அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -1
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
– * –
ஒரு நாட்டின் மனித மேம்பாட்டின் தகுதி அந்நாட்டில் குழந்தை நல முன்னேற்ற நிலையோடு பிணைந்ததாகும்.
இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இன்றுவரை விரைந்து வளர்ந்துவரும் குழந்தை நல மருத்துவம் குழந்தைகளின் நல்வாழ்வுக்குப் பலவழிகளில் சிறப்பாகச் செயற்படுகிறது.
கி.பி. இரண்டாயிரத்துக்குள் அனைவருக்கும் நலவாழ்வு என்ற
உயரிய குறிக்கோளை எய்த எல்லா மருத்துவத் துறைகளும் நாட்டு மக்களின் நலவாழ்வுக்காக ஆர்வத்துடன் முனைந்து செயற்படுகின்றன.
ஒரு நாட்டின் நலவாழ்வை அறிந்துகொள்வதற்கு அந்நாட்டில் மழலையர் இறப்பு விகிதத்தை(Infant mortality rate) அளவிட்டு அறிய வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் இடையில் ஆயிரம் குழந்தைகளுக்கு இருநூறிலிருந்து இருநூற்றைம்பது குழந்தைகள் வரை ஓராண்டிற்குள் மடிந்தனர்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கு ஐம்பத்துநான்காக இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த இறப்பின் காரணங்களை ஆராய்ந்தால் சத்துணவற்ற குறைந்த உணவுண்ணுதல் (Malnutrition), வயிற்றுப்போக்கு, சளி, தொற்றுநோய்கள் போன்ற தடுக்கக்கூடிய நோய்கள் தாம் அதிகமாக நேர்கின்றன. பிறந்த குழந்தைகளில் பலர் குறைமாதக் குழந்தைகளாகவும் எடை குறைந்த மெலிந்த குழந்தைகளாகப் பிறப்பதும் ஒரு காரணமாகும்.

Add a Comment