POST: 2015-09-01T11:17:28+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-14`

முதன்முதலாகத் தேவாரப் பதிகங்களை அச்சியற்றியோர் எந்த மூலச்சுவடியை ஆதாரமாகக் கொண்டனர் என்றறிய முடியவில்லை.

ஒரு பதிப்பைப் பார்த்து மற்றொரு பதிப்பு என்ற முறையில் அடுக்கடுக்காக அச்சிட்டு வந்தனரே தவிர, திருமுறை கண்ட புராணத்திற்கு ஏற்ற பண்களுக்குரிய கட்டளைகள் நெறிப்பட அமைந்தவையா என ஆராய முடியவில்லை. இந்நிலையில் இத்தகைய முயற்சிகளை இப்பண்ணாராய்ச்சி மாநாட்டில் நாம் ஊக்குவித்தல் வேண்டும்.

சமயத்துறையில் இசை – இலக்கியம் மட்டுமின்றி சமயத்துறையிலும் தமிழர்கள் இசைக்கலையைப் பெரிதும் போற்றி வளர்த்தனர். இறைவனை ஏழிசையாகவும் இசையின் பயனாகவும் கண்டு வழிபட்டனர். தமிழோடு இசை கேட்கும் பெருவிருப்பினனாக இறைவன் விளங்குகின்றான் என்றே தேவார நால்வர்கள் பண்சுமந்த பாடல்களைப் பாடிப் பரமனை மகிழ்வித்ததோடு பத்திமையுணர்வையும் மக்களிடையே பரப்பினர்.

‘‘ஏழிசையாய் இசைப் பயனாய் என்னுடைய தோழனுமாய்’’
(7-51-10)
‘‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’’
(7- 62- 8)
‘‘தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்’’
(1 – 6)
ஆகிய தொடர்கள் இறைவனை இசையோடு ஏத்தி வணங்கும் பத்திப் பாங்கினை உணர்த்துகின்றன. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஆனாய நாயனார் ஏழிசையைக் குழலில் இசைத்தார். இசையால் இறைவனை ஏத்துதலாற் பெறும் பயனை ‘‘அளப்பில் கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே,’’ என்றும் உரைத்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *