தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-22
தண்ணார் தமிழ் வளர்க்கும் தஞ்சையில் தோன்றித் திகழும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இயலாராய்ச்சியோடு இசைநலத்தையும் ஆராயும் நோக்கில் தமிழிசைத் துறை என்றே ஒரு தனித்துறையை நடத்துகிறது. தமிழிசைக் கல்லூரியைப் பல்கலைக்கழக வாகைப்புலத்தில் தனியாக நடத்த வேண்டுமென்பதும் எங்கள் நோக்கம். பல்கலைக்கழகத்தில், இசைக்கலையில் தோய்வும் ஆய்வும் நிரம்பிய அறிஞர் பெருமக்கள் ` ஏழிசைச் சூழல்` புகுந்து ஆய்வுப் பனுவல்களை வழங்கியுள்ளனர்.
‘‘நுண்ணலகுகளும் இராகங்களும் பஞ்சமரபில் இசை மரபு, பழந்தமிழர் ஆடலில் இசை’’ முதலிய அரிய நூல்களை வெளியிட்டுள்ளனர். வாய் மணக்கப் பாடி மகிழ்விப்பதுபோல, வளங்கெழுமிய தமிழிசையின் ஒழுகலாறுகளை வரைந்தெழுதும் திறமும் வேண்டற்பாலது என்று நான் தொடக்கத்தில் கூறினேன். அவ்வகையில் ஆய்வாளர்கள் எழுதிய அருங்குறிப்புகள் பல எங்கள் ‘‘இலம்பாட்டால்’’ அச்சுவடிவம் காணாது தேங்கியுள்ளன.
தமிழிசைச் சங்கம் இத்தகைய சுவடிகளை வெளியிட முன்வருமானால் தமிழ்ப் பல்கலைக்கழகமும் மகிழ்ந்து வழங்கும்.
ஆண்டுதோறும் பண்ணாராய்ச்சிக் கருத்தரங்கு ஒன்றைச் `சதய` நாளையொட்டித் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்துவது பற்றி நம் பெருமைக்குரிய தமிழிசைச் சங்கத் தலைவர் அவர்கள் பரிவோடு கருத வேண்டுகிறேன்.
தமிழிசை மேம்பாட்டினையும் தமிழிசைப் பண்பாட்டினையும் வளர்க்க உறுதி பூண்டுள்ள தமிழிசைச் சங்கத்தை மனங்கனிந்து வாழ்த்துகிறேன்.
தேமதுரத் தமிழிசையாகத் திருமுறை நல்லிசை நாடெல்லாம் பரவி ஓங்குமாக!
எந்தையார் மீது கொண்ட பரிவாலும் என்னை அழைத்து இப்பெரு வாய்ப்பு வழங்கிய பெருமக்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!
*

Add a Comment