவும் கோடாது எனின்’’ என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. வேறு எங்காவது இவ்வாறு உண்டா என்று எண்ணிப் பாருங்கள்! வேல்தானே வெற்றி தரும்; வாள்தானே வெற்றி தரும்; இல்லை, வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோல், அதுவும் கோடாதெனின் என்றார்கள். யார் எதிரே இருக்கிறார்கள்! உடன்பிறந்தவர்களாயிற்றே, உன்னுடைய தந்தையாயிற்றே, உன்னுடைய பாட்டனாயிற்றே என்றெல்லாம் காட்டி இவர்களோடு நாம் போரிடலாம், இதுதான் கடமை என்று நீங்கள் போரிடத் தொடங்கிவிட்டால் எதிரே இருக்கின்றவர்களின் உறவு நம் கண்ணுக்குத் தெரியவேண்டியதில்லை. காரணம், கடமை என்று எண்ணத் தொடங்கிவிட்டால் மகன் என்றோ மற்றவர்களென்றோ, உறவினர்களென்றோ நாம் நினைக்கலாகாது. இது ஒருவகைப் பட்டது. நெடுங்காலத்துக்கு முன்பு கீதையில் சொன்னது. இதையே மனு அரசன் கூடத் தன்னுடைய மகன் என்று பாராமல் தேர்க்காலில் செலுத்தினான் என்று பார்க்கிறோம்!
அண்ணன் தம்பியென்றோ, மைத்துனன் மாமன் என்றோ, உறவு சொல்லிக் காட்டுவதைவிட மனித வாழ்க்கையினுடைய செம்மை என்று எண்ணிப் பார்ப்பதை இந்தப் பண்பாடு சுட்டுகிறது. ஆனால், புறநானூற்றில், ‘‘ இதே சூழலில் எதிரே இருப்பது உன் மகன். நீ யாதொரு பகை பாராட்டுகிறாய், எனக்குப் பிறகு உன் மக்கள் தானே உன்னை நினைப்பார்கள். பகை என்பது நெஞ்சில் இன்று தோன்றி நாளை மறைவது – மறைய வேண்டியதல்லவா? எனவே வில்லையும் வாளையும் கீழே போடு’’ என்று சொல்லும் மனமாட்சி காட்டப்படுகிறது. பண்பாட்டில் இது ஒரு வகைச் செழுமையான மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது.
நாம் வாழ்வு என்று எதை நினைக்கிறோம்? மேலைநாடுகளில் உணவு, உடை, உறையுள் இந்த வசதிகளோடு வாழ்வதைத்தான் வாழ்வு என்று நினைக்கிறார்கள். நான் உபநிடதத்தின் ஒரு தொடரை தமிழில் மாற்றிச் சொல்வதென்றால் வாழ்வு என்பது உணவில் இல்லை, வாழ்வு என்பது உடையில் இல்லை, வாழ்வு என்பது உறையுளில் இல்லை. பின் எங்கே இருக்கிறது? வாழ்வு மனத்தில் இருக்கிறது என்பதைத் தமிழில் சொல் என்றால், எளிதாக விளக்கிவிடலாம். வாழ்வு என்று எதைச் சொல்கிறோம். நம்முடைய வீட்டில் இரண்டு குதிரைகள் வாழ்கின்றன என்று சொல்கிறோமா? சொல்வதில்லை. இரண்டு குதிரைகள் இருக்கின்றன என்போம். கோயிலில் யானை இருக்கின்றது, வாழ்கின்றது என்று சொல்வதில்லை. எனவே வாழ்க்கை என்பது உடல் அசைவதில் மட்டுமே இல்லை. இதைத்தன் மனம் என்று கூறினார்கள். வாழ்வு என்பதற்குப் பொருள் வேண்டுமென்றால் எதிர்ச் சொல்லைச் சொல்லிப்பாருங்கள்! வாழ்வுக்கு எதிர்ச்சொல் தாழ்வு என்பதாகும். நேற்றிலிருந்து ஒரு படி இன்று குறைந்தால் தாழ்வு என்று பொருள். நம்முடைய நினைப்பில் நேற்றிலிருந்து ஒரு படி தாழ்ந்து போனால் தாழ்வு என்று பொருள். அப்போது வாழ்வு என்றால் என்ன பொருள்? நினைவினில் உயர்வதும் நேற்றைய வாழ்வைவிட மேம்படுவதும் என்றல்லவா பொருள். எனவே மேலும் மேலும் வளர்வது என்பது தான் வாழ்க்கையின் பொருளாகும். வாழ்க்கையில் தளர்வது, சோர்வது, வீழ்வது என்பது தான் தாழ்வு.
இனி, இந்த வாழ்வு மேம்படுவது என்றால் என்ன? எப்படி மேம்படுவது? என்ற வினாவாகும். நாம்தான் உடுப்பது வாழ்க்கையல்ல என்று சொல்லிவிட்டோம். உறையுள் அமைவதை வாழ்க்கையல்ல என்று சொல்லிவிட்டோம். பிறகு மனம் எப்படி மேம்படுவது என்றால் அதற்கும் ஒரு வழி சொன்னார்கள். திருமணம் செய்துகொள்கிற ஒரு பெண்ணைப்பற்றிப் பேசும்போது நாம் உங்கள் பெண் எங்கே வாழ்க்கைப்படப் போகிறாள் என்று கேட்போம். அப்ப்பொழுது என்ன பொருள்? பெண் நம் வீட்டில் இதுவரையில் இருந்தாள், திருமணம் செய்துகொண்ட பிறகுதான் வாழ்க்கைப் படுகின்றாள்.
எனவே வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன்படுவது, தன் வீட்டை விட்டுவிட்டு, இன்னொரு வீட்டைத் தன் வீடாக நினைப்பது, தன்னைப் பிறருக்குத் தந்து பிறருக்கென மாற்றிக் கொள்வது என்று பொருள்படுவதாகத் தெரிகிறது. பண்பாடு என்று பார்த்தால் இப்படித்தான் வாழ்வு அமைய வேண்டும் போலத் தெரிகிறது. பிறருக்கு வாழ்வது என்று சொன்னால் – பிறருக்கு வாழ்வது என்னும் பழக்கம் விலங்குகளிடம் இல்லை. பிறருக்குப் பயன்படுவது என்ற எண்ணத்தைத் தான் பண்பாடு என்று நெடுங்காலமாகச் சொல்லி மகிழ்கிறோம்.
நவகாளியில் காந்தியடிகள் தங்கியிருந்தபோது, ‘’ நாளை இந்த வழியாகக் காந்தியடிகள் நடந்து போகும்போது கற்றாழை முட்களைப் பரப்பி வைக்கிறோம்’’ என்று சிலர் சொன்னார்கள். உடனே காந்தியடிகள் சொன்னாராம் ‘‘ நாளைக் காலையிலிருந்து காலணியில்லாமல் நடக்கப் போகிறேன்,’’ என்று. பண்பாடு என்பது ஒருவரின் பகையைத் தூளாக்குவது என்பதோடு, பிறருக்கெனவே தன்னை இழப்பதாகவும் அமைந்துவிடுகிறது. எனவே, வாழ்வு என்பது பிறர் நலத்தை வளர்த்துக் கொடுப்பது என்பதனையும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்று சொல்கிற கருத்தினையும், சுதர்மம் என்று சொல்வதையும், கடமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வது என்ற வகையில் உள்ளுணர்வையும் அழகுபடக் குறித்திருப்பதை இந்தியப் பண்பாட்டில் காணமுடிகிறது. இந்தப் பண்பாட்டைச் சொல்லளவுக்கு நாம் பேசமுடிகிறது. இலக்கிய அளவில் காணமுடிகிறது. வாழ்க்கையின் இயல்பில் ஒழுங்குகளை எப்படியெல்லாம் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று கூடக் காணலாம். வினாக் கேட்பது என்பது இப்பொழுது வளர்ந்துள்ள நல்ல நாகரிகம். ஆனால், தந்தை தாய் உறவினர்கள் இவர்களோடு உடனிருந்தாலும் அறிவாற்றல் உடையவருக்கே பெருமிதம் உண்டு என்றாலும், தாயையும் தந்தையையும் பணிந்து போற்றுவது என்ற கடமையை இப்போது பல நாடுகளில் நம்மால் காண முடிவதில்லை. அது பெரிய குற்றமா என்று கூடக் கேட்பார்கள். தளர்ந்து முதிர்ந்தவர்கள், யாருக்கும் பயன்படாத நிலையில் வாழ்க்கையில் இப்போது மூத்து இருக்கிறார்கள் என்னும்போது, நமது நாட்டில் நெடுங்காலமாக இந்த முதுமையை நினைவூட்டியிருக்கிறார்கள். தந்தையினுடைய பெயரைப் பெயரனுக்கு வைக்கிறோம். தாயினுடைய பெயரை மகளுடைய மகளுக்கு வைக்கிறோம். இந்தத் தாயும் தந்தையும் ஐம்பது அறுபது ஆண்டுகள் முதிர்ந்த பிறகு யாருக்கும் பயன்படுவதில்லை. அப்படிப் பயன்படுவதில்லை என்றாலும் எந்தப்பயனையும் கருதாது அவர்களைப் போற்றுகிற வழக்கம் என்பது பெற்றோர் வழிபாடு என்ற வகையில் நாம் இங்கே எண்ணிப் பார்க்க முடிகிறது. இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், தந்தைக்குக் கடமை இருக்கிறது. மகனுக்கும் கடமை இருக்கிறது. ஆனால், மகனுடைய கடமை தந்தைக்குப் புகழ் வளர்த்துக் காட்ட வேண்டும் என்ற அளவிலே நின்றார்களே தவிர மகன் முதிர்ந்த நிலையில் தந்தையைப் போற்றவேண்டுமென்று குறிப்பிடவில்லை; என்றாலும் கூடத் தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி என்று சொன்ன பிறகு தாய்தந்தையரைப் போற்றும் கடமை மூத்தவர்களைப் போற்றுவது என்ற வழக்கத்தினை நாம் வழிவழியாகக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழும் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று கருதுகிறோம். எனக்குத் தெரிந்து வேறு எந்த நாட்டிலும் ஒருவன் ஒருத்தி என்பதை மிகப் பெரிதாக வலியுறுத்தவில்லை. நம்முடைய நாட்டிலே கூடப் பலரை மணந்து கொள்கிற வழக்கமுண்டு. பலரை மணந்துகொள்ளும் வாழ்க்கை இருந்தாலும் கூட, ஒருவன் ஒருத்தி என்று வாழ்கிற வாழ்க்கை என்பதுதான் உயிரும் உடம்பும் போல இணைந்த வாழ்க்கை. திருமணத்தின்போது எழுதிக்கொடுக்கின்ற எந்த மொழியினுடைய ஆவணத்திலும் இதுதானே இருக்கின்றது. ஒரு உடம்பில் எத்தனை உயிர் இருக்கும், ஓர் உயிர்தானே! சூழலுக்கேற்ப மூன்று மனைவிகள், நான்கு மனைவிகள் என்று இருந்தாலும் கூடத் திருமண வாழ்க்கையை வலியுறுத்திக் காட்டி ஒருவன் ஒருத்தி என்கிற போக்கைப் பெரிதும் பாராட்டுகின்ற மரபு என்பது இந்திய நாடு முழுவதிலும் பண்பாடாகப் பரிமளிக்கிறது எனலாம். பாரதத்தை எடுத்து நாம் பேசினாலும், இராமாயணத்தை எடுத்துச் சொன்னாலும் கூட வாழ்க்கையில் இராமனுடைய வழிமுறை சிறந்து திகழ்கிறது என்பதைக் காட்டுவதற்கு ஒருவன் ஒருத்தியே உயிரும் உடலுமாக அமைந்துள்ளார்கள் என்று சுட்டிக் காட்டுகின்ற வழக்கத்தை நாம் விடுவதில்லை. அதனால் பன்மனைவியர் வழக்கம் இந்திய நாட்டில் எங்கும் இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஒருவனும் ஒருத்தியும் இணைந்து நின்றுதான் அறம் செய்யமுடியுமென்று காட்டும் பண்பாடு நெடுங்காலமாக நம்மிடையே இருந்து வந்திருக்கிறது. இது காதல் வாழ்க்கையில் மட்டுமல்ல; போர் வாழ்க்கையிலும் கூட ஒருவனும் ஒருவனும் எதிர்நின்று போரிடுவதென்ற வழக்கம் தான் பாராட்டத்தக்கதாக இருந்து வந்திருக்கிறது. எனவே முதுகில் குத்துவது போராளிகளுக்கு இழுக்காகும். போரிலும் காதலிலும் எதுவும் சரியென்பது தானே ஆங்கில வழக்கம். ஆனால் போரிலும் காதலிலும் கூட அறப்பாங்கு மிளிர வேண்டும். இல்லறம் போல இன்னொரு அறம் போர் அறம். எதிரே நிற்கின்றவன் தன்னுடைய வாள், வில் முதலிய எல்லாக் கருவிகளையும் கீழே போட்டுவிட்டு நிற்கின்ற போது, பரவாயில்லை, ‘‘இன்று போய் நாளைப் போருக்கு வா’’ என்ற பாங்கு என்பது ஒரு பண்பாட்டின் வெளியீடாகத்தானே தெரிகிறது. எனவே போரிலும் வாழ்க்கையிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்னும் மரபை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலக்கியங்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளன.
ஆனால், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற சில மாற்றங்களை நம்முடைய நாட்டு மக்களால் அப்போது எண்ணிப் பார்க்கமுடியவில்லை. நம்மோடு உடன் பழகி வாழும் விலங்குகளையும் கூட உறவினர்களை அரவணைப்பதுபோல ஒன்றாக வைத்துக்கொண்டு தூய்மை, துப்புரவு முதலியவற்றை அவ்வளவு தூரம் எண்ணிப் பார்க்காமல் கோகுலத்தில் எல்லோரும் வாழ்ந்தார்கள். இன்று நீங்கள் கருதுகிற தூய்மை அல்லது மாசு நீக்கம் என்பதோ, வாழ்க்கையில் எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்து வாழவேண்டுமென்ற போக்கெல்லாம் எண்ணமுடியாமல் ஒரு கூட்டமாக வாழ்ந்துகொண்டு, அந்தக் கூட்டத்தில் மகிழ்ச்சியோடு வாழலாம் என்கிற கருத்தையும் வளர்த்திருக்கிறார்கள்.
நம்முடைய பண்பாடு கல்வியிலும் ஓங்கிய பண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால், நம்முடைய கல்விப்பண்பாடு இலக்கியத்தோடு நின்றது; சமயத்தோடு நின்றது. இலக்கியம், சமயம் இரண்டையும் தாண்டி வீசுகிற காற்றைப் பற்றி, எரிகிற நெருப்பைப் பற்றி, ஓங்கிய மலைகளைப் பற்றியெல்லாம் ஆராய்கிற பொருளாய்வுகள் நமக்கு அன்றைக்கு இந்த அளவுக்கு இல்லை. எனவே மொத்தமான ஒரு கருத்தைத்தான் முன்னோர் எண்ணிச் சொன்னார்கள். இன்றும்கூடச் சிலர் சொல்வார்கள், நம்முடைய நாட்டை இந்திய நாடு என்ற பெயரில் ஒரு வடிவாக்கித் தந்த பெருமை ஆங்கிலேயரைச் சாரும் என்று! ஏனென்றால் ஆங்கிலேயருக்கு முன்னால், நம்முடைய நாட்டில் அங்க, வங்க, கலிங்கம் என்று தொடங்கி 56 நாடுகளின் பெயர்களை அடுக்கிச் சொல்வார்கள். 56 நாடுகள் மட்டுமில்லை, 650 சிற்றரசுகள் இருந்தனவென்றும் சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் துண்டுபட்டிருந்தாலும் கூட, மனத்தளவில் சில நிலைகளில் ஒன்றுபட்டிருந்தார்கள் என்பதைக் காணமுடிகிறது. எனவே இந்திய நாடு என்ற கருத்து ஆங்கிலேயர்கள் தான் நமக்கு அளித்தார்கள் என்பதில்லை. அதற்கு முன்னால் இந்திய நாட்டில் ஒரு கருத்து எப்படி இருந்ததென்றால், வடக்கே காஷ்மீரம் வரை போகிறோம் என்று சொன்னால், அங்கே வணங்குகிற ஒரு தெய்வம் இருப்பதாகக் கருதினார்கள். வடக்கே பத்ரிநாதன் கோயிலும், கிழக்கே சகன்னாதர் கோயிலும், மேற்கே சோமநாதர் கோயிலும், தெற்கே இராமநாதர் கோயிலும் இருந்தன. இந்த நான்கு நாதர்கள் தான் திசைதோறும் இருந்துகொண்டு இந்திய நாட்டுக்கு ஆன்மீக உணர்வு ஊட்டினார்கள் என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு மக்களுக்குச் சமயத்தின் பெயரால் ஒருமைப்பாட்டு உணர்ச்சி எந்நாளும் இருந்திருக்கிறது. வேந்தர்கள் கூட இமயம் வரை சென்று வந்தால்தான் தமக்குப் புகழ் என்று கருதினார்கள். அவ்வாறே இமயத்தில் உள்ளவர்கள் எல்லாம் கீழே குமரி வரை வந்து போனால்தான் தங்கள் வழிபாட்டு நெறி முடிகிறது என்று கருதினார்கள். மேலும் சமய உணர்வு இந்த நாட்டுக்கு இயல்பாகவே இருந்திருக்கிறது. இயல்பாகவே இருந்தது என்பது மட்டுமல்ல, எதற்கும் சமயத்தைத் தமது வாழ்க்கையில் இணைத்துக்கொள்வதென்னும் வழக்கமும் இந்திய நாட்டில்தான் உள்ளது. மற்ற நாட்டு மக்களுக்குச் சமய உணர்வு என்பது ஆராய்ச்சிக்குரிய ஒரு பகுதிதான். அங்கே பாருங்கள்! மொழி கற்றுக்கொடுக்கும்போது A for Apple, B for Ball, C for Cat என்றுதான் கற்றுக்கொடுப்பார்கள். ஆனால், இங்கே கற்றுக் கொடுக்கும்போதே அ. அறம் செய விரும்பு, ஆ. ஆறுவது சினம். இதைப்பார்த்து கால்டுவெல் எழுதினார். They teach philosophy even in the primary classes என்று.
எழுத்திலக்கணத்தில்கூட முதலில் உயிரெழுத்து, இதற்கு அடுத்த எழுத்துக்குப் பெயர் மெய். இது இரண்டும் சேர்ந்தால் உயிர்மெய். உயிர் என்பது தனியாக இயங்கும். மெய் என்பது சட்டையைப் போல் இருக்கும். இந்த உயிர், மெய்க்குள்ளே நுழையும். பிடிக்கவில்லையென்றால் போய்விடும். எழுத்துக்கு இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்களே! உயிர், உயிர்மெய் என்றெல்லாம் தத்துவ அடிப்படைகள் அமைத்திருப்பதை அனைவரும் வியக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் `இராமன் வருகிறான்` என்று சொன்னால் நிகழ்காலம், வந்தான் என்று சொன்னால் இறந்த காலம், வருவான் என்று சொன்னால் எதிர்காலம். எனவே இந்த வினைச்சொல் எப்படியாவது காலத்தைக் காட்டிவிடும். வந்தான், போனான், போவான் என்று காணலாம். இதை ஒரு நூற்பாவாக எப்படி எழுதியிருக்கிறார்கள் என்றால், ‘’வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலை காலமொடு தோன்றும்.’’ இது வெறும் எழுத்திலக்கணமா? இதில் என்ன இருக்கிறது? எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் எளியவனாக இருந்தாலும் அவனை விடாமல் உரிய காலத்தில் வினை வளைத்துக்கொள்ளும். இது முதல் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும் பாடம்! வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது; யாரிடத்திலும் அது வேற்றுமை பாராட்டாது; அரசனாகட்டும், ஆண்டியாகட்டும் வினைக்குத் தொழில் என்னவென்றால் உரிய காலத்தில் வந்து நிற்பதே. வந்தான், வருகிறான் என்றால் அதில் காலக்குறிப்பு இருந்தே தீரும். இப்படிச் சின்னஞ்சிறிய இலக்கணத்தில் கூட வாழ்க்கையைப் பற்றிய உவமைகளை நாம் ஆழ்ந்து எண்ணியாக வேண்டும் என்ற ஒரு பண்பு நமது பண்பாட்டில் அடங்கியிருக்கிறது. இது நல்லதா, கெடுதலா என்பது வேறு! ஆனால் வாழ்க்கையில் இந்தப் பண்பாடு ஊறியுள்ளது. கடமையைச் செய்வதைத் தடுப்பதற்கோ ஊக்கத்தோடு முயல்பவரைத் தடுப்பதற்கோ இந்தக் கருத்துக்கள் இந்திய நாட்டில் பயன்படுத்தப்படவில்லை.
ஆல்பிரட் சுவிட்சர் Alfred Switzer போன்றவர்கள் எல்லாம் The Development of Indian Thought என்று எழுதியதில் வாழ்க்கை என்பதைப்பற்றி நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றவர்கள் இந்தியர்கள், எனவே வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் அவர்களுக்குச் செல்வம் தேடுவதிலோ, கடமையைத் தொடர்ந்து செய்வதிலோஆர்வம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆனால், இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பார்க்கும்போது, அவர்களுக்குக் கடமை செய்கிற ஊக்கமும், செல்வத்தைத் தேடும் முயற்சியும், கல்வியைத் தேடும் முயற்சியும் இருந்து வந்ததால்தான், ஒருபக்கத்தில் நம்பிக்கை இல்லை என்ற மனப்போக்கு இருந்தாலும் கூட, அதையும் மீறிச் சென்று உழைக்கலாம் என்ற கருத்தையும் வளர்த்திருக்கிறார்கள். ஊழையும் உப்பக்கம் காண்பர் என்ற திருக்குறள் நாம் அனைவரும்அறிந்தது தானே!
நண்பர்களே! நான் ஒன்று சொல்லி முடிக்கலாமென்று நினைக்கிறேன். கல்வியில், வாழ்க்கையில், ஒழுகலாற்றில், நடைமுறையில், இல்லறத்தில் என்று எல்லா வகையிலும் வாழ்க்கையைப் பற்றி வகையறிந்த நமது நாட்டில் துறவிகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய துறவு என்பது மனைவியைத் துறந்து போவது அல்ல; மக்களைத் துறந்து போவது அல்ல; மக்களைத் துறந்து போவது புத்தருக்கு வேண்டுமென்றால் பொருத்தமாயிருக்கும்; நமக்கு அது பொருந்துவதில்லை. மனைவியை, மக்களை, அரசைத் துறப்பதல்ல துறவு! ஒரு குறிக்கோளுக்காக எதையாவது ஒன்றைத் துறப்பது – கடைப்பிடிக்கவேண்டிய ஒரு ஒழுக்கத்திற்காகத் துறப்பது என்று கருதினார்கள். வங்காள நாட்டு இளைஞர்கள் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டபோது, நாட்டு விடுதலைக்குப் பிறகு தான் திருமணம் செய்துகொள்வது என்று நாற்பது பேர் சூளுரை எடுத்தார்களாம், அதனால்தான் அமைச்சர்கள் பலர் திருமணமாகாதவர்களாக அமைந்திருந்தார்கள் என்று கூறுவர். `ஒழுக்கத்து நீத்தார் பெருமை` என்பதற்கே ஒழுக்கத்துக்காக – ஒரு குறிக்கோளுக்காக நீத்தவர்கள் என்று பொருள்.
தன்னுடைய அண்ணனுக்கு அரசு வரவேண்டுமென்பதற்காக நீத்த உறவு இளங்கோவடிகளின் துறவு! ஒரு கொள்கைக்காக, நாட்டுக்காக, மொழிக்காக எனக்குத் திருமணம் வேண்டாம் என்று மேற்கொள்வது துறவு. எனவே இந்திய நாட்டுத் துறவு என்பது ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்தவும், ஒரு கொள்கையை விடாப்பிடியாகப் பரப்பவும், ஒரு நோக்கத்தை உலகத்திற்கெல்லாம் வழங்கவும் மேற்கொள்வது தானே தவிரக் கோபித்துப் போவதோ, குடும்பத்தைவிட்டுப் போவதோ, குழந்தைகளை மறுப்பதோ துறவு ஆகாது. இப்படியெல்லாம் நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் ஒன்றை நினைவிற்கொள்ளலாம். கோயில்கள் எழுப்புவதில் மக்களுக்குப் பெரிய ஆர்வம் இருந்தது. நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 48,000 கோயில்கள் உள்ளன. நான் சொல்வது ஏறத்தாழ அறநிலையத் துறையின் கணக்கு. எப்படி இந்தக் கணக்கு தெரிந்ததோ! பாரதியார் பாடும்போது நாற்பதாயிரம் கோயிலிலே சொல்லுவேன் என்று பாடியிருக்கிறார். கோயில்கள் அமைப்பதில் வேந்தர்களுக்குத் தனியார்வம் இருந்தது. இந்த இந்தியப் பண்பாட்டிலும் கூடக் கோயில் பண்பாடு எப்படித் தனியாக வளர்ந்தது என்பதற்கு ஒரு சான்று காணலாம். மைசூருக்குப் போகிறோம். மன்னர் அரண்மனை இருக்கிறது – காசிக்குப் போகிறோம், அங்கே பவநகர் அரண்மனை, மேவார் அரண்மனை, பீஜப்பூர் அரண்மனை என்று அரண்மனைகள் பல இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரண்மனைகளே இல்லை! ஏன் இல்லை? இராசராசன் தன்னுடைய அரண்மனையைக் கட்டிக்கொள்ளவில்லை, குலோத்துங்கன் தன்னுடைய அரண்மனையைக் கட்டிக்கொள்ளவில்லை. இது எதைக் காட்டுகிறதென்றால், தன்னைவிடத் தனக்குப் பெரிய தலைவனுக்குக் கோயில் கட்டுவதுதான் வழக்கமாக இருந்தது. தவிர அந்தக் கோயிலில் வேண்டுமானால், தாம் போய் வாழலாம் என்று நினைத்தார்கள். தனக்கு வாழ்வு முடிந்த பின்பும் அந்தக் கோயில் நிற்கும் என்று கருதித் தம்மை ஆட்படுத்திக்கொண்டிருந்தார்கள். இதை நாம் எங்கும் காண முடியவில்லை. கோச்செங்கணான் என்ற வேந்தன் மட்டும் 70 கோயில்களைக் கட்டியிருக்கிறான். `எண்டோள் ஈசருக்கு எழுபது மாடம் அமைத்தோன்` என்பார்கள். இந்தக் கோயில் கட்டுவதில் They revelled in the construction of Temples, the great temple builders என பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைப் புகழ்கிறது. இதில் இன்னும் கூட ஒரு வேடிக்கை. வேந்தர்கள் மட்டும் தானா கட்டினார்கள் என்று பார்த்தால் மக்கள் எல்லோரும் அதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வேந்தன் இராசராசன், அவன் கட்டியிருக்கிறான், அதில் புதுமை ஏது? குருச்சேவ் இங்கு வந்தபொழுது அவருக்குத் தாஜ்மகாலைக் காட்டியபோது, இந்த மாளிகையினுடைய பளிங்குச் சுவர்களின் வெண்மை எனக்குத் தெரியவில்லை, உழைப்பாளிகளுடைய சிந்திய இரத்தம் தான் தெரிந்தது என்று சொன்னார். ஆனால், அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?
இராசராசன் கோயிலைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்கள், மன்னன் தானே கட்டுகிறான் என்று எண்ண முடியாதபடி ஒரு கதை. கோயிற் சிற்பிகளெல்லாம் பகல் நேரத்தில் வெயில் தாங்காமல் வெற்றிலை பாக்கு மென்றபடி ஒரு கிழவியின் குடிசை ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்களாம். அவள் தனியான கிழவி. உற்றார்களோ, சுற்றத்தவர்களோ யாரும் இல்லை. அவர்கள் சொன்னார்களாம், ஏய் கிழவி! இந்தக் கோயிலுக்கு நீ ஏதாவது கொடு என்று. அந்தக் கிழவி சொன்னாளாம் `வருகிறவர்களுக்கு நீர்மோர் கொடுக்கிறேன், வேறு என்னாலே என்ன கொடுக்கமுடியும், வேண்டுமென்றால், இந்த முற்றத்திலிருக்கிற கல்லை எடுத்துக்கொள்ளுங்கள்` என்றாளாம். அந்தக் கிழவி கொடுத்த கல்லை எடுத்துக்கொண்டு போய்ப் பெரிய கோயிலின் உச்சியில் வைத்துவிட்டார்கள். அதை வைத்ததில்கூட ஒன்றும் பெருமை இல்லை. அதற்குப் பின்னால் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். மறுநாள் இராசராசன் தூங்கும்போது கனவில் ஒரு குரல் கேட்டதாம் `கிழவியின் நிழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.` என்று பெருவுடையார் பேசினாராம். எனவே ஏழை எளியவர்கள் என்று கூடப் பாராமல் இந்தப் பொதுப்பணியில் தங்களை அவனிடமே ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். என்பதால், இந்தக் கோயிலைக் கட்டுவதன் மூலம் கற்சிலை, ஆடற்கலை, ஓவியக்கலை, கல்விக்கலை என்று எல்லாக் கலைகளையும் கோயிலில் வளர்த்துக் காட்ட முடியும் என்று கருதியிருக்கிறார்கள். எனவே பெருமக்களே, நான் திட்டமிட்ட ஒரு வரையறை இல்லாமல், திக்குத்தெரியாமல், இந்தியப் பண்பாடு என்பதை எண்ணிப் பார்த்தால் இப்படியெல்லாம் கருதலாம் என்று கூறியிருக்கின்றேன். இந்தக் கருத்துக்கள் உங்களுக்கும் எனக்கும் தெரியாமல் கூட நம்முடைய உணர்வில் உதிரத்தில் கலந்திருக்கின்றன. பொறுத்துப் போவதென்பதும் பெரியவர்களை மதித்துப் போவதென்பதும், வணங்கி வாழ்வதென்பதும், இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கலாமென்பதும் சிறந்த பண்பாட்டுக் கூறுகளாக நமது நாட்டில் மிளிர்கின்றன.இந்தப் பண்பாடுகள் இன்று நேற்றுப் பிறந்தவையல்ல; எண்ணிப்பார்க்க முடியாத காலத்திலிருந்து இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒற்றுமை என்பதும் ஒருமை என்பதும் வளர்ந்துள்ளன. எனினும் சில நேரங்களில் என் மதம், உன் மதம் என்றெல்லாம் மதப்போராட்டம் நடக்கும்போது மனம் வருந்துகிறது. என்றாலும் கூட இந்தப் போராட்டங்களெல்லாம் நீர் கிழித்துப் பிரிந்து போவதில்லை என்பது போல உறவாகப் பின்னால் இணைந்துகொள்ள வாய்ப்பை வளர்க்கவேண்டும்.
தேசிங்கு மன்னனுடைய நண்பன் மகமத்கான். இந்த மகமத்கானுக்குத் திருமணம் நடந்துகொண்டிருக்கும்போது தேசிங்கு மன்னன் போர்க்களத்தில் இருக்கிறான் என்று ஓலை வருகிறது. உடனே திருமண மாலையைக் கீழே எறிந்துவிட்டுப் போருக்காகப் போனான். அப்படிப்பட்ட நட்பு உணர்வு இந்த நாட்டில் இரு சமயத்தாரிடையே இருந்தது. எனவே நம்முடைய ஒருமைப்பாட்டு உணர்ச்சி என்பது மறைந்து ஓடுகிறாறு போல் இருக்கின்றது. மேலும் மேலும் அதை வளப்படுத்துவதும் நலப்படுத்துவதும் இன்றைய காலத்திற்குரிய வகையில் சிலவற்றை மாற்றிக்கொள்வதென்றால் மாற்றிக்கொள்வதும் நமக்கு மாபெரும் கடமையாக அமைகிறது என்று கூறி இந்தியப் பண்பாட்டை விரிவாக நாம் எண்ணிப்பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகச் சிறந்த கலைக் கருவூலங்களை, காவியங்களை வெளியிட்ட பெருமை பாரதிய வித்யா பவனைச் சாரும். பெருந்தகை கே.எம். முன்சி அவர்கள், யார் நூல் எழுதவில்லையென்றாலும் நானே எழுதுகிறேன் என்று பல அரும்பணிகளைத் தொடங்கினார். அவ்வாறு அமைந்த களஞ்சியமாக India`s Heritage என ஒரு தொகுப்பு மடலங்களை வெளியிட்டுக் காட்டினார்கள். உன்னதப் பணியை, பண்பாட்டு நலன்களை ஓம்பும் உயரிய பணியைத் தொடர்ந்து செய்கின்ற உங்கள் நிறுவனம் வாழ்க! உங்கள் பணிகள் வெல்க! என்று கூறி அமர்கிறேன். வணக்கம்.

Add a Comment